3-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?


3-வது டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பின் இந்திய கேப்டன் கூறியது என்ன..?
x

image courtesy:BCCI

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்களாக சாம்சன், குல்தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “ இறுதியாக டாஸ் வென்றதில் மகிழ்ச்சி. நாங்கள் 19 அல்லது 20 டாஸ்களை தொடர்ச்சியாக தோற்றிருந்தோம் என்று நினைக்கிறேன். அதனால் அந்த தொடர்ச்சியை உடைக்க முடிந்தது சிறப்பானது. இன்று டாஸ் வென்றது முக்கியமானது.

எங்களது அணி சிறப்பாக செயல்பட்டது என்பதில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். மாற்றங்கள் நிச்சயமாக நன்றாக செயல்படுகின்றன. அந்த வீரர்கள் மிகவும் கடினமாக பயிற்சி செய்து தங்கள் வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். வாஷி (வாஷிங்டன் சுந்தர்) சிறந்த தன்மையை காட்டினார். ஜிதேஷ் நன்றாக பங்களித்தார். அர்ஷ்தீப் சிறப்பாக இருந்தார்.

இன்று இரவு சரியான கூட்டணி என்று தோன்றியது. பேட்டிங்கில் சுப்மன் மற்றும் அபிஷேக் போலவே பந்துவீச்சில் பும்ரா - அர்ஷ்தீப் சிறந்த ஜோடி. பும்ரா அமைதியாக தனது வேலையை செய்கிறார். மேலும் அர்ஷ்தீப் மறுமுனையில் இருந்து அதனை பயன்படுத்திக் கொள்கிறார். ஒன்றாக, அவர்கள் உண்மையில் ஆபத்தான கூட்டணி.

தொடர் 1-1 என்ற கணக்கில் அழகாக அமைந்துள்ளது. நாங்கள் ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறோம். எனவே இது ஒரு புதிய சவாலாக இருக்கும். ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் மற்றும் அவர்கள் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள்” என்று கூறினார்.

1 More update

Next Story