பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
கேள்வி:- கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோற்றுப் போனது எடப்பாடி பழனிசாமிக்கு சந்தோஷம் போல தோன்றுகிறதே? (சு.ஆறுமுகம், தூத்துக்குடி)
பதில்:- நாடாளுமன்ற தேர்தலில் தங்களிடம் பா.ஜ.க. அதிக சீட்டுகள் கேட்பதற்கு, இது ஒரு பிரேக் என்று நினைத்து இருக்கலாம்.
கேள்வி:- 'கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளை காணவில்லை' என்றார் ஜெயலலிதா. தற்போது, 'நமக்கு எதிரிகளே இல்லை' என்கிறார் அமைச்சர் துரைமுருகன். யாருடைய பேச்சு சூழ்நிலைக்கு பொருந்துவதாக இருக்கிறது? (சந்திரசேகரன், திருச்சி)
பதில்:- இருவருடைய பேச்சுமே, தங்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்குத்தானே தவிர யதார்த்த நிலை இல்லை.
கேள்வி:- மன பலம் - பண பலம். எது வெற்றி பெறும்? (ஆதிமூலம், சமயபுரம்)
பதில்:- நிச்சயமாக மன பலம் தான்.
கேள்வி:- பொது இடங்களில் மனைவியின் கடைக்கண் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா? (அ.விசுவநாதன், மேட்டூர்)
பதில்:- 'ஒழுங்காக இருங்கள்' என்று அர்த்தம்.
கேள்வி:- இன்றுள்ள கட்சிகளில் பணக்கார கட்சி எது? (கார்த்திகேயன், வாடிப்பட்டி, மதுரை)
பதில்:- கட்சியைக் கேட்கிறீர்களா? கட்சிக்காரர்களை கேட்கிறீர்களா?
கேள்வி:- 'அரசே மது விற்கும்போது கள்ளசாராயம் பெருகுவது ஏன்?' என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளாரே? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்:- அந்த விலை கட்டுப்படியாகவில்லை என்று தான் கள்ளசாராயத்தை நாடுகிறார்கள். அரசே மலிவு விலை மதுவோ, கள் விற்பனையோ கொண்டுவந்தால் ஏன் அங்கு போகப் போகிறார்கள்?
கேள்வி:- வாழ்க்கையில் வெற்றி ஏணியில் ஏறத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு உங்களின் ஆலோசனை என்ன? (ராஜலட்சுமி, வைரவன்பட்டி)
பதில்:- உழைப்பு... உழைப்பு... உழைப்பு தான்!
கேள்வி:- தாயின் கருவறையில் இருந்து கல்லறை வரை பிரச்சினைகளே வாழ்க்கையாக மாறிப்போனால் எப்படி சமாளிப்பது? (தங்கராசு, தென்காசி)
பதில்:- பிரச்சினைகளை கண்களுக்கு பக்கத்தில் வைத்து பார்த்தால் அவை பூசணிக்காய். தொலைவில் வைத்து பார்த்தால் சுண்டைக்காய்.
கேள்வி:- மனம் விரும்பி செய்துகொண்ட காதல் திருமணங்களில் பல விரைவில் கசந்து போவது ஏன்? (ரத்னசாமி, தர்மபுரி)
பதில்:- உண்மையான காதலுக்கு கசப்பே கிடையாது. வாழ்நாள் முழுவதும் இனிப்பு தான்.
கேள்வி:- வெற்றி எளிதாக கிடைத்தால் நன்றாக இருக்குமா? (என்.எஸ்.கே.செல்வகுமார், மேற்பனைக்காடு கிழக்கு)
பதில்:- கடும் உழைப்பில் பெறும் வெற்றியில் தான் சுகம் அதிகம்.
கேள்வி:- அரசு அலுவலகங்களில் தினம் ஒரு திருக்குறளை எழுதி வைக்கவேண்டும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாரே... அதில் லஞ்சம் பற்றிய குறளும் இடம்பெறுமா? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்:- நிச்சயம் இடம்பெறும். அந்தக்குறளை படிப்பவர்கள் 'லஞ்சம் தவிர்' என்பதை தங்கள் கொள்கையாக இறையன்பு போல எடுத்துக்கொண்டால் நல்லது.
கேள்வி:- 'மதுவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து குரல் கொடுக்க தயாராக இருக்கிறேன்' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளாரே... (எஸ்.மாணிக்கம், திருவண்ணாமலை)
பதில்:- இதில் எங்கேயோ பிசிறு தட்டுகிறதே...
கேள்வி:- காதலின் சக்தியை உணர முடிவது எப்போது? (ஆர்.ரெங்கசாமி, வடுகப்பட்டி)
பதில்:- காதலர்களின் உள்ளத்தில், செயலில் ஏற்படும் மாற்றத்தின் போது...
கேள்வி:- மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மச்சினிச்சி அமைவதெல்லாம்... (பெருமாள், நிலக்கோட்டை)
பதில்:- மச்சினிச்சி என்ன கிள்ளுக்கீரை என்று நினைக்கிறீர்களா? எல்லை மீறினால் அது அபாயம்.
கேள்வி:- தி.மு.க. அமைச்சர்கள் அடிக்கடி மாறி வருகிறார்களே, என்ன காரணம்? (பழனிச்சாமி, திண்டுக்கல்)
பதில்:- அவர்கள் எங்கே மாறுகிறார்கள். நிர்வாக வசதிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுகிறார்.
கேள்வி:- புடவை செலக்சனில் பல மணி நேரம் செலவழிக்கும் பெண்கள், புருஷன் செலக்சனில் மட்டும் கோட்டை விட்டு விடுகிறார்களே? (ஜி.ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)
பதில்:- இதற்கு பல மணி நேரம் செலவழிக்க முடியாதது தான் காரணம்.
கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? (மல்லிகா தேவராஜன், அருப்புக்கோட்டை)
பதில்:- காங்கிரஸ் தனியாக ஆட்சி அமைப்பதற்கு இந்த தேர்தலில் வாய்ப்பு இல்லை. இது அவர்களுக்கும் தெரியும்.
கேள்வி:- எனக்கு சமீபத்தில் தான் திருமணமாகியுள்ளது. என் கணவர் எப்போதும் மடியில் படுத்துக்கொண்டு, 'என்னை தூங்க வைக்க பாட்டுப்பாடு' என்கிறாரே... (ஆர்.காந்திமதி, பொள்ளாச்சி)
பதில்:- முதலில் மடியில் ஒரு குழந்தையை வைத்து பாட வைக்கும் வேலையில் அவரை ஈடுபடச் சொல்லுங்கள்.