முதலாவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 203 ரன்களில் ஆல் அவுட்


முதலாவது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. பாகிஸ்தான் 203 ரன்களில் ஆல் அவுட்
x

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மெல்போர்ன்,

புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன அப்துல்லா ஷபீக் - சைம் அயூப் இருவரையும் ஸ்டார்க் காலி செய்தார். இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னேற்றினர். இவர்களில் பாபர் அசாம் 37 ரன்களிலும், ரிஸ்வான் 44 ரன்களிலும் ஆட்டமிழக்க பாகிஸ்தான் மீண்டும் சரிவை சந்தித்தது.

இறுதி கட்டத்தில் நசீம் ஷா (40 ரன்கள்) பொறுப்புடன் விளையாட பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது. 46.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பாகிஸ்தான் 203 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஸ்வான் 44 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா 204 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது.


Next Story