2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி


2வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
x
தினத்தந்தி 19 Jun 2024 3:39 PM GMT (Updated: 20 Jun 2024 4:51 AM GMT)

இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது

பெங்களூரு,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது . இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் ஷபாலி வர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தயாளன் ஹேமலதா 24 ரன்களில் வெளியேறினார்.தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா , ஹர்மன்பிரீத் கவுர் இருவரும் நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தனர்.பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டு அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 136 ரன்களும் , ஹர்மன்பிரீத் கவுர் 103 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து 326 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது.

தொடக்கத்தில் டாஸ்மின் பிரிட்ஸ் 5 ரன்கள் , அன்னேக் போஷ் 18 ரன்கள் , சுனே லுஸ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் அணியின் கேப்டன் லாரா வால்வர்ட் பொறுப்புடன் விளையாடினார். லாரா வால்வர்ட், மரிசன் கேப் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.தொடர்ந்து மரிசன் கேப் 114 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து டி கிளர்க் 28 ரன்களுக்கு வெளியேறினார்.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை இந்திய அணியின் பூஜா வஸ்த்ரகர் வீசினார். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணியால் 6 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்கா அணியில் லாரா வால்வர்ட் 135 ரன்கள் எடுத்தார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2--0 என இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.


Next Story