'உலகம் சுற்றும் வாலிபன்' 50 ஆண்டு சாதனை


உலகம் சுற்றும் வாலிபன் 50 ஆண்டு சாதனை
x

சினிமா படத்தில் அரசியல் இருக்கும். ஆனால் ஒரு படமே அரசியலான அதிசயம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

1972-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி...

சினிமா, அரசியல் என்று இரட்டை குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய நாள். ஆம்!... அன்றுதான் அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இந்த செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதும் கொந்தளித்த அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் தனிக்கட்சி தொடங்குமாறு அவரிடம் முறையிட்டனர். அதை ஏற்று அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

இதற்கிடையே, எம்.ஜி.ஆரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான 'உலகம் சுற்றும் வாலிபன்' எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று இப்படியொரு திருப்பம் ஏற்பட்டதால் படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடிகள் உண்டானது. ஒரு கட்டத்தில் படத்தின் 'நெகட்டிவ்' முழுவதும் எரிந்துவிட்டதாகவும், இதனால் படம் வெளிவராது என்ற தகவலும் பரவியது. (ஆனால் ஜப்பானில் உள்ள காமகூரா புத்த கோவிலில் எடுக்கப்பட்ட சில காட்சிகளின் 'நெகட்டிவ்' சேதம் அடைந்ததால், அந்த காட்சிகள் மட்டும் சென்னையில் 'செட்' அமைத்து படமாக்கப்பட்டன)

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 1973-ம் ஆண்டு மே 20-ந் தேதி நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மாயத்தேவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்க, வாக்குப்பதிவுக்கு 10 நாட்கள் முன்னதாக. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மே 11-ந் தேதி 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வெளியானது. படப்பெட்டிகள் தியேட்டர்களை சென்றடைய முடியாது என்ற நெருக்கடியான சூழல் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து படம் வெளியானதால், தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது.

அரசியல் கொந்தளிப்பான சூழ்நிலையில் 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளியான போதிலும், அதில் 'பஞ்ச் டயலாக்' எதுவும் கிடையாது. ஏனெனில் படம் ஆரம்பிக்கப்பட்டபோது தி.மு.க.வில் இருந்த எம்.ஜி.ஆர்., படம் வெளியீட்டுக்கு தயாரான காலகட்டத்தில்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

படத்தில் 'பஞ்ச் டயலாக்' இல்லாவிட்டால் என்ன?... ஒரு 'பஞ்ச் பாடலையே' சேர்த்தார் எம்.ஜி.ஆர். படத்தின் 'டைட்டில் கார்டு' போடும் போது சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலில் கணீரென ஒலித்த "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்" என்ற அந்த பாடல், அப்போதைய அரசியல் சூழ்நிலையை மக்களுக்கு படம்பிடித்து காட்டியது. "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்ற வரியை கேட்டு உணர்ச்சிப்பிழம்பாக மாறிய ரசிகர்கள் எழுப்பிய கரவொலியும், விசில் சத்தமும் தியேட்டரை அதிரச் செய்தது.

சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 'அட்வான்ஸ் புக்கிங்'கிலேயே மாதக்கணக்கில் படம் ஓடியது. மதுரை, நெல்லை போன்ற ஊர்களுக்கு படம் பார்க்க அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வந்தனர். இதனால் தியேட்டர்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்களில் வெளியானது. தேவி பாரடைசுக்கு ரசிகர்கள் சாரை சாரையாக படையெடுத்ததால் அண்ணா சாலை திக்குமுக்காடியது.

மதுரை மீனாட்சி தியேட்டரில் 217 நாட்கள் ஓடி சாதனை படைத்த உலகம் சுற்றும் வாலிபன் 7 தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது. 25 தியேட்டர்களில் நூறு நாட்களும், 45 தியேட்டர்களில் 75 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. மற்ற தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

அதுவரை தேவி பாரடைஸ் தியேட்டரில் 'மெக்கனாஸ் கோல்டு' என்ற ஆங்கில படம்தான் அதிக நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்து இருந்தது. அந்த சாதனையை 'உலகம் சுற்றும் வாலிபன்' முறியடித்து புதிய வரலாறு படைத்தது. அத்துடன் அதற்கு முன் வெளியான எம்.ஜி.ஆர். படங்கள் நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் 'உலகம் சுற்றும் வாலிபன்' பின்னுக்கு தள்ளி வசூலில் மிகப்பெரிய உச்சத்தை எட்டியது.

