2-வது டி20: இந்தியாவை வீழ்த்திய பின் ஆஸி.கேப்டன் கூறியது என்ன..?


2-வது டி20: இந்தியாவை வீழ்த்திய பின் ஆஸி.கேப்டன் கூறியது என்ன..?
x

image courtesy:PTI

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹேசில்வுட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பின் ஆஸ்திரேலிய கேப்டன் மார்ஷ் அளித்த பேட்டியில், “டாசில் வெற்றி பெற்றது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. மைதானத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தது. ஹேசில்வுட் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். மைதானத்தில் கொஞ்சம் உதவி இருக்கும்போது அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். நாங்கள் அணியாக மிகச்சிறப்பாக பந்துவீசினோம் என்று நினைக்கிறேன். தொடர்ச்சியான இடைவெளிகளில் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் எளிதில் வெற்றிபெற முடிந்தது.

எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஒரு அணியை உருவாக்க முயற்சித்து வருகிறோம். தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதோடு இளம் வீரர்களும் வருவதற்காக காத்திருக்கின்றனர். நல்ல திறமையான வீரர்களுடன் நாங்கள் பயணிக்க உள்ளோம்” என்று கூறினார்.

1 More update

Next Story