பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
கேள்வி:- அதிக வெயிலுக்காக பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டதால், எங்களைப் போன்ற பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காதா? (கி.கோகுல் பிரசாந்த், 11-ம் வகுப்பு, பர்கூர், கிருஷ்ணகிரி)
பதில்:- கோடை வெயிலின் கொடூரத்தை தாங்கிக்கொள்ளும் வசதிகள், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இருந்தால் விடுமுறைக்கு தேவையில்லை.
கேள்வி:- கோபம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்:- கோபத்தை அடக்கினால் அது அன்பாக பாயும். அதை கடக்க முயன்றால் முட்கள் போல வளரும்.
கேள்வி:- எழுத்தார்வம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் பேனாவின் பயன்பாடு அதிகரித்துள்ளதா? குறைகிறதா? (என்.ராஜேந்திரன், மேல்புவனகிரி)
பதில்:- பேனா பிடித்து எழுதியவர்களுக்கு பேனாவே எப்போதும் உறுதுணை. எனவே பேனா மன்னர்கள் இருப்பார்கள்.
கேள்வி:- வானொலி - ஆகாஷ்வாணி. என்ன வித்தியாசம்? (சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்)
பதில்:- வானொலி - சொல்லச் சொல்ல இனிக்கும் தமிழ்மொழி. ஆகாஷ்வாணி - அர்த்தம் புரியாத இந்திப் பெயர்.
கேள்வி:- பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் புதிய பணி நேரம் (காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை) அமலுக்கு வந்தது போல, தமிழகத்திலும் அமலுக்கு வருமா? (எல்.கண்ணன், நங்கவள்ளி)
பதில்:- பஞ்சாப் பருவநிலைக்கு இது சாத்தியமே தவிர, தமிழ்நாட்டு பருவநிலைக்கு இது சாத்தியமில்லை.
கேள்வி:- மனிதனுக்கு ஏழு பிறவி உண்டு என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? (எச்.மோகன், மன்னார்குடி, திருவாரூர்)
பதில்:- உண்டு. ஒரே பிறவியில் 7 முறை பிறக்கின்றான்.
கேள்வி:- தாய், தாரம், காதலி - மூவரில் முதன்மையானவர் யார்? (ஆண்டோ, ஊட்டி)
பதில்:- நீங்களே சரியாக வரிசைப்படுத்தி விட்டீர்களே...
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி ஏற்பட்டால் அண்ணாமலையின் நிலைமை என்னவாகும்... (ஆர்.ஹரிகோபி, டெல்லி)
பதில்:- அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா.
கேள்வி:- திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளாரே? (எம்.நிர்மலா, புதுச்சேரி)
பதில்:- கவர்னரும் அரசியல்வாதி போல பேசியிருக்கிறார்.
கேள்வி:- கடவுள் இல்லை என்பவர்களை பார்த்து சிரிப்பதா, அழுவதா? என்று தெரியவில்லை என்று ரஜினிகாந்த் பேசியுள்ளது பற்றி... (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்:- இவர் நாத்திகவாதிகளை பார்த்து சொல்கிறார். அவர்களிடம் கேட்டால் இவரை பார்த்து இதையே சொல்வார்கள்.
கேள்வி:- மானேஜரிடம் காக்கா பிடிப்பதை விட பியூனை காக்கா பிடித்தால் காரியம் சாதிக்கலாம் என்கிறார்களே, ஏன்? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)
பதில்:- மானேஜரிடம் ஆக வேண்டிய காரியத்தை பியூனை காக்காய் பிடித்தாலே நிறைவேற்றிவிடலாம்.
கேள்வி:- ம.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலமே இல்லை, தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பேன் என்று ம.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த திருப்பூர் துரைசாமி கூறியுள்ளாரே? (கார்த்திகை செல்வன், திருப்பத்தூர்)
பதில்:- அதைத்தானே இப்போதும் ம.தி.மு.க. செய்து கொண்டு இருக்கிறது.
கேள்வி:- ஆபாச உடை அவர்களது ஆசையா, உரிமையா? (ஆர்.கிஷோர், செஞ்சி)
பதில்:- அடுத்தவர்களை ஆசைப்பட தூண்ட வைக்கும் அவர்களது ஆசை தானே தவிர உரிமையாக எடுத்துக்கொள்ள முடியாது.
கேள்வி:- இப்போதெல்லாம் கணவனை, மனைவி 'வாடா', 'போடா' என்று சர்வசாதாரணமாக கூப்பிடுவது எதை காட்டுகிறது? (கே.நடராஜன், திருவண்ணாமலை)
பதில்:- அளவில்லாத காதலைக் காட்டுகிறது.
கேள்வி:- யானைகள் ஊருக்குள் வர மனிதனின் பேராசைதான் காரணமா? (கவிதா ரவிக்குமார், ஈரோடு)
பதில்:- மனிதனின் பேராசை மட்டுமல்ல. யானைகளின் பேராசையும் காரணம்.
கேள்வி:- செங்கோல் அரசியலில் பா.ஜ.க. வென்றது என்கிறேன். சரியா? (ரவிக்குமார், நெல்லை)
பதில்:- இதில் யார் வென்றது, யார் தோற்றது? என்பதில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெருமை.
கேள்வி:- பெண்களால் தான் குடும்ப கவுரவம் கெடுகிறது என்கிறார்களே, உண்மையா? (குலசை நஜிமுதீன், மாம்பாக்கம், சென்னை-127)
பதில்:- குடும்ப கவுரவம் உயர்வதும் பெண்களால் தானே...
கேள்வி:- என்ன தீர்ப்பு வந்தாலும், உடனே அப்பீல் செய்து விடுகிறாரே ஓ.பன்னீர்செல்வம்? (எஸ்.மோகன், கோவில்பட்டி)
பதில்:- என்ன செய்வது... அவருக்கு சாதகமான தீர்ப்பு வரமாட்டேன் என்கிறதே...
கேள்வி:- 150 வயது வரை வாழும் வாழ்க்கையை கற்று வைத்து இருக்கிறேன் என்று சரத்குமார் சொல்கிறாரே. (மகாலிங்கம், தென்காசி)
பதில்:- அதை தொண்டர்களுக்கு கற்றுக்கொடுத்தால் 150 வயதுக்குள் அவர் முதல்-அமைச்சராகிவிடுவார்.
கேள்வி:- கொடிய விஷத்தை மக்களுக்கு கொடுக்கிறோம் என்ற வருத்தம் கொஞ்சம்கூட ஆட்சியாளர்களுக்கு இல்லை என்கிறாரே சீமான்? (எம்.செல்லையா, சாத்தூர்)
பதில்:- குடித்து பழகியவர்களுக்கு அந்த விஷமும் தேவாமிர்தமாக அல்லவா இருக்கிறது.