2-வது டெஸ்ட்: 3 வீரர்கள் சதம்... முதல் இன்னிங்சில் நியூசிலாந்து வலுவான முன்னிலை


2-வது டெஸ்ட்: 3 வீரர்கள் சதம்... முதல் இன்னிங்சில் நியூசிலாந்து வலுவான முன்னிலை
x

image courtesy:ICC

ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

புலவாயோ,

நியூசிலாந்து- ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே, நியூசிலாந்தின் வேகக்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 48.5 ஓவர்களில் 125 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட்ஹென்றி 5 விக்கெட்டும், அறிமுக வீரர் ஜக்காரி போக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. வில் யங் 74 ரன்னில் அவுட்டானார். டிவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கப் டப்பி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகையை சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து தரப்பில் டப்பி 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கான்வே உடன் ஹென்றி நிக்கோல்ஸ் கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு வலுசேர்த்தனர். இருவரும் சதம் அடித்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 153 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடினார். இதனால் நியூசிலாந்து இமாலய ரன் குவிப்பை நோக்கி பயணித்தது. 2-வது நாள் முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்துள்ளது. ஹென்றி நிக்கோல்ஸ் 150 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 165 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதன் மூலம் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் இதுவரை 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story