இந்த படத்தின் வெற்றியை ஒவ்வொரு ரசிகனும் தனது தனிப்பட்ட வெற்றியாக கருதியதால்தான் இது சாத்தியமானது. இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாக அ.தி.மு.க. கொடியை காட்டினார். அப்போதெல்லாம் படங்களுக்கு சுவரொட்டிகள்தான் முக்கியமான விளம்பரம். 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளியான போது சென்னை நகரில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கான வரி உயர்த்தப்பட்டதால், சுவரொட்டிகள் ஒட்டாமலேயே படம் வெளியானது. வெளிநாட்டில் இருந்து எம்.ஜி.ஆர். 'ஸ்டிக்கர்'களை வரவழைத்து கடைகளிலும், ரிக்ஷாக்களிலும் ஒட்ட ஏற்பாடு செய்தார்.

பல சாகசங்களை நிகழ்த்தித்தான் உலகம் சுற்றும் வாலிபனை திரைக்கு கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். சென்னையில் 'கலர் பிராஸசிங்' செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், 'நெகட்டிவ்'வை ரகசியமாக மும்பைக்கு கொண்டு சென்று 'பிராஸசிங்' செய்து, அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டன. பல தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட தயங்கிய போது, ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை தானே தருவதாக அவர்களுக்கு எம்.ஜி.ஆர் வாக்குறுதி அளித்து படத்தை திரையிட வைத்தார். அவரது ரசிகர்களே தியேட்டர்களுக்கு பாதுகாப்பும் வழங்கினார்கள்.

அன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் அபூர்வம். நாடோடி மன்னனை அடுத்து எம்.ஜி.ஆரின் தயாரிப்பில் 3-வதாகவும், இயக்கத்தில் 2-வது ஆகவும் உருவான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரான இந்த படத்துக்காக சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்று எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு நடத்தினார்.

அதிக இரட்டை வேட படங்களில் நடித்து புகழ்பெற்ற எம்.ஜி.ஆர். 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலும், முருகன் என்ற விஞ்ஞானியாகவும், அவரது தம்பி ராஜூ (ஜெயராஜ்) என்ற சி.பி.சி.ஐ.டி. அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

மின்னலில் வெளியாகும் சக்தியின் ஒரு பகுதியை சேமித்து வைக்கும் நுட்பத்தை கண்டுபிடிக்கும் முருகன், அதை ஹாங்காங்கில் நடைபெறும் விஞ்ஞானிகள் மாநாட்டில் அறிவிக்கிறார். எந்த நேரத்திலும் மூன்றாம் உலக போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதால், மனிதகுலத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன் அந்த ஆராய்ச்சி குறிப்புகளை வெளியிடப்போவது இல்லை என்று கூறுகிறார்.

அப்போது மற்றொரு விஞ்ஞானியான பைரவன் (அசோகன்) அவரது கண்டுபிடிப்பு பொய் என கூற, அதை மறுக்கும் முருகன் தனது கண்டுபிடிப்பை நிரூபித்துக் காட்டுகிறார். பின்னர் முருகன் சில காகிதங்களை கொளுத்திவிட்டு, தனது ஆராய்ச்சி குறிப்புகளை எரித்துவிட்டதாக கூறி மற்ற விஞ்ஞானிகளை நம்பவைக்கிறார். ஆனால் தனது ஆராய்ச்சி பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்ற எண்ணத்தில், அது தொடர்பான குறிப்புகளை ஜப்பானில் ஒரு புத்த கோவிலில் உள்ள பவுத்த குருவிடம் கொடுத்து பாதுகாக்கச் சொல்லி இருக்கிறார்.

