இன்று சர்வதேச யானைகள் தினம்..! நாம் என்ன செய்ய வேண்டும்?
யானைகள் பாதுகாப்பிற்கான நம்பகத்தன்மை வாய்ந்த வனவிலங்கு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
யானைகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் வேட்டைக்காரர்களால் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளை பாதுகாக்க வேண்டிய அவசர தேவையை இந்த நாள் நினைவுபடுத்துவதுடன், யானைகளின் பாதுகாப்புக்கான தீர்வுகளை சர்வதேச அளவில் முன்னெடுக்க வலியுறுத்துகிறது.
அவ்வகையில் இன்று சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களும் யானைகள் பாதுகாப்பிற்காக தங்களால் இயன்ற பங்களிப்பையும் வழங்க முடியும்.
* யானைகள் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். உலக யானை தினம் மற்றும் யானை பாதுகாப்பு தொடர்பான ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி, சர்வதேச அளவிலான உரையாடலில் இணையலாம்.
*யானைகள் பாதுகாப்பிற்கான நம்பகத்தன்மை வாய்ந்த வனவிலங்கு அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கலாம். இந்த நிதியுதவியானது வேட்டையாடுதலை தடுக்கும் முயற்சிகள், யானைகள் வாழ்விட மறுசீரமைப்பு போன்ற பணிகளுக்கு செலவிட உதவியாக இருக்கும்.
*சர்வதேச யானைகள் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். உயிரியல் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
*வசதி வாய்ப்பு உள்ளவர்கள் யானை தத்தெடுப்பு திட்டத்தில் இணையலாம். இதன்மூலம், சரணாலயங்கள் அல்லது காப்பகங்களில் யானைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆதரவை வழங்க முடியும்.
*சட்டவிரோதமாக வனவிலங்குகளை பிடித்து விற்பனை செய்வதை எதிர்த்துப் போராடுவதற்கும் யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கும் வலுவான கொள்கைகளை வகுக்க குரல் கொடுக்கலாம்.
*யானைகளின் நடவடிக்கைகள், வாழ்விடங்கள் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தகவல்களை படிக்கலாம். இந்த தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளலாம்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi