ஏற்றுமதியில் உண்டு ஏற்றம் தரும் வாய்ப்புகள்


ஏற்றுமதியில் உண்டு ஏற்றம் தரும் வாய்ப்புகள்
x

ஏற்றுமதி இறக்குமதி என்றாலே பலரும் சிக்கலான தொழிலாகவே பார்க்கின்றனர். ஆனால், அதன் வழிமுறைகள் தெரிந்துகொண்டால் அதை காட்டிலும் எளிதான தொழில் ஏதும் இல்லை என்று தான் கூறவேண்டும்.

நம்மூர் சந்தையில் என்னென்ன பொருட்கள் அதிகம் கிடைக்கும்; அது எந்தெந்த நாடுகளில் கிடைக்காது என்ற அடிப்படை ஆராய்ச்சியை மேற்கொண்டாலே போதும். வேளாண்மை பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள நாடு இந்தியா. வேளாண்மை சார்ந்த பொருட்களையும், அவை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்களையும் தயாரிப்பு இடங்களை சரியாக அடையாளம் காணவேண்டியது மிகவும் அவசியம். ஏற்றுமதி செய்யவேண்டும் என்பவர்கள் ஒன்று பொருட்களை உற்பத்தி செய்பவராகவோ அல்லது உற்பத்தி செய்பவர்களிடம் வாங்கி கைமாற்றுபவராகவோ இருக்கலாம்.

நம்நாட்டில் இருந்து அதிகமாக பாஸ்மதி, பாஸ்மதி அல்லாத அரிசி, எருமை இறைச்சி, மசாலா பொருட்கள், சர்க்கரை, போன்ற பொருட்கள் அதிகம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்சமயம், அரிசி ஏற்றுமதிக்கு சிக்கல்கள் இருப்பது அனைவரும் அறிவோம். அவ்வப்போது, பல்வேறு சூழல்களால் சில பொருட்களுக்கு அரசு தடை விதிப்பது இயல்பு. நாம் ஏற்றுமதி செய்ய சரியான பொருட்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அதை தொடர்ந்து, ஏற்றுமதிக்கான ஏழு பிரிவுகளின் கீழ் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டால் போதுமானது. இந்தியாவில் இருந்து, நடப்பாண்டில் அதிகளவில் பங்களாதேஷ் , சவுதி அரேபியா, வியாட்நாம், அமெரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளுக்கு அதிகம் பல்வேறு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பல நாடுகளுக்கு உறையவைக்கப்பட்ட ( frozen ) காய்கறிகள், பழங்கள், உண்பதற்கு தயாராகவுள்ள உணவுகள், சிறுதானியங்களில் உணவுகள், கடல் சார்ந்த உணவுகளின் தேவை, மூலிகை பொடிகள் அதிகளவில் உள்ளது. அனைவராலும் விரும்பப்படும் பொருட்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒருவர் ஒரு பொருளை மட்டும் தான் ஏற்றுமதி செய்யவேண்டும் என்ற வரையறைகள் இல்லை. இத்துறையில், தேங்காய் ஒன்றில் இருந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தொழிலை முழுமையாக புரிந்துகொள்ளும் முன், அதிக அளவில் முதலீடுகள் செய்வதை தவிர்க்கவேண்டும். இதுகுறித்த பயிற்சி தேவைப்படுபவர்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் ஏற்றுமதி இறக்குமதி மையத்தை அணுகலாம். சான்றிதழ் பெறுதல், எந்தெந்த நாடுகளுக்கு என்னென்ன பொருட்களின் தேவையுள்ளது உள்ளிட்ட அனைத்து வித பயிற்சிகளையும் அளிக்கின்றனர்.

ஏற்றுமதி செய்ய விரும்புவர்கள், www.apeda.gov.in/ www.dgft.gov.in/ www.indianspices.com/www.cocunutboard.gov.in/https://fieo.org/ போன்ற அரசு இணையதளங்களை தொடர்ந்து கவனித்து வரவேண்டியது அவசியம். அதன் வாயிலாக பல்வேறு ஏற்றுமதி சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள முடியும். மஞ்சள், காப்பி, ஆயில், ஜூட், டீ என ஒவ்வொரு பொருட்களுக்கும் அரசின் தனி வலைதளம் உள்ளது. அதில் பல்வேறு தகவல்களை ஏற்றுமதியாளர்கள் பெறலாம். ஏற்றுமதி என்பது இன்று கற்றுக்கொண்டு நாளை களமிறங்கும் தொழில் அல்ல; சற்று பொறுமையுடன் கற்றுக்கொண்டு, பயிற்சி பெற்று பின் தாரளமாக ஏற்றுமதி கடலில் மீன் பிடிக்கலாம்.


Next Story