இந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளும் வில்லன் பைரவன், ஆராய்ச்சி குறிப்புகளை வெளிநாட்டுக்கு விற்று பணம் சம்பாதிப்பதற்காக முருகனிடம் பேரம் பேசுகிறார். ஆனால் முருகன் அதை ஏற்க மறுத்துவிட்டு, தனது காதலி விமலாவுடன் (மஞ்சுளா) உலக நாடுகளை சுற்றிப்பார்க்க கிளம்புகிறார். பைரவன் அவர்களை பின்தொடர்ந்து செல்ல, வெளிநாடுகளில் இருக்கும் அவரது ஆட்கள் முருகனை ரகசியமாக கண்காணிக்கிறார்கள். முருகன் தனது காதலியுடன் சிங்கப்பூரில் உயரமான ஒரு கட்டிடத்தில் இருக்கும் போது, பைரவன் பிரத்யேக துப்பாக்கியால் சுட, அதனால் கீழே விழும் முருகனுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. விமலாவை பைரவன் தனது கட்டுப்பாட்டில் வைத்து துன்புறுத்துகிறார். இதை அறிந்த ராஜூ தனது அண்ணனை கண்டுபிடித்து மீட்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்கிறார். அண்ணனை கண்டுபிடிப்பதற்காக அவர் எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் செல்கிறார்; யார்-யாரையெல்லாம் சந்திக்கிறார்; பைரவனின் கைக்கு செல்லாமல் ஆராய்ச்சி குறிப்புகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஆராய்ச்சி குறிப்புகள் ஜப்பானில் இருக்கிறது என்ற தகவல் துண்டு துண்டாக பல்வேறு நாடுகளில் இருக்கும் நபர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டு இருப்பதால், கதை மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் என்று பல நாடுகளுக்கும் பயணிக்கிறது.

சாதாரணமான விஞ்ஞான கதைதான் என்றாலும், அதை எளிமையாக சொன்னதால் ரசிகர்கள் படத்துடன் ஐக்கியமானார்கள். எம்.ஜி.ஆர். அடுத்து எந்த நாட்டுக்கு போகிறார்? யாரை சந்திப்பார்? அங்கு என்ன நடக்கப்போகிறது? என்று அவர்களுடைய ஆவலை தூண்டும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒவ்வொரு ரசிகனின் மனதிலும், எம்.ஜி.ஆருடன் சேர்ந்து சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் நாடுகளுக்கு சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வந்த உணர்வை ஏற்படுத்தியது 'உலகம் சுற்றும் வாலிபன்'. இதுதான் இந்த படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

1970-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ந் தேதி வரை ஜப்பானின் ஒசாகா நகரில் 'எக்ஸ்போ-70' என்ற பெயரில் 6 மாதம் உலக பொருட்காட்சி நடைபெற்றது. சில நாட்களில் பொருட்காட்சி முடிவடைய இருந்ததால், மக்கள் வெள்ளம் அலைமோதியது. 8 லட்சம் பேர் திரண்ட இந்த பிரமாண்ட பொருட்காட்சியில் எம்.ஜி.ஆர். மிகத்திறமையாக படப்பிடிப்பை நடத்தினார்.

ஆங்காங்கே பல கேமராக்களை வைத்து அங்குள்ள அரங்குகள், ரோப் கார், டால்பின்களின் விளையாட்டு, கலைஞர்களின் சாகசம் என்று ஒன்றையும் விடாமல் அத்தனையையும் காட்சிகளுடன் இணைத்து படமாக்கினார். எம்.ஜி.ஆர்-மஞ்சுளா, அசோகன், நாகேஷ் ஆகியோர் ஒவ்வொரு இடமாக சென்று ஒருவரை யொருவர் தேடுவது போல் காட்சி அமைத்து பொருட்காட்சி முழுவதையும் சுற்றிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

அவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவே ஒவ்வொரு இடமாக சென்று காட்சிகளை படமாக்குவது என்பது மிகவும் சவாலான பணியாகும். காண்போர் வியக்கும் வண்ணம் அசாத்திய திறமையுடன் காட்சிகளை படமாக்கி இருந்தார்கள்.

பொருட்காட்சியில், எம்.ஜி.ஆர்.-சந்திரகலா பாடும் 'உலகம் அழகு கலைகளின் சுரங்கம்' பாடலுடன் படத்தின் 'கிளைமாக்ஸ்' தொடங்கும். பாடலில் தொடங்கும் 'கிளைமாக்ஸ்', அடுத்து துரத்தல்கள், சண்டைக்காட்சி என்று 'ஜெட்' வேகத்தில் செல்லும். எந்த இடத்திலும் தொய்வோ, சலிப்போ இல்லாமல் 'ஜாலி'யாக செல்வதால், 3 மணி நேரமும் ரசிகர்கள் வெளி உலகத்தை மறந்து படத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். இப்படி சாமானிய மக்களின் நாடித்துடிப்பையும், ரசனையையும் நன்கு அறிந்து அவர்களை தன்வசப்படுத்தும் கலையை அறிந்து வைத்திருந்த திறமையாளர், திரையுலகில் எம்.ஜி.ஆர். ஒருவர் மட்டுமே.

