வில்லனாக மாறிய ஆபத்பாந்தவன்


வில்லனாக மாறிய ஆபத்பாந்தவன்
x

‘‘மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்’’ என்கிறது அரசாங்கம்.

ஏனெனில் மரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலும், பசுமை நிறைந்த பகுதிகளிலும் மழை வளம் அதிகமாக இருக்கும். அந்த வகையில், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் மரங்கள் உற்ற தோழனாக விளங்குகின்றன.

ஆனால் ஒரு மரத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் ஓரணியில் திரண்டு குரல் எழுப்புகிறார்கள். அதை ஒழித்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதனால் அந்த மரத்தை ஒழிக்க அரசாங்கமும் போராடுகிறது. நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று, அந்த மரத்தை இந்த மண்ணில் இருந்து அகற்றுவதற்கு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், இறைவனிடம் சாகா வரம் பெற்று அந்த இறைவனையே அச்சுறுத்தும் அரக்கன் போல், ''முடிந்தால் என்னை ஒழித்துப்பார்'' என்று அந்த மரம் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கே சவால் விடுவதோடு, பெரும் ஆபத்தாகவும் விளங்குகிறது.

அப்படியென்றால் அது சாதாரண மரமா? தமிழகம் முழுவதும் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி வளர்ந்து இருக்கும் சீமை கருவேல மரம்தான் அது. நமக்கு உபகாரமாக இருக்கும் என்று வெளிநாட்டில் இருந்து நாம் விருந்தாளியாக அழைத்து வந்த மரம்தான் இந்த கருவேல மரம். இதனால் அதற்கு 'சீமை கருவேல மரம்' என்ற பெயர் வந்தது.

இந்த சீமை கருவேல மரத்தின் பூர்வீகம் மேற்கு ஆப்பிரிக்கா, ஆங்கிலேயர் ஆட்சியின் போது அங்கிருந்துதான் இந்த மரம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது.

'புரோசோபிஸ் ஜூலிபுளோரா' என்று சொன்னால், ஏதோ ஹாலிவுட் நடிகையின் பெயர் போல இருக்கும். ஆனால் நடிகை அல்ல. சீமை கருவேல மரத்தின் தாவரவியல் பெயர்தான் இது.

அப்போதெல்லாம் சமையலுக்கு மண்எண்ணெய், எரிவாயு போன்றவை கிடையாது, மரக்கட்டைகள், கம்புகள், குச்சிகள் போன்றவற்றைத்தான் மக்கள் எரிபொருளாக அதிகம் பயன்படுத்தினார்கள். இதனால் எரிபொருளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் வகையில் ஆங்கிலேயர்கள் கருவேல மரத்தின் விதைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்து தூவினார்கள்.

1960-களில் இந்த மரம் தமிழகத்துக்குள் நுழைந்தது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது, வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் சீமை கருவேல மர விதைகள் தூவப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டதால், இந்த மரங்களுக்கு 'பஞ்சம் தாங்கி' என்ற ஒரு பெயரும் உண்டு.

விவசாய நிலம் மற்றும் தோட்டங்களுக்குள் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை நாசம் செய்யாமல் இருக்க வேலியாக சீமை கருவேல மரங்களை வளர்ப்பதால் இதற்கு 'வேலி காத்தான்' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

தமிழகத்தில் இயற்கையாக வளரும் கருவேல மரத்தை ('அகாசியா நிலோடிகா') போன்று இருப்பதால் இதை கருவ மரம் என்றும் சொல்கிறார்கள்.

சீமை கருவேல மரத்துக்கு வறட்சியான நிலம்தான் தாய்வீடு மாதிரி, ரொம்ப இஷ்டம். ஆண்டுக்கு 20 செ.மீ. அளவுக்கு குறைவாக மழை பெய்யும் பகுதிகளில் இது வேகமாக வளரும். அதிக நீர்வளம் இதற்கு ஒத்துக் கொள்ளாது. நீர்நிலைகளில் இந்த மரங்கள் பரவி இருந்தாலும் அங்கு இவற்றின் வளர்ச்சி வேகமாக இருக்காது.

