தமிழ் பண்பாட்டை பாதுகாக்க பண்டிகைகள் அவசியம்


தமிழ் பண்பாட்டை பாதுகாக்க பண்டிகைகள் அவசியம்
x

தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்களில் அன்பும், உறவும் அதிகமாகவே இருக்கும்.

உலகம் முழுவதும் சொந்த நாடு, சொந்த மொழி குறித்த சிந்தனை அவரவர் மனதில் ஓங்கி நிற்கும். இந்த இயல்பான சிந்தனை தமிழர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்க வேண்டும். ஆய்வுகளின் படியும், வரலாற்று ஒப்புமைகளின் படியும் உலகின் முதல் மொழி தமிழ் என்பது ஆராய்ச்சியாளர்களின் தீர்க்கமான முடிவு. முதல் மொழி என்பது மட்டுமின்றி, உலகின் மிகப் பழமையான கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை கொண்டது தமிழ் சமூகம்.

இன்றைய சூழலில் தமிழ் பண்பாட்டு கலாசாரங்களாக மிச்சமிருக்கும் கொண்டாட்டங்கள் தேவையா? என்ற கேள்வி ஒரு சாரார் மத்தியில் எழுகிறது.

அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வந்தால் அத்தியாவசியமற்ற செலவுகளால் பல குடும்பங்கள் சிரமப்படும் நிலை ஏற்படுகிறது. பொருளாதார வசதி இருக்கும் குடும்பங்கள் கொண்டாடிக்கொண்டு இருக்க, பொருளாதார வசதி இல்லாத குடும்பங்கள் வேடிக்கை பார்க்கும் நிலையும் உள்ளது. ஆனால் கொண்டாட்டத்தின் நோக்கம் இதுவா...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் மற்றும் காமதேனு கல்வியியல் கல்லூரி மாணவிகளிடத்தில் இதற்கான பதிலை தேடிய போது, அவர்கள் ஆர்வத்துடன் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

முதலில், 'கொண்டாட்டங்கள் அவசியம்தான்' என்று தொடங்கி வைத்தார் மாணவி எம். மரியா கேரன்.

"கொண்டாட்டம் என்பது நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கும் ஏற்படுத்தப்பட்டவை. தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படும் விழாக்களில் அன்பும், உறவும் அதிகமாகவே இருக்கும்.

முதன் முறையாக எங்கள் கல்லூரியில் எனக்கு அறிமுகமான கனி காணும் விழாவையும் இனிமேல் கொண்டாடுவேன்" என்றார்.

'நான் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவள்' என்று உரையாடலை தொடங்கினார் மாணவி ஏ.சிப்ரபத்ரா. "வேலை நிமித்தமாக என் தந்தையும், தாயும் இங்கேதான் வசிக்கிறார்கள். நான் இங்கேதான் பிறந்தேன். இங்குள்ள பள்ளிக்கூடங்களில் படித்தேன். ஆனால் இங்குள்ள பண்டிகைகளை கொண்டாடியது இல்லை. தற்போது சித்திரை கனி காணும் விழா பற்றி எனது தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். தமிழ்ப் புத்தாண்டு, ஒரு மொழி சார்ந்த கொண்டாட்டமாக இருப்பது வியப்பாக இருந்தது" என்றார்.

மாணவி பி.ஹரிப்பிரியா "எங்கள் பகுதியில் சித்திரை 1-ந் தேதி வழக்கம்போல கனிகாணும் நிகழ்ச்சி நடக்கும். அன்றைய நாளில் சித்திரை மாதம் பிறந்தவர்களின் வீட்டில் பொங்கல் வைப் பார்கள். ஒரு வேளை முதல் நாளில் பொங்கல் வைக்க முடியவில்லை என்றாலும், சித்திரை மாதம் முடியும் முன்பு ஒரு நாளில் கண்டிப்பாக பொங்கல் வைக்க வேண்டும்" என்றார்.

இன்றைய தலைமுறை வேகம் வேகமாக செல்கிறது. அது இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியம் என்றாலும் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை மாணவ-மாணவிகள் மத்தியில் உணரச்செய்ய வேண்டியதும் அவசியம். அதற்கு இதுபோன்ற பண்பாட்டு நிகழ்வுகளை கல்லூரிகளில் நடத்துவது தேவையான ஒன்றுதான்.


Next Story