இந்த படத்தில்தான் நடிகை லதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். முதலில் பைரவனின் கையாளாகவும், விஞ்ஞானி முருகனின் செயலாளராகவும் இருந்து, பின்னர் ராஜூவை காதலிக்கும் லில்லி பாத்திரத்தில் லதா நடித்து இருந்தார்.

ராஜூவின் ஜோடியாக சந்திரகலா நடித்த ரத்னாதேவி பாத்திரத்துக்கு முதலில் நடிகை ராஜஸ்ரீயை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்ரீயுடன் எம்.ஜி.ஆர். பேசிய போது, தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் வெளிநாட்டுக்கு வருவது பற்றி யோசிப்பதாக கூறினார். அதற்கு எம்.ஜி.ஆர்., "முதலில் தாயாரின் உடல்நலம்தான் முக்கியம். நீ உடன் இருந்து கவனித்துக்கொள். வேறு வாய்ப்பு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்" என்று கூறிவிட்டார். அதன்பிறகுதான் சந்திரகலா தேர்வு செய்யப்பட்டார்.

வெளிநாடு சென்ற படப்பிடிப்பு குழுவில் எம்.ஜி.ஆர்., அவரது மனைவி ஜானகி அம்மாள், மஞ்சுளா, லதா, சந்திரகலா, அசோகன், நாகேஷ், ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, வசனகர்த்தா சொர்ணம், நடன இயக்குனர் பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆலோசகராக டைரக்டர் ப.நீலகண்டன் ஆகியோருடன் மேலும் சிலர் மட்டுமே இடம் பெற்று இருந்தனர்.

கூடுதல் செலவு, அன்னிய செலாவணி, 'விசா' கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் காரணமாக அதிக பேரை அழைத்துச் செல்ல இயலவில்லை.

படப்பிடிப்புக்காக தனது குழுவினருடன் ஜப்பான் சென்ற எம்.ஜி.ஆரை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார். நகமும், சதையுமாக இருந்த நண்பர்கள், படம் வெளியாகும் போது 'நீரும் நெருப்பும்' ஆனார்கள். எல்லாம் காலத்தின் விளையாட்டு!...

நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன், வி.கோபாலகிருஷ்ணன், ஜஸ்டின் சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் சென்னையிலேயே படமாக்கப்பட்டன. ஆனால் அந்த காட்சிகளெல்லாம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது போல் இருக்கும். அந்த அளவுக்கு கலை இயக்குனர் பி.அங்கமுத்து படப்பிடிப்பு அரங்குகளை தத்ரூபமாக அமைத்து இருந்தார். அத்துடன் திறமையான 'எடிட்டிங்'கும் ஒரு காரணம் ஆகும்.

தாய்லாந்தில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்து இருந்தது. ஒரு நாள், 'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அருகே நடைபெற்ற மற்றொரு படப்பிடிப்பில் அந்த நாட்டு நடிகர் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் எம்.ஜி.ஆர். தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, அங்கு விரைந்து சென்று, விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டதோடு, தேவையான உதவிகளை செய்தார்.

இந்த விவரம் மறுநாள் அந்த நாட்டு பத்திரிகைளில் பரபரப்பாக வெளியானது. இதனால் எம்.ஜி.ஆர். மீது தாய்லாந்து அரசுக்கு மிகுந்த நன்மதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்புக்கான அனுமதியை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்தது.

இந்த படத்தில் 5 சண்டைக்காட்சிகள். ஒவ்வொன்றையும் வித்தியாசமாகவும், பிரமாதமாகவும் அமைத்து இருந்தார் 'ஸ்டண்ட் மாஸ்டர்' ஷியாம் சுந்தர். குறிப்பாக ஜப்பானில் உள்ள புத்த கோவிலில் எம்.ஜி.ஆரும், கோரமான பற்களுடன் பயங்கரமான தோற்றத்தில் வரும் நம்பியாரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு தெவிட்டாத விருந்தாக அமைந்தது. சண்டைக் காட்சியைக்கூட புதுமையாகவும், சுவாரசியமாகவும் ரசிக்கும்படி எடுக்க முடியும் என்பதற்கு இந்த காட்சி உதாரணம். ஜப்பானில் நடப்பதுபோல் தோன்றினாலும், சென்னை சத்யா ஸ்டூடியோவில் புத்தர் கோவில் போன்று தத்ரூபமாக 'செட்' அமைத்து இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இதேபோல், கிளைமாக்சில் இடம்பெற்ற வித்தியாசமான 'ஸ்கேட்டிங் சண்டைக்காட்சி'யும் இதுவரை வேறு எந்த படத்திலும் வராதது.