பாலைவன தாவரமான இந்த கருவேல மரத்தை வளர்ப்பதற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. விதை எங்கே விழுகிறதோ அந்த இடத்தில் தானாக முளைத்து மரமாகிவிடும். 12 மீட்டர் உயரம் வரை வளரும் இந்த மரத்தின் இலைகள் புளிய மரத்தின் இலைகள் போல் இருக்கும். மரத்தில் முள் இருப்பதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளோ, விலங்குகளோ இதன் இலைகளை உண்ணாது. இதனால் தனிக்காட்டு ராஜா போல் தானாக வளர்ந்துவிடும். இதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படாது. சிறிதளவு தண்ணீர் இருந்தாலே போதும். இதன் வேர் பரந்து விரிந்து 50 அடி ஆழத்துக்கும் மேல் செல்லக்கூடியது என்பதால் சிறிதளவு நீரையும் உறிஞ்சிக் கொள்ளும்.

பூமியே வறண்டுவிட்டாலும் இந்த வேலிக்காத்தானை வீழ்த்த முடியாது. காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழும். கடுமையான கோடை வெயில், வறட்சி பாச்சாவெல்லாம் இதனிடம் பலிக்காது. சுட்டெரிக்கும் வெயில் காலத்திலும் இந்த மரங்கள் பசுமையாக காட்சி அளிப்பதற்கு இதுதான் காரணம்.

எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு, தான் மட்டும் செழித்து வளரக்கூடிய சீமை கருவேல மரங்களை நோய்களாலும், பூச்சிகளாலும் தாக்க முடியாது. இந்த மரங்கள் வளரும் இடத்தில் உற்பத்தியாகும் நச்சுப் பொருள் அங்கு பிற செடிகள் வளர்வதை தடுக்கிறது.

நச்சு மிகுந்த இதன் முட்கள் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.

எப்போதும் பயன்பாட்டில் இருக்கும் நிலத்திலோ, நீர்வளம் மிக்க பகுதிகளிலோ சீமை கருவேல மரங்கள் அதிகம் வளராது. உதாரணமாக தொடர்ந்து நெல், சோளம், கரும்பு பயிர் செய்யப்படும் நிலங்களில் இந்த மரங்களை நாம் பார்க்க முடியாது. நிலத்தை தரிசாக போடாமல் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் அங்கு இந்த மரங்கள் வளர வாய்ப்பு இல்லை. காலியாக கிடக்கும், வறட்சியான நிலங்கள்தான் இந்த மரங்களுக்கு புகலிடம்.

குறைந்த அளவு ஆக்சிஜனையே உற்பத்தி செய்யும் சீமை கருவேல மரங்கள், அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடுகின்றன. அதிக அளவில் நீரை உறிஞ்சுவதாலும், கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுவதாலும் இந்த மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மரங்கள் அதிக வெப்பமாக இருப்பதால் பறவைகளாலும், தேனீக்களாலும், பூச்சிகளாலும் இதில் கூடு கட்டவோ வாழவோ முடியாது. இந்த மரங்களால் நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடைவதோடு மண்ணின் மக்கும் தன்மையும் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எரிபொருள் உபயோகத்தை தவிர இந்த மரத்தால் பெரிய அளவில் வேறு எந்த நன்மையும் கிடையாது.

காலப்போக்கில் சமையலுக்கு மக்கள் மண்எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை பயன்படுத்த தொடங்கியதால் சீமை கருவேல மரங்களை நாடுவது குறைந்தது. இதனால் தற்போது செங்கல் சூளை, கரிமூட்டம் போடுவது ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த மரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாட்டில் இருந்து விருந்தாளியாக வந்த இந்த கருவேல மரம், இப்போது உள்ளூர் மரங்களையே காலி செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் வலுவாக வேரூன்றி அழிக்க முடியாத பெரும் அசுர சக்தியாக விளங்குகிறது. குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தேனி போன்ற தென் மாவட்டங்களில் காலியாக கிடக்கும் இடங்களிலெல்லாம் சீமை கருவேல மரங்கள்தான் வளர்ந்துள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் இதன் ஆதிக்கம் அதிகம்.

தரிசாக கிடக்கும் வானம் பார்த்த பூமி மட்டுமின்றி குளங்கள், ஏரிகள், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால்கள், அணைகள் என்று எல்லா இடங்களிலும் இந்த மரங்கள் வளர்ந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தாக விளங்குகின்றன. பெரும்பாலான நீர்நிலைகள் தூர்ந்து போனதற்கு இந்த மரங்களும் ஒரு முக்கியமான காரணம் ஆகும்.

