2வது ஒருநாள் போட்டி; லிவிங்ஸ்டன் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இங்கிலாந்து
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி பார்படாஸில் நடைபெறுகிறது.
ஆண்டிகுவா,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 328 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 117 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜான் டர்னர், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 329 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து 47.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 329 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய லியாம் லிவிங்ஸ்டன் சதம் (124 ரன்கள்) அடித்து அசத்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ போர்டு 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி வரும் 6ம் தேதி பார்படாஸில் நடைபெறுகிறது.