ரிலீசாகும் வரை இந்த படத்தின் கதை என்ன என்பதே அதில் நடித்த பலருக்கு தெரியாது. "இங்கே போகச் சொன்னார்; அங்கே போகச் சொன்னார்; ஏதோ காட்சியில் வசனத்தை கொடுத்து பேசச் சொன்னார்; கதை என்ன என்றே தெரியாமல்தான் இருந்தேன். ஆனால் படம் வெளியானபோதுதான் எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி என தெரிந்தது" என்று நாகேஷ் ஒருமுறை கூறினார்.

சினிமாவிலும் சரி; பொதுவாழ்க்கையிலும் சரி; கடைசி வரை தன்னை ஓர் இளைஞனாகவே காட்டிக்கொண்ட எம்.ஜி.ஆர்., படங்களின் பெயரில் ஈர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்று சொல்வார். இந்த படத்துக்கு முதலில் 'மேலே வானம் கீழே பூமி' என்றுதான் பெயர் வைப்பதாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர்.தான் அதை மாற்றி 'உலகம் சுற்றும் வாலிபன்' என்று கவர்ச்சிகரமாக பெயர் வைத்தார். 3 ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இந்த படம் வெளியாகும் போது அவர் 55 வயதை கடந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதெல்லாம் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இது மிகவும் அபூர்வம். பத்திரிகைகள் மற்றும் செவிவழிச் செய்திகள் மூலம்தான் "அமெரிக்கா என்றால் இப்படித்தான் இருக்கும்; ஜப்பான் என்றால் இப்படித்தான் இருக்கும்" என்று மக்கள் அந்த நாடுகளைப் பற்றி தங்கள் மனதில் தனித்தனி பிம்பங்களை கட்டமைத்து வைத்து இருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாமானிய மக்களும் ஜப்பானையும், தாய்லாந்தையும், சிங்கப்பூரையும் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை தனது 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் மூலம் ஏற்படுத்திக்கொடுத்தார் எம்.ஜி.ஆர். தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெற்றிகரமாக ஓடியது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த தயாரிப்பாளர் விருதுகளை எம்.ஜி.ஆருக்கு பெற்றுத்தந்த இந்த படம் தெலுங்கு ('லோகம் சுட்டின வீருடு'), இந்தியிலும் ('ரங்கீன் துனியா') மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் தொடர்ச்சியாக 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார். படத்தின் முடிவில் எமது அடுத்த தயாரிப்பு 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை.

இந்த படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களில் பலர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அரை நூற்றாண்டு ஆகியும் 'உலகம் சுற்றும் வாலிபன்' இன்னும் மவுசுகுறையாத வாலிபனாகவே இருக்கிறான்.

இந்த படம் 2021-ம் ஆண்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு தமிழகம் முழுவதும் 89 தியேட்டர்களில் வெளியானது. சென்னையில் மட்டும் 32 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான போது ரசிகர்களிடம் காணப்பட்ட எழுச்சியையும், உற்சாகத்தையும் அப்போதும் காண முடிந்தது.

நல்ல படைப்புகளுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதற்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' ஓர் சிறந்த உதாரணம்.

எத்தனை ஆண்டுகளானாலும் தங்கத்தின் மதிப்பு குறையுமா என்ன? தங்கம் தங்கம்தானே!....

எம்.ஜி.ஆரை பார்த்து வியந்த தாய்லாந்து நடிகை

இந்த படத்தில் மேட்டா ரூங்ராத் என்ற தாய்லாந்து இளம் நடிகையை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார்.

படப்பிடிப்புக்கு முதல் நாள் வந்த அவரை எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அப்போது வேட்டி-சட்டை, கண்ணாடி, தொப்பியில் இருந்த எம்.ஜி.ஆரை பார்த்ததும், அருகில் இருந்தவர்களிடம் "இவரா ஹீரோ? என்று கேட்டதோடு, முதிர்ச்சியானவர் போல் தெரிகிறாரே" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். அவரது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் "நாளை 'ஷூட்டிங் ஸ்பாட்'டுக்கு வந்து பாருங்கள்" என்று கூறவும், மேட்டா கிளம்பிச் சென்றார்.

