பேனா மன்னன் பதில் சொல்கிறார்


பேனா மன்னன் பதில் சொல்கிறார்
x

அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.

கேள்வி: தோல்வியை நினைத்து துவண்டுபோகும் உள்ளத்துக்கு உங்களின் அறிவுரை என்ன? (ராமச்சந்திரன், கும்பகோணம்)

பதில்: தோல்வி என்பது நிலையல்ல. அது ஒரு கருமேகம். கடந்து போகும்.

கேள்வி: நடிகர் விஜய் இரவு நேர பாடசாலை தொடங்குகிறாரே, எல்லோருக்கும் அவர் முன்மாதிரியாகி விட்டாரல்லவா? (எஸ்.ஆர்.அய்யப்பன், மதுரை)

பதில்: உங்களுக்கு தெரியாதா? ஐ.ஏ.எஸ் அதிகாரி இறையன்பு 1997-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக இருந்தபோது நிலவொளி பள்ளிக்கூடம் தொடங்கினார். அது இன்றும் நடந்து வருகிறதே...

கேள்வி: மது பிரியர்களை எப்படி திருத்துவது? (த.நேரு, வெண்கரும்பூர்)

பதில்: மனைவியோ, காதலியோ நினைத்தால் திருத்திவிடலாம்.

கேள்வி: துணி எடுக்கும்போது ஜவுளிக்கடையில் 50 சதவீத தள்ளுபடி என்று சொல்கிறார்களே... அதனால் கடைக்காரருக்கு லாபமா? துணி எடுப்போருக்கு லாபமா? (எஸ்.விஜயன், காட்பாடி, வேலூர்)

பதில்: வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தும் உத்தி இது.

கேள்வி: மானம் போனால் திரும்ப வரும். உயிர் போனால் வருமா? எதற்காக இந்த ஆணவ கொலையெல்லாம் நடக்கிறது? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

பதில்: இது மானத்துக்காக நடக்கவில்லை. தன்முனைப்புக்காக (ஈகோ) நடக்கிறது.

கேள்வி: நீதித்துறைக்கும், காவல்துறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (டி.ஆர்.உதயரசன், தேங்காமரத்துப்பட்டி)

பதில்: சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது, குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறை. நீதி வழங்குவது நீதித்துறை.

கேள்வி: இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் அழகான இளம்பெண்களை விட, வயதான ஆண்டிகளை அதிகம் விரும்புவது ஏன்? (எச்.மோகன், திருவாரூர்)

பதில்: நன்றாக பழுத்த பழங்களை விரும்புகிறார்கள் போலும். ஆண்டிகள் அனுபவமிக்கவர்கள்.

கேள்வி: மற்ற துறைகளுக்கெல்லாம் ஓய்வு பெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை போன்று, சினிமா மற்றும் அரசியல் துறைகளில் வயது வரம்பு நிர்ணயம் இல்லாதது ஏன்? (என்.ராஜேந்திரன், மேல்புவனகிரி)

பதில்: மருத்துவ துறையையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி: எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும் உள்ளது என்று செல்லூர் ராஜூ பேசியுள்ளாரே... (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)

பதில்: செல்லூர் ராஜூவின் தெர்மாக்கோல் ஜோக் போலத்தான் இதுவும்.

கேள்வி: ஒருவருக்கு எதில் வலிமை வேண்டும்? மனதிலா, உடலிலா? (எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர், திருச்சி)

பதில்: உடலின் வலிமையும் மனதாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

கேள்வி: பொதுமக்களின் நினைவாற்றல், ஞாபக மறதி. அரசியலுக்கு எது பிடிக்கும்? (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)

பதில்: வாக்குறுதி நிறைவேற்றலின்போது நினைவாற்றலும், தேர்தலின்போது ஞாபக மறதியும் பிடிக்கும்.

கேள்வி: எந்த விஷயத்தில் மனைவியிடம் விட்டுக்கொடுக்கலாம்? (குலசை நஜிமுதீன், மாம்பாக்கம், சென்னை-127)

பதில்: இல்லம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது.

கேள்வி: ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவரண்சிங் பணி ஓய்வுபெற்று சொந்த மாநிலமான பஞ்சாப்பில் சென்று செட்டில் ஆகிவிட்டாரா அல்லது தமிழ்நாட்டிலேயே இருக்கிறாரா? (செல்வராஜ், கிருஷ்ணாநகர், போரூர்)

பதில்: நல்ல தமிழ் பேசி, தமிழராகவே மாறிவிட்ட சுவரண்சிங் தமிழ்நாட்டிலேயே வாழ்கிறார்.

கேள்வி: அந்தரங்கம் புனிதமானது என்கிறார்களே, ஏன்? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)

பதில்: அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப்பார்ப்பது அநாகரிகத்தின் உச்சம்.

கேள்வி: மனிதனின் மனம் அடிக்கடி மாறுவதற்கு என்ன காரணம்? (அ.சொக்கலிங்கம், தஞ்சாவூர்)

பதில்: மனித மனம் ஒரு குரங்கு. அடிக்கடி தாவும்.

கேள்வி: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஊழல் முதல்-அமைச்சர் என்று மறைமுகமாக சொன்னாரே... இதை அவர் உயிருடன் இருக்கும்போது சொல்லவேண்டியது தானே... (எச்.பஹதூர், ஜமாலியா லைன்)

பதில்: அப்போது அண்ணாமலை அரசியலில் இல்லை. சுறுசுறுப்பான போலீஸ் அதிகாரியாக கர்நாடகாவில் வலம் வந்தார்.

கேள்வி: எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை மோதல் எதில் போய் முடியும்? (ஆர்.கிஷோர், திண்டிவனம்)

பதில்: சண்டை முடிந்தது. சமாதானம் என்பதில்தான் போய் முடியும்.

கேள்வி: பூலோக சொர்க்கம் என்று நீங்கள் எதனை சொல்வீர்கள்? (ப.அண்ணாமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்)

பதில்: நல்ல அன்னை, தந்தை, பிள்ளைகள் வாழும் குடும்பம் தான்.

கேள்வி: நான் ரொம்ப குண்டாக இருக்கிறேன். என் கணவர் என்னை மடி மீது உட்கார வைத்து கொஞ்ச வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் என் வெயிட்டை அவர் தாங்குவாரா? என்பது சந்தேகமாக இருக்கிறது. (எஸ்.சுவர்ணலட்சுமி, கோவை)

பதில்: அதனால் என்ன? நீங்கள் அவரை மடி மீது உட்கார வைத்தோ, படுக்க வைத்தோ விடிய விடிய கொஞ்சுங்கள்.


Next Story