இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் சதம் - முதல் நாளில் இந்தியா 310 ரன்கள் சேர்ப்பு


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சுப்மன் கில் சதம் - முதல் நாளில் இந்தியா 310 ரன்கள் சேர்ப்பு
x

image courtesy: BCCI twitter

இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது.

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமாக ஆடிய இந்த ஜோடி 9-வது ஓவரில் பிரிந்தது. லோகேஷ் ராகுல் (2 ரன், 26 பந்து), கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை தடுத்து ஆடிய போது அது பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பையும் பதம் பார்த்தது.

2-வது விக்கெட்டுக்கு கருண் நாயர் இறங்கினார். அவரும், ஜெய்ஸ்வாலும் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். வெயில் நன்கு அடித்ததால் ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்ததாகவே தென்பட்டது. நன்றாக ஆடிக் கொண்டிருந்த இந்த ஜோடி மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பாக பிரிந்தது.

ஸ்கோர் 95 ஆக உயர்ந்தபோது, கருண் நாயர் (31 ரன்கள், 50 பந்து, 5 பவுண்டரி) பிரைடன் கார்ஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் சுப்மன் கில் வந்தார். மறுமுனையில் சதத்தை நோக்கி முன்னேறிய ஜெய்ஸ்வால் (87 ரன்கள், 107 பந்து, 13 பவுண்டரி) வைடாக சென்ற பந்தை அடிக்க முற்பட்டு விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்திடம் சிக்கினார்.

இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கால்பதித்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து பிரமாதப்படுத்திய பண்ட் இந்த முறை அதிக நேரம் நிலைக்கவில்லை. அவர் 25 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் ஓவரில் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். தொடர்ந்து இறங்கிய நிதிஷ்குமார் ரெட்டி (1 ரன்) பந்து வெளியே போவதாக நினைத்து பேட்டை உயர்த்த, போல்டாகி மிரண்டு போனார். இதனால் இந்தியா தடுமாற்றத்திற்குள்ளானது.

இந்த சூழலில் 6-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டதுடன் அணியை திடமான நிலைக்கு நகர்த்தினர். அபாரமாக ஆடிய சுப்மன் கில் டெஸ்டில் தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார். முதலாவது டெஸ்டிலும் அவர் சதம் அடித்தது நினைவிருக்கலாம்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும் (216 பந்து, 12 பவுண்டரி), ஜடேஜா 41 ரன்களுடனும் (67 பந்து, 5 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

1 More update

Next Story