மறுநாள் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பாடல் காட்சிக்காக 'ஷூட்டிங் ஸ்பாட்'டுக்கு வந்த நடிகை மேட்டா, இளைஞன் போல் காட்சியளித்த எம்.ஜி.ஆரை பார்த்ததும் அசந்துவிட்டார். "நேற்று நான் பார்த்தவரா இவர்?" என்று ஆச்சரியத்துடன் கேட்க, "ஆம், அவரேதான் இவர்" என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். பாடல் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தையும், உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் பார்த்து மேட்டா வியந்து போனார்.

உலகம் சுற்றும் வாலிபன் 'ஷூட்டிங்' நடந்து கொண்டிருந்த சமயத்தில், வழக்கு ஒன்றில் சிக்கியதால் மேட்டாவால் தொடர்ந்து படப்பிடிப்புக்கு வர இயலவில்லை. இதனால் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடலில் 'மெல்லப்பேசும் கள்ளப்பார்வை' என்ற சரணத்தை மேட்டா இல்லாமல் அவரைப் போன்ற 'டூப்' நடிகையை வைத்து எடுத்து முடித்தார் எம்.ஜி.ஆர். ராஜா-ராணி உடையில் இருவரும் பாடுவதாக வரும் இந்த காட்சியில், அவர் 'டூப்' நடிகை என்பதை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

மேலும், படப்பிடிப்புக்காக மேட்டாவை சென்னைக்கு வரவழைக்கவும், பிரமாண்டமான கண்ணாடி மாளிகை 'செட்' அமைத்து அதில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கவும் எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார். மேட்டா ஒரு வழக்கு விவகாரத்தில் சிக்கியதால் அவரால் சென்னை வர இயலவில்லை. இதனால் அந்த காட்சியை எம்.ஜி.ஆர். மாற்றி அமைத்துவிட்டார்.

லதா கதாநாயகி ஆனது எப்படி?

உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி? என்பது பற்றி தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட லதா கூறியதாவது:-

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்காக எம்.ஜி.ஆர். புது கதாநாயகியை தேடிக்கொண்டிருந்த போது, பள்ளியில் நடன நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட எனது புகைப்படத்தை பார்த்து, அதுபற்றி நடிகர் மனோகரிடம் விசாரித்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து மனோகர் வந்து வற்புறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் நானும், எனது தாயாரும் அவருடன் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தோம்.

எம்.ஜி.ஆர். எனது தாயாரை சமாதானம் செய்து, படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தார். எனக்கு நடிப்பு, நடனம், தமிழ் உச்சரிப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து, களிமண் மாதிரி இருந்த என்னை சிலையாக வடிவமைத்தது எம்.ஜி.ஆர்.தான். அத்துடன் நளினி என்ற எனது பெயரை சினிமாவுக்காக லதா என்றும் மாற்றினார்.

'உலகம் சுற்றும் வாலிபன்' படம் மறக்க முடியாத அனுபவம். முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடித்ததால் மிக விரைவில் புகழின் உச்சியை எட்டினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோகன்லாலின் கணிப்பு

இந்தியாவில் இதுவரை வெளிவந்த மிகச்சிறந்த 10 படங்களில் உலகம் சுற்றும் வாலிபனும் ஒன்று என நடிகர் மோகன்லால் கூறி இருக்கிறார். "நான் சிறுவனாக இருந்த போது 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளன" என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் 1997-ல் வெளியான 'இருவர்' படத்தில், இவர் எம்.ஜி.ஆரை சித்தரிக்கும் வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இளமை துள்ளும் பாடல்கள்

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு முதலில் குன்னக்குடி வைத்தியநாதன்தான் இசையமைப்பதாக இருந்தது. இதைப்பற்றி அறிந்த கவிஞர் கண்ணதாசன், இது வெளிநாட்டில் எடுக்கப்படுகின்ற படம் என்பதால் விஸ்வநாதன் இசையமைத்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வேறொரு படம் கொடுங்கள் என்றும் எம்.ஜி.ஆரிடம் கூறினார். சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். அவர் கூறியதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசையமைப்பாளராக நியமித்தார். (குன்னக்குடி வைத்தியநாதனுக்கு பின்னர் 'நவரத்தினம்' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார்).

