நட்பு நாடுகளாக இருந்து எதிரிகளாக மாறிய இஸ்ரேல்-ஈரான்
ஈரானில் 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்படும் வரை இஸ்ரேலும், ஈரானும் நட்பு நாடுகளாக இருந்தன.
இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் பல ஆண்டுகளாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வந்தாலும், காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலைத் தொடர்ந்து இந்த மோதல் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை செலுத்தியது. இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இது மத்திய கிழக்கில் மோதலை அதிகரிக்கச் செய்யும் என்பதால், தாக்குதல் எண்ணத்தை கைவிடும்படி இஸ்ரேலை நட்பு நாடுகள் வலியுறுத்துகின்றன.
எதிரிகள் ஆனது ஏன்?
ஈரானில் 1979-ம் ஆண்டு புரட்சி ஏற்படும் வரை இஸ்ரேலும், ஈரானும் நட்பு நாடுகளாக இருந்தன. ஈரானில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஹ்லவி வம்சம் ஆண்டபோது, இருதரப்பு உறவுகள் சுமூகமாகவே இருந்தன. இஸ்ரேல் என்ற புதிய நாட்டை அங்கீகரித்த முதல் முஸ்லிம் நாடுகளில் ஈரானும் ஒன்று.
புரட்சியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, ஈரான் அரசு இஸ்ரேலை எதிர்க்க தொடங்கியது. இஸ்ரேலுடனான உறவை துண்டித்தது. மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவையும் எதிர்க்க ஆரம்பித்தது. ஈரான் புதிய தலைவரான அயதுல்லா அலி காமேனி, இஸ்ரேலை ஒரு "புற்றுநோய் கட்டி" என்றும், அது பிடுங்கி அழிக்கப்படும் என்றும் கடுமையாக பேசினார்.
பின்னர் சிரியா, ஈராக், லெபனான் மற்றும் ஏமனில் உள்ள பினாமி போராளி குழுக்கள் மற்றும் பிற குழுக்களை ஈரான் கட்டமைத்து நிதியளித்ததால் விரோதம் ஏற்பட்டது. இதுபோன்ற செயல்களால் ஈரான் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.
1948-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அதன் நீட்சியாக இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு நீடித்த இந்த போரின்போது 500 பாலஸ்தீன கிராமங்கள், நகரங்களை இஸ்ரேல் அழித்தது. இன்றைக்கு இஸ்ரேலாக இருக்கும் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து ஏறத்தாழ 7 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்டனர். அதன் பின்னர் அவர்களால் தங்களின் பகுதிக்கு திரும்பவே முடியவில்லை. அப்படி இடம் பெயர்ந்தவர்களின் வாரிசுகள்தான் தற்போது காசாவில் போர் சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். 1948 போரின்போது கட்டாய இடப்பெயர்வுக்கு தள்ளப்பட்ட நிகழ்வை பாலஸ்தீனர்கள் 'நக்பா' (பேரழிவு) என அழைக்கிறார்கள்.