2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து


2-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
x

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.

கட்டாக்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் 2 மாற்றங்களாக ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக விராட் கோலி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அறிமுக வீரரான வருண் சக்ரவர்த்தியின் சுழலில் சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன டக்கெட் அதிரடியாக விளையாடி அரைசதத்தை கடந்தார்.

2-வது விக்கெட்டுக்கு அவருடன் கை கோர்த்த ஜோ ரூட் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். டக்கெட் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஹாரி புரூக் (31 ரன்கள்), பட்லர் (34 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் அரைசதத்தை கடந்த ஜோ ரூட் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை சீராக உயர்ந்தது.

இறுதி கட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாட இங்கிலாந்து 300 ரன்களை கடந்தது. 49.5 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து 304 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது . லிவிங்ஸ்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 305 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story