சின்னத்திரையில் சினிமா காட்டும் ஓ.டி.டி.


சின்னத்திரையில் சினிமா காட்டும் ஓ.டி.டி.
x

‘ஓடி விளையாடு பாப்பா’ பாடல் தெரியாத குழந்தைகள் கூட இருக்கலாம் ஆனால் ஓ.டி.டி. தெரியாமல் இருக்காது என்று சொல்லும் அளவிற்கு தற்போது ஓ.டி.டி. பெரும்பான்மையானவர்களின் வீடுகளுக்குள்ளும், செல்போன்களுக்குள்ளும் நுழைந்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

கற்பனை காட்சிகளை கண் முன் கொண்டு வந்து அதை நம் உணர்வுகளுடன் 'கனெக்ட்' செய்வதில் சினிமாவுக்கு நிகர் சினிமா தான்.

உருகாத கல் நெஞ்சையும் உருகவைத்தது முதல், ஓரிடத்தில் அமராத துறு, துறு மனிதர்களையும் கட்டிப்போட்ட பெருமை சினிமாவையே வெகுவாக சேரும்.

'பீல் குட் மூவி'(ரொம்ப நன்றாக இருந்தது) என்று தொடங்கி 'ஒரு முறை பார்க்கலாம்' என்பதெல்லாம் நிகழ்கால சினிமா விமர்சனத்திற்கு உபயோகிக்கப்படும் சொல்லாடல்கள். சினிமா கோலொச்ச தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை சினிமா என்றால் கொண்டாட்டம். அந்த கொண்டாட்டத்திற்கான இடம் தியேட்டர் என்று தான் இன்றளவும் இருக்கிறது.

என்னதான் டி.வி.யில் கேசட் போட்டு படம் பார்த்தாலும் தியேட்டருக்கு போய் அந்த பெரிய திரையில் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவில்லாததாகவே இருக்கும் என்றால் அது மிகையில்லை. அதுவும் தங்களது அபிமான நடிகரின் சினிமாவை முதல் நாள் முதல் காட்சி பார்த்த அனுபவம் கொண்டவர்களுக்கு அது பேரானந்தமாக இருக்கும் என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை. இப்படி சினிமா, தியேட்டர் என இரண்டும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருப்பவையே.

சினிமா பார்க்கும் பழக்கம் இந்திய மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. காலங்கள் மாறினாலும் மக்களுக்கு சினிமாவின் மீதுள்ள காதல் மாறவில்லை என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வண்ணம் பல்வேறு விதமான சினிமாக்கள் நாள்ேதாறும் ரிலீசாகி கொண்டு தான் இருக்கிறன.

இவ்வாறு இருக்க மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பழமொழிக்கு ஏற்ப சினிமாவை ரசிகர்களிடம் கொண்டு செல்ல பல்வேறு வழிகளும் சமகாலத்தில் உருவாகி உள்ளது. அவற்றில் ஒன்று தான் இணையவழி சேவையான 'ஓ.டி.டி'.

'ஓவர் தி டாப்'

இந்த படத்த எந்த தியேட்டர்ல பாத்திங்க? தலைவர் படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ்? என்ற கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த காலம் மாறி தற்போது இந்த படம் எந்த ஓ.டி.டியில் பார்த்தீங்க? இந்த வாரம் ஓ.டி.டி.ல என்ன படம் 'ரிலீஸ்'?. இந்த படம் எந்த ஓ.டி.டி.ல இருக்கு? என்ற கேள்விகளையும் கேட்க முடிகிறது.

இதற்கு மத்தியில், ஓ.டி.டி.யா, அப்படின்னா என்ன? என்ற கேள்வியும் மிகவும் பெரிதாக பல தரப்பு மக்களிடம் ஒலித்துகொண்டு இருக்கிறது.

'ஓவர் தி டாப்' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் தான் ஓ.டி.டி என்று சொல்லப்படுகிறது. ஓ.டி.டி. பற்றி அறிவதற்கு முன்பு அதன் முன்னோர்கள் பற்றி ஒரு குட்டி பிளாஷ்பேக்கை பார்க்கலாம். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி இந்திய மக்களின் வாழ்வியலில் இணைந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஆம்... சிறுக, சிறுக காசை சேர்த்து வைத்து தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று சினிமா பார்த்த காலங்களும் உண்டு. அப்படி குடும்பத்துடன் சென்று சினிமா பார்த்து வந்தது ஒரு சுற்றுலாவுக்கு சென்று வந்ததற்கு சமமாகவே அப்போது கருதப்பட்டது.

இப்படி தியேட்டர்களில் காட்சிப்படுத்தப்பட்ட சினிமா விழிகளுக்கு விருந்து அளித்து கொண்டிருந்த நிலையில், டி.வி., இந்தியர்கள் இடையே பிரபலமடைய தொடங்கியது. இந்தியர்களின் இல்லங்களில் டி.வி. இடம் பிடிக்க தொடங்கிய காலத்தில் நாம் அறிந்த முதல் சேனல் தூர்தர்ஷன்.

