3-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

Image Courtesy : AFP
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
ராஜ்கோட்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணையின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் 5 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அரை சதம் கடந்த பென் டக்கெட் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 24 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர்.
அதே சமயம், இந்திய பவுலர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இறுதியாக இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.






