டி20 போட்டி: மழையால் 7 ஓவர்களாக குறைப்பு... பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி


டி20 போட்டி: மழையால் 7 ஓவர்களாக குறைப்பு... பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
x

image courtesy: twitter/@ICC

தினத்தந்தி 14 Nov 2024 12:29 PM (Updated: 14 Nov 2024 12:42 PM)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 43 ரன்கள் அடித்தார்.

பிரிஸ்பேன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதலாவது ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அங்கு கனமழை பெய்தது. அதன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆட்டத்தை தொடங்க நீண்ட நேரம் ஆனதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. அதன்படி இந்த ஆட்டம் 20 ஓவர்களுக்கு பதிலாக 7 ஓவர்களாக மாற்றப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 43 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் அபாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அவசரத்தில் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. 7 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 64 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story