வீடுகளின் மாடியில் பொருத்தப்பட்ட 'ஆண்ெடனா' துணையோடு பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி நம்மை மகிழ்வித்ததும் இந்த தூர்தர்ஷன் தான். அந்த காலகட்டத்தில் தமிழ் நிகழ்ச்சிகளுக்காக வாரம் ஒருமுறை நாம் காத்திருந்தது இன்றும் பலரின் நினைவலைகளில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் வரும் 'ஒளியும் ஒலியும்' மற்றும் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமைகளில் திரையிடப்படும் தமிழ் திரைப்படமும் அதற்கு உதாரணம்.

சி.டி., டி.வி.டி.க்கள்

இது ஒருபுறம் இருக்க அந்த காலகட்டத்தில் தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் தியேட்டர்களில் வெளியாகும் புதிய திரைப்படங்கள் வெற்றி விழா கொண்டாடிய பிறகு, அதன் வீடியோ கேசட்டுகள் வெளியாகும். அந்த கேசட் மற்றும் அதை பார்ப்பதற்கான டெக்குகளை வாடகைக்கு விடுவதற்கென்றே அப்போது பிரத்யேகமாக கடைகள் இருந்தன.

1991-ம் ஆண்டு அழகன் படத்தில் நடிகர் மம்முட்டியும், நடிகை பானுப்பிரியாவும் அப்படி ஒரு கேசட் கடையில் சந்திக்கும் காட்சிகளை அந்த திரைப்படத்தில் வைத்திருப்பார்கள். இப்படி அது ஒரு அதிக வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் அன்றைய காலத்தில் இருந்தது. நவீன கால இளைஞர்களுக்கு இப்படியும் கடைகள் இருந்ததை கேட்கும் பொழுது வியப்பாகவும், நகைச்சுவையாகவும் கூட இருக்கலாம்.

காலத்தோடு சேர்ந்து நாம் வளர்ந்தது போல் நம்மோடு சேர்ந்து தொழில்நுட்பங்களும் வளரத்தொடங்கியது. தூர்தர்ஷனை தொடர்ந்து சாட்டிலைட் சேனல்கள் வர, வளரத்தொடங்கின. இதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு பிரத்யேக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் இருந்தனர். மேலும் கேசட்டுகளில் இருந்து சி.டிக்களாகவும், டி.வி.டிக்களாகவும் தொழில்நுட்பம் மேம்படத் தொடங்கியது. அப்போது கேசட் கடை நடத்தியவர்கள் சி.டி. மற்றும் டி.வி.டி. கடைகளாக தங்கள் தொழிலை மாற்றினர்.

இதோடு தியேட்டர்களில் ஓடி வெற்றி கண்ட திரைப்படங்களை சாட்டிலைட் சேனல்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக்கொண்டு அடுத்த விஷேச நாட்களில் தங்களின் சேனல்கள் வாயிலாக வீடுகளுக்கே கொண்டு வந்தனர். விளையாட்டு, பாடல், செய்திகள், நாடகம், திரைப்படம் என அனைத்தும் ஒரே சேனல்களில் ஓளிபரப்பப்பட்டு வந்த நிலையில் விளையாட்டு, பாடல், செய்திகள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சேனல்கள் என சேனல்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் பல தரப்பட்ட சேனல்கள் நிரம்பிய கேபிள் டி.வி.யில் விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்ப்பதற்கு ஏதேனும் வழியில்லையா என்று மக்கள் சிந்தித்துக்கொண்டிருந்த காலத்தில் அதற்கும் டி.டி.எச். வாயிலாக துணை புரிந்தது தொழில்நுட்பம். இந்த டி.டி.எச் தொழில்நுட்பத்தின் மூலம் விரும்பிய சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கும் வசதி பயனாளர்களுக்கு கிடைத்தது.

இணையவழியாக...

90'ஸ் கிட்சுகளின் ஆனந்தமான பள்ளிப்பருவ வாழ்க்கையை நீளமான பிளாஷ்பேக்காக சொன்ன நீங்க அதுல ஓ.டி.டி.னா என்னான்னு இன்னும் சொல்லவே இல்லையே...என்று தானே யோசிக்கிறீர்கள், சொல்கிறோம் வாருங்கள்...

பாரம்பரியமாக தியேட்டர்களில் மட்டும் ரசித்த சினிமா, டி.வி. சேனல்களில் மட்டும் ரசித்த நாடகம், செய்திகள், கிரிக்கெட், பாடல் என அத்தனை நிகழ்ச்சிகளையும் விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் இருந்து இணையவழியாக டி.வி மட்டுமின்றி கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்களில் கண்டுகளிக்க வழிவகை செய்வதுதான் ஓ.டி.டி. என்று அழைக்கப்படுகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் அதிவேக இன்டெர்நெட் சேவையின் வழியாக சினிமா, பாடல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை நமக்கு வழங்கும் அனைத்தும் ஓ.டி.டி. தான். கல்வி, மற்றும் பல்வேறு அறிவியல் தேவைகளுக்காக தொடங்கப்பட்ட இன்டெர்நெட் சேவை, பொழுதுபோக்கு அம்சங்களில் நுழைய தொடங்கி அதில் புதுமைகளை புகட்டி வருகிறது. அந்த புதுமையில் தற்போது முதன்மையில் இருப்பது ஓ.டி.டி. என்றால் அது மிகையல்ல.

ஒரு நிகழ்ச்சியை அது ஒளிபரப்படும் நாