பேனா மன்னன் பதில் சொல்கிறார்
கேள்வி:- என்.டி.ராமராவ் நூற்றாண்டுவிழாவில், 'மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேசத் தோன்றுகிறது', என்று ரஜினிகாந்த் பேசி யுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? (மு.ரா.பாலாஜி, சொர்ணகுப்பம், கர்நாடகா)
பதில்:- 'பழைய நினைப்புடா பேராண்டி...' என்ற பாடல் ஞாபகம் வருகிறது.
கேள்வி:- தமிழக கிராமங்கள் தற்போது வளர்ச்சி அடைந்து வருகிறதா? (ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்)
பதில்:- நிச்சயமாக... வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்கிறது.
கேள்வி:- தானத்தில் சிறந்தது எது? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)
பதில்:- எது தேவைப்படுகிறதோ, அதை தருவது.
கேள்வி:- செல்போனில் பேசி, கம்ப்யூட்டரில் எழுதிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் 'பேனா'வின் எதிர்காலம் எப்படித்தான் இருக்கும்? (சங்கீத சரவணன், மயிலாடுதுறை)
பதில்:- என்ன தொழில்நுட்பம் வந்தாலும், பேனாவின் மவுசு என்றும் குறையாது. காலத்தால் பேனாவை பிரித்துவிட முடியாது.
கேள்வி:- தி.மு.க.வுடன், ம.தி.மு.க.வை இணைக்கும் நோக்கம் இல்லை என்று வைகோ சொல்கிறாரே... (சந்திரா, ராஜபாளையம்)
பதில்:- இணைத்தால் என்ன பாதையில் செல்வாரோ... அதைத்தானே இப்போதும் செய்துகொண்டிருக்கிறார். பெயர்தான் இரண்டு - பாதை ஒன்றுதானே...
கேள்வி:- நேர்மையாக நடந்து கொள்பவர்கள் கோபக்காரர்களாக உள்ளார்களே, ஏன் இந்த முரண்பாடு? (ஜெ.மணிகண்டன், ஏ.கஸ்பா, ஆம்பூர்)
பதில்:- நேர்மையற்றதை பார்க்கும்போது கோபம் பொங்குவது இயல்பே.
கேள்வி:- 'பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்'. அதன் அர்த்தம் தான் என்ன? (டி.என்.ராமு, தேங்காமரத்துப்பட்டி)
பதில்:- தீயதை செய்தது ஒருவர், மாட்டிக்கொள்வதோ மற்றொருவர்.
கேள்வி:- ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவின் ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் காப்பாற்றவே சத்ரபதி சிவாஜி படையெடுத்தார் என்கிறாரே கவர்னர் ஆர்.என்.ரவி? (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)
பதில்:- கவர்னரின் பரபரப்பு பேச்சுகளில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான்.
கேள்வி:- பொதுநலவாதிகளின் உழைப்பு புகழுக்கா, விளம்பரத்துக்கா? (கே.நடராஜன், திருவண்ணாமலை)
பதில்:- புகழ் என்பது இறந்தபின் கிடைப்பது. விளம்பரம் என்பது இருக்கும்போது வாங்குவது.
கேள்வி:- போலி சாமியார்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளதற்கு காரணம் என்ன? (கே.எம்.ஸ்வீட்முருகன், கரடிகொல்லபட்டி, கிருஷ்ணகிரி)
பதில்:- போலி என்றுமே நிலைத்து நிற்காது. மக்கள் விழித்து கொண்டார்கள்.
கேள்வி:- வீட்டில் நடக்கும் மாமியார், மருமகள் சண்டையை சமாளிப்பது எப்படி? (ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்)
பதில்:- இந்த பக்கமும், அந்த பக்கமும் சாயாமல் நடுநிலை வகிப்பதே சாலச்சிறந்தது.
கேள்வி:- வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் குமுறுகிறாரே... தமிழக மக்களுக்கு தமிழார்வம் இல்லையா? (வசீகரன், தேனாம்பேட்டை, சென்னை-18)
பதில்:- நியாயமான குமுறல். தமிழார்வம் இப்போது கண்டிப்பாக தேவை.
கேள்வி:- மிஸ் கூவாகம் அழகிப்போட்டி எப்படி? (சோ.ராமு, திண்டுக்கல்)
பதில்:- அழகு என்பது எல்லோருக்கும் உண்டு. இவர்களுக்கும் அதில் விதிவிலக்கு கிடையாது.
கேள்வி:- மகிழ்ச்சி எப்போது நம்மை தேடி வரும்? (எச்.பகதூர், ஜமாலியா லைன்)
பதில்:- மற்றவர்களை மகிழ்வித்தால் நம் வீட்டின் கதவை மகிழ்ச்சி தானாக தட்டும்.
கேள்வி:- குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரில் யார் அதிகம் பொய்பேசக்கூடாது? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)
பதில்:- இருவருமே ஒருவரிடம் ஒருவர் பொய் பேசாமல் இருந்தால் வாழ்க்கை இனிக்கும்.
கேள்வி:- பணத்தை மட்டுமே பார்த்து நம்மிடம் பழகும் நண்பர்களிடம் இருந்து விலகுவது சரியா? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்:- அப்படிப்பட்டவர்கள் நண்பர்களே இல்லையே.
கேள்வி:- காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடும் இளசுகள், திருமண நாளை கொண்டாடுவதில்லையே? (ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை)
பதில்:- எதிர்பார்ப்பில் இருக்கும் உற்சாகம் அடைந்த பிறகு ஏற்படுவதில்லை.
கேள்வி:- தோல்வி மேல் தோல்வி அடைவோருக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)
பதில்:- ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி ஏறும் படிக்கட்டு. விடாமுயற்சி செய்தால் வெற்றி பக்கத்தில்தான் இருக்கிறது.
கேள்வி:- நம்மை துச்சமாக நினைப்பவர்கள் பற்றி... (கமலி வெங்கட், சேலம்)
பதில்:- அவர்களை விட உயர்ந்து உயர்ந்து நிற்பேன் என்று சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- தீபாவளி என்றால் பட்டாசு. பொங்கல் என்றால் கரும்பு. ரம்ஜான் என்றால் பிரியாணி. சித்திரைக்கு என்ன? (கார்த்திகைசெல்வன், அறந்தாங்கி )
பதில்:- சித்திரை என்றால் மனதுக்கு பிடித்ததை மகிழ்ந்து உண்ணுதல்.