மரணத்துக்குப் பின் என்ன நடக்கிறது தெரியுமா..? ஞானிகளின் கூற்றை உறுதி செய்யும் அறிவியல் ஆய்வுகள்
மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட நூறு பேரிடம், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி பேராசிரியர் கென்னத் ரிங் ஆய்வு நடத்தினார்.
வாழ்க்கையின் முற்றுப்புள்ளிதான் மரணம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்பது நியதி. பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்கும் 'கவுண்ட்டவுன்' தொடங்கிவிடுகிறது. ஆனால் மரண நாள் தெரியாததால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக-நிம்மதியாக வாழ்கிறோம். இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பதால்தான், மனிதனுக்கு தெரியாமல் கடவுள் அதை மறைத்து வைத்திருக்கிறார்.
மரணம் வரை என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவோம். பொதுவாக உடலில் இருந்து உயிர் (ஆன்மா) பிரிவதை மரணம் என்கிறோம். ஆனால், மரணத்துக்குப் பின் என்னதான் நடக்கிறது? என்ற கேள்விக்கு யாராலும் அறுதியிட்டு விடை சொல்ல முடியாது.
அவரவர் செய்த பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ செல்வார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது.
முதலில் ஆன்மிகம் மட்டுமே மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கை பற்றி பேசி வந்தது. அதன்பிறகு விஞ்ஞானமும் ஆய்வு செய்து பல தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. மரணத்தை பற்றி மதங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. இந்து, பவுத்தம் உள்ளிட்ட சில மதங்களில், மறுபிறவியின் மீது நம்பிக்கை உள்ளது.
மரணம் ஏற்பட்டு, அதாவது வந்த வினைப்பயன் முடிந்ததும்தான் குடியிருந்த உடலை விட்டு பிரியும் ஆன்மா, அந்த பிறவியில்தான் செய்த வினைப்பயன்களுக்கு (பாவ-புண்ணியங்கள்) ஏற்ப மறுபடியும் வேறொரு பிறவி எடுப்பதாக புராணங்கள் சொல்கின்றன.
உடலில் இருந்து உயிர், அதாவது ஆன்மா பிரிந்த பின் அது வேறொரு உடலுக்கு சென்று மறுபிறவி எடுப்பதாக மகான்களும், ஞானிகளும் சொல்கிறார்கள்.
அதேசமயம், பலர் மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பி இருக்கிறார்கள். அதாவது இறந்ததாக கருதப்பட்ட பலர் பின்னர் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். அவர்கள் உடலை விட்டு பிரிந்த ஆன்மா, பின்னர் மீண்டும் அவர்களுடைய உடலுக்குள் வந்து சேர்ந்த சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்கள் மூலமே மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது? என்பதை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய கென்னத் ரிங் என்பவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மரணத்தின் வாசல் வரை சென்று மீண்ட நூறு பேரிடம், அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி ஆய்வு நடத்தினார். அவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன அனுபவங்கள் ஒரே மாதிரியாகவே இருந்தது. உயிரிழந்த நிலையில் ஆழ்ந்த அமைதி ஏற்பட்டதாகவும், இருட்டு சுரங்க பாதை வழியாக சென்று பிரகாசமான வெளிச்சத்தை கண்டதாகவும் அவர்கள் கூறினார்கள்.
மரணத்துக்கு பிந்தைய நிலை குறித்து கென்னத் ரிங் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். கென்னத் ரிங்குக்கு தற்போது 87 வயது ஆகிறது. மரணத்துக்கு பின் என்ன நடக்கும் என்பதை தான் அறிந்து இருப்பதால், மரணத்தை கண்டு அஞ்சாமல் அதை வரவேற்க தான் தயாராக இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
இதேபோல் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மருத்துவ குழு ஒன்று, உயிர் பிரிந்த சில நிமிடங்களில், மரணம் அடைந்த பலரின் உடலை சேதப்படுத்தாமல் நவீன மருந்துகள் மற்றும் கருவிகளின் உதவியுடன் ஆய்வு செய்து இருக்கிறது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மதநம்பிக்கையற்றவர்களின் உடல்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் உடலில் இருந்து உயிர் பிரிவது போன்ற நினைவு, அமைதியான நிலை, பிரகாசமான ஒளியை பார்த்தல், மிதப்பது போன்ற உணர்வு ஆகிய அனுபவங்கள் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியாக ஏற்பட்டு இருந்ததாக தெரியவந்தது.
ஞானிகளும், சித்தர்களும் சொல்வது போலவே உடலை விட்டு பிரியும் ஆன்மாவால் பார்க்கவும், உணரவும் முடியும் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இறந்தவர்களின் ஆன்மா உடனடியாக இந்த பூமியை விட்டு வெளியேறுவது இல்லை என்றும், சில நாட்கள் தான் வசித்த வீட்டிலேயே உலவும் என்றும், அப்போது அங்கு நடப்பவற்றையும், தனது உறவினர்களையும் அது பார்த்துக்கொண்டிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
மரணம் நிகழ்ந்த சில வீடுகளில் அறையில் யாரோ நடந்து செல்வது போன்றும், இறந்தவர் பயன்படுத்தும் வாசனை திரவியத்தின் வாசத்தை நுகர்ந்தது போல் உணர்ந்ததாகவும் அங்குள்ளவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
இதனால்தான் மரணம் நிகழ்ந்த வீடுகளில் 16 நாட்கள் துக்கம் அனுசரிப்போடு இறந்தவர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களை வைத்து வணங்குகிறார்கள்.