உலகம் சுற்றும் வாலிபனில் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் ஓர் இசை ராஜாங்கமே நடத்தி இருந்தார். 'டா ய்க்கோ டிரம்ஸ்', 'ஹோட்டோஹார்ப்' போன்ற ஜப்பான் இசைக்கருவிகளையும் பயன்படுத்தி ரசிகர்களுக்கு வெளிநாட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தி இருப்பார். அவரது திரையுலக வரலாற்றில் இந்த படம் அவருக்கு உச்சமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியில் பாடல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பாடல்கள் பத்து; அத்தனையும் முத்து. எப்போது கேட்டாலும் தெவிட்டாத இளமை துள்ளும் அற்புதமான பாடல்கள். கண்ணதாசன் 3 பாடல்களையும் (லில்லி மலருக்கு கொண்டாட்டம், அவள் ஒரு நவரச நாடகம், உலகம் அழகு கலைகளின் சுரங்கம்), வாலி 5 பாடல்களையும் (பன்சாயி, நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி முத்துச்சரம், தங்கத் தோணியிலே, ஓ மை டார்லிங்), புலமைப்பித்தன் சிரித்து வாழ வேண்டும் பாடலையும், புலவர் வேதா, நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற 'டைட்டில்' பாடலையும் எழுதி இருந்தனர். இதில் 'ஓ மை டார்லிங்' என்ற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஒலி வடிவத்தில் இருக்கும்.

பாடல்கள் அனைத்தும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டன. லில்லி மலருக்கு கொண்டாட்டம், 'சிரித்து வாழ வேண்டும்,' 'அவள் ஒரு நவரச நாடகம்' பாடல்களின் சில காட்சிகள் இந்தியாவில் எடுக்கப்பட்டன. தண்ணீருக்குள் எம்.ஜி.ஆரும், லதாவும் நீந்தியபடி பாடுவதாக அமைந்த 'அவள் ஒரு நவரச நாடகம்' பாடலின் சில காட்சிகள் சத்யா ஸ்டூடியோவில் கண்ணாடி தொட்டி அமைத்து படமாக்கப்பட்டன. இப்போது இருப்பதை போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அன்றைய காலகட்டத்தில், இங்கே எடுக்கப்பட்ட காட்சிகள் என்று தெரியாத அளவுக்கு நுட்பமாக படமாக்கி இருப்பதோடு, 'எடிட்டிங்'கிலும் பிரமாதப்படுத்தி இருப்பார்கள்.

அப்போது பிரபலமாக இருந்த எல்லா பின்னணி பாடகர்-பாடகிகளும் இந்த படத்தில் பாடி இருக்கிறார்கள்.

'அவள் ஒரு நவரச நாடகம்', 'நிலவு ஒரு பெண்ணாகி' ஆகிய இரு பாடல்களும் எம்.ஜி.ஆர். நடிக்க இருந்து பின்னர் கைவிடப்பட்ட 'இணைந்த கைகள்' என்ற படத்துக்காக எழுதப்பட்டவை ஆகும். அந்த பாடல்கள் இந்த படத்தில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டன.

எம்.ஜி.ஆரிடம் வாலி 'தமாஷ்'

'உலகம் சுற்றும் வாலிபன்' படத்துக்கான பூர்வாங்க வேலைகள் நடந்துகொண்டிருந்த போது ஒரு சமயம் எம்.ஜி.ஆரும், வாலியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வாலி, "எனக்கு இந்த படத்தில் எத்தனை பாடல்கள்?" என்று கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர். "உமக்கு இந்த படத்தில் பாடல் இல்லையே!" என்று கூறினார்.

அதைக்கேட்ட வாலி, "அதெப்படி நான் இல்லாமல் இந்த படம் எப்படி வெளிவரும் என பார்க்கலாம்? என்று சொல்லவும், எம்.ஜி.ஆர். புருவத்தை உயர்த்தினார். உடனே வாலி, "நான் இல்லாவிட்டால் படம் உலகம் சுற்றும் பன்" என்றுதானே இருக்கும் என்று சொல்ல, அவரது சாதுர்யத்தை அறிந்து எம்.ஜி.ஆர். வாய்விட்டு சிரித்தார். அத்துடன் பாடல்கள் எழுதும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கினார்.


Next Story