தமிழகத்தில் உள்ள பல சிறிய ஆறுகளெல்லாம் பெரும்பாலான மாதங்கள் வறண்டு கிடப்பதால், அந்த ஆறுகளை சீமை கருவேல மரங்கள்தான் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் வரும் போது நீரோட்டம் தடைபடுவதால், பாசன பகுதிக்கு சரியாக தண்ணீர் போய்ச் சேருவது இல்லை.

உள்ளூர் மரங்களுக்கு சவால் விடும் வகையில் சீமை கருவேல மரங்கள் அசுர வேகத்தில் எங்கும் பரவியது ஒரு கட்டத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்த மரங்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. நாளாவட்டத்தில் கருவேல மரத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கின. சிலர் சட்டத்தின் உதவியை நாடி நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள்.

சீமை கருவேல மரங்கள் நீரை அதிக அளவில் உறிஞ்சுவதாலும், சுற்றுச்சூழலை நாசமாக்குவதாலும், அவற்றை முற்றிலுமாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை கிளையின் விசாரணை வரம்புக்குள் வரும் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் இந்த வேலை ஆமை வேகத்தில் நடந்ததால், அந்த பணியை கண்காணிக்க ஐகோர்ட்டு கிளை மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிட்டதோடு வக்கீல்கள் குழு ஒன்றையும் அமைத்தது.

இதேபோல் சென்னை ஐகோர்ட்டிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களின் மீதான விசாரணையின் போது, நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் 1.92 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் வேரோடு வெட்டி அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள நிலங்களில் உள்ள மரங்கள் படிப்படியாக வெட்டி அகற்றப்படும் என்றும் அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, சீமை கருவேல மரங்கள் பல்லுயிர் பெருக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், இந்த மரங்களை ஒழித்தால்தான் 'பசுமை தமிழகம்' என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் கூறினார்கள்.

தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களையும் வெட்டி அகற்ற ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

வரம் கொடுத்த சாமியையே பதம் பார்க்கும் அரக்கன் போல், கொண்டு வந்து வளர்த்த அரசாங்கத்துக்கே இப்போது பெரும் சவாலாக விளங்குகிறது இந்த சீமை கருவேல மரம்.

இந்த மரத்தை முற்றிலுமாக ஒழிப்பது சாத்தியமா? என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் அதன் வேரின் சிறிய பகுதி இருந்தாலும், விதை எங்காவது விழுந்தாலும் அது முளைத்துவிடும்.

மேலும் இந்த மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்ட இடங்களை, வேறு மரங்களை வளர்ப்பது, கட்டிடங்கள் கட்டுவது போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படியே போட்டுவிட்டால் அங்கு மீண்டும் சீமை கருவேல மரங்கள் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கிவிடும்.

ஆனால் தரிசாக கிடக்கும் பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில், அதுவும் வறட்சியான நிலங்களில் பிற செடிகளை நட்டு வளர்ப்பது என்பது மிகப்பெரிய பணி ஆகும்.

நல்ல நோக்கத்துக்காகவே வெளிநாட்டில் இருந்து சீமை கருவேல மரங்கள் கொண்டு வரப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதன் அசுர வளர்ச்சியும், பாதிப்பும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

60 ஆண்டுகளுக்கு முன் ஆபத்பாந்தவனாக வந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பஞ்சத்தை போக்க உதவிய சீமை கருவேல மரம், இப்போது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் வில்லனாக விளங்குகிறது.

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளில் படர்ந்து இருக்கும் ஆகாய தாமரையை அகற்றுவதே பெரும் சவாலாக இருக்கும் போது, வேலிக்காத்தானை விரட்டுவது அவ்வளவு சுலபமா என்ன?

என்றாலும் இந்த வில்லனை வீழ்த்த அரசாங்கம் தொடர்ந்து போராடுகிறது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்று தெரியவில்லை. கடைசியில் வெற்றி யாருக்கு? என்று பொறுத்திருந்து பார்ப்போம்....

மருத்துவ குணம்

நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பது போல், எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும். இதன் விகிதாச்சாரம் வேண்டுமானால் மாறுபடலாமேயொழிய, முற்றிலும் தீங்கானது என எதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.

