2-வது டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து


2-வது டெஸ்ட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து
x
தினத்தந்தி 8 Dec 2024 10:29 AM IST (Updated: 8 Dec 2024 12:29 PM IST)
t-max-icont-min-icon

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெலிங்டன்

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் 125 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜாக் கிராலி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், பென் டக்கெட் - ஜேக்கப் பெத்தேல் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் சதத்தை நெருங்கிய தருவாயில் பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஹாரி புரூக் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி மற்றும் மேட் ஹென்ரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து வெற்றி பெற 582 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 49 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாம் பிளண்டெல் மட்டும் தனி ஆளாக போராடினாலும், மறுமுனையில் அவருக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. சிறிது நேரம் தாக்குப்பிடித்த டேரில் மிட்செல் 32 ரன்களிலும், நாதன் சுமித் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய டாம் பிளண்டெல் 115 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.

முடிவில் 54.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஷோயப் பஷிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



Next Story