இன்று உலக போலியோ தினம்.. நோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்


இன்று உலக போலியோ தினம்.. நோய் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்
x

போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போலியோவை ஒழிக்க உலகம் முழுவதும் போலியோவுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடத்தப்படுகின்றன. ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் இந்த தினம் தொடங்கப்பட்டது

போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் குழுவை டாக்டர் ஜோனாஸ் சால்க் வழிநடத்தினார். இந்த குழுவினரால் 1955-ல் போலியோவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது வெற்றிகரமாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாலும், போலியோ தடுப்பூசி போடுவதனால் கடுமையான காய்ச்சல் வருவதாலும் அதற்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கடுமையாக ஆராய்ச்சி செய்து ஆல்பர்ட் ப்ரூஸ் சாபின், வாய்வழியாக சொட்டுமருந்து போடப்படும் முறையை கண்டுபிடித்தார்.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் போலியோவை அகற்றும் பணியை 1988 ஆம் ஆண்டில் உலக சுகாதார சபை தொடங்கியது. இந்த பணியின் மூலம், போலியோ நோயிலிருந்து பாதுகாக்க அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக உலக போலியோ தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாத நோயை ஏற்படுத்தும் போலியோ வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குகிறது. முதுகுத் தண்டின் நரம்புகளை போலியோ வைரஸ் பாதிக்கிறது. இதனால் பக்கவாதம் அல்லது மரணம் கூட ஏற்படலாம். போலியோ வைரஸ் முதலில் தொண்டையையும் பின்னர் குடலையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. அதற்குப் பிறகு, மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தை தொற்று பாதிக்கிறது. இந்த தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது.

தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, கழுத்து மற்றும் முதுகு வலி, தசை வலி, கால்கள் அல்லது கைகளை நகர்த்துவதில் சிக்கல் போன்றவை போலியோ பாதிப்பின் அறிகுறிகளாகும். உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளை சரியாகக் கழுவாமல் இருப்பது, சுகாதாரமற்ற நீரைக் குடிப்பது அல்லது அந்த நீரில் சமையல் செய்வது, அழுக்கு நீரில் நீந்துவது, ஆரோக்கியமற்ற உணவு, போலியோ தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் போன்றவற்றால் தொற்று பரவுகிறது.

போலியோவை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தொடர்ந்து இப்பணியை செயல்படுத்துவதாலும், விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்வதாலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நாடாக இந்தியா திகழ்கிறது.

இதேபோல் பல்வேறு நாடுகளில் போலியோ நோய் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில ஆண்டுகளில் உலக அளவில் போலியோ நோய் அறவே ஒழியக்கூடிய வாய்ப்பு உள்ளது.


Next Story