சீமை கருவேல மரத்தின் இலை, காய், பூக்களுக்கு சில நல்ல மருத்துவ குணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பெரு, அர்ஜென்டினா போன்ற நாடுகளில் சீமை கருவலே மரத்தின் விதைகள், பூக்களில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. நன்றாக வளர்ச்சி அடைந்து முதிர்ந்த கருவேல மரத்தில் இருந்து சிவப்பு-மஞ்சள் நிறம் கலந்த ஒரு வகையான பிசின் வெளிப்படும். இந்த பிசின் பல் வலி, பற்சிதைவு, ஈறு வலி, ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாவதோடு அவற்றை வலுப்படுத்த உதவுவதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

வெள்ளாட்டின் இறைச்சி சத்து மிகுந்தது என்று சொல்வார்கள். சீமை கருவேல காய்களை வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். அந்த வகையில் இந்த விதைகள் வெள்ளாடுகளுக்கு சிறந்த உணவாக விளங்குகின்றன. ஆடு, மாடுகளின் கழிவில் உள்ள சீமை கருவேல விதைகள் மூலமாகவும் அந்த மரங்கள் வேகமாக பரவுகின்றன.

தொழிலாளர்கள் கவலை




ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கரிமூட்டம் தொழில் பிரதான தொழிலாக நடந்து வருகிறது. இங்கு விவசாயிகளுக்கு 6 மாதம்தான் விவசாய தொழில் இருக்கிறது. இதனால் கோடை காலத்தில் காட்டு கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் போடுவது இப்பகுதியில் முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. இதனால் கருவேலமரங்களை அழித்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இங்குள்ள தொழிலாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் கூறியதாவது:-

6 மாத காலம் நெல் விவசாயம் முடிந்தவுடன் கோடையில் காட்டு கருவேலமரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழில் செய்து வருகிறோம். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெட்டும் வகையில் கருவேல மரங்கள் பருமன் அடைகின்றன. அந்த மரங்களை வெட்டி கரிமூட்டம் செய்கிறோம். பகுதி பகுதியாக வெட்டி வருவதால் தொடர்ந்து கோடை காலத்தில் மரங்களை வெட்டி வாழ்வாதாரத்தை தேடிக் கொள்கிறோம். கரிமூட்டம் போட்டு கிடைக்கும் கரி கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் இந்த கரி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

காட்டுக் கருவேல மரத்தின் கரித்துண்டு பருமனாக இருப்பதால் அதிக விலை கிடைக்கிறது. 65 கிலோ எடை கொண்ட கரி மூட்டை ரூ.850-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கரியானது சிமெண்டு தொழிற்சாலைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் கருவேலமரங்களை நம்பியே இருக்கின்றன. அவற்றை முழுவதுமாக வெட்டி அகற்றினால் எங்கள் நிலைமை என்ன ஆகும்? என நினைத்துப் பார்க்கவே கவலையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தனது சோகத்தை வெளிப்படுத்தினார்.

சாயல்குடியை அடுத்த செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் கூறியதாவது:-

''விவசாயிகள் மட்டுமல்லாது இங்கு ஆண்டுமுழுவதும் காட்டு கருவேலமரங்களை வெட்டி கரிமூட்டம் போடும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் கோடை காலத்தில் கருவேல மரங்களை வெட்டி மூட்டம் போடும் கரியை மழைக்காலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறுகின்றனர். எனவே, காட்டு கருவேலமரங்களை முழுவதுமாக அழித்தால் இந்த தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் எந்த ஒரு பயிரும் செய்ய முடியாத இடங்களில் கருவேலமரங்கள் அதிகமாக முளைத்து விடுகின்றன. வெட்ட வெட்ட இந்த மரங்கள் வளர்வதால் இவற்றை முற்றிலுமாக அழிப்பது சாத்தியமற்றது'' என்றார்.

வந்ததும்... சென்றதும்...



இந்த பூமி தோன்றிய பல்லாயிரம் கோடி ஆண்டுகளில் இருந்து இதுவரை பல பரிணாம மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. இன்று நாம் பார்க்கும் விலங்குகளாகட்டும் அல்லது தாவரங்களாகட்டும் அவை ஏதோ ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தவைதான். அவை இயற்கையாகவோ அல்லது மனிதர்களாலோ இடம் பெயர்ந்து இருக்கலாம்.

நாம் உண்ணும் காய்கறி மற்றும் பழங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வந்தவைதான் என்று சொன்னால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் அதுதான் உண்மை.

இந்தியாவில் முக்கிய உணவுப் பொருளாக பயன்படும் கோதுமை, மத்திய ஆசியாவில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டுக்கு வந்தது.

இதேபோல் நாம் விரும்பி உண்ணும் உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றின் பூர்வீகம் தென் அமெரிக்கா ஆகும். அங்கிருந்துதான் அவை இந்தியாவுக்கு வந்தன.

ஆப்பிள், பூண்டு ஆகியவற்றின் பிறப்பிடம் மத்திய ஆசிய நாடுகள். முட்டைகோஸ், ஆரஞ்சு, சோயாபீன்ஸ் ஆகியவை கிழக்கு ஆசியாவில் இருந்து வந்தவை.

மிளகாய் மத்திய அமெரிக்காவில் இருந்தும், கடுகு மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு வந்தன.

காபி, வெண்டைக்காய், சோளம், தட்டப்பயறு ஆகியவை ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்த இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

வாழை, தென்னை ஆகியவற்றின் பூர்வீகம் ஆசிய நாடுகள். நெல், கரும்பு, இஞ்சி, எலுமிச்சை, தேயிலை, வெள்ளரிக்காய் மற்றும் வாழை, தென்னை, மாமரம், புளியமரம், வேப்பமரம் போன்றவை நம் நாட்டில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு போய் இருக்கின்றன.

இந்த பூமிப் பந்தில் இப்படி பல 'கொடுக்கல்-வாங்கல்கள்' நடந்து இருக்கின்றன; தற்போதும் நடந்து வருகின்றன.

அப்படி நாம் கொண்டு வந்ததுதான் சீமை கருவேல மரம். அதை அழைத்து வந்த போது அதன் பலனைத்தான் பார்த்தோமே தவிர, அது இவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்.



'வாழ்க்கையை மாற்றிய சீமை கருவேல மரம்'


முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகவள்ளி கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு கடுமையான வறட்சி ஏற்பட்ட போது இங்கிருந்து ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக தஞ்சாவூருக்கு பஞ்சம் பிழைக்க சென்றார்கள். அப்படி மக்கள் புலம் பெயர்ந்த சமயத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையையே மாற்றியது சீமை கருவேல மரங்கள்தான். அந்த மரங்களை மக்கள் வெட்டி கரியாக்கி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப தொடங்கினார்கள். இதன் மூலம் வறுமையை ஒழிக்க முடிந்ததோடு, இந்த பகுதியில் வேலையில்லா திண்டாட்டமும் குறைந்தது.

கருவேல மரங்களை நம்பித்தான் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. அந்த மரங்களை வேரோடு அகற்றி முற்றிலுமாக ஒழித்துவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் பிழைப்புக்கு என்ன செய்வது? கருவேலமரங்களை அகற்றும் பட்சத்தில் இந்த பகுதியில் அரசாங்கம் ஏதாவது தொழிற்சாலைகளை ஏற்படுத்தி எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அது வேறு... இது வேறு...

சீமை கருவேல மரத்துக்கும் ('புரோசோபிஸ் ஜூலிபுளோரா'), தமிழ்நாட்டில் இயற்கையாக வளரும் கருவேல மரத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கு இயற்கையாக வளரும் கருவேல மரத்தின் தாவரவியல் பெயர் 'அகாசியா நிலோடிகா'.

தமிழகத்தின் பாரம்பரியமிக்க மரங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பூர்வீக கருவேல மரத்தில் ஊசி போன்ற நீண்ட முட்கள் இருக்கும். இதன் நெற்றுகளை (காய்ந்துபோன காய்கள்) அசைத்தால் உள்ளே இருக்கும் விதைகள் 'கலகல'வென ஒலிக்கும். இந்த நெற்றுகளை வெள்ளாடுகள் விரும்பி உண்ணும். இந்த மரத்தில் இருந்து வெளிப்படும் பிசின் காகிதங்களை ஒட்ட பயன்படும். கிராமங்களில் இந்த மரத்தின் குச்சிகளை ஒடித்து பல்துலக்க பயன்படுத்துவது உண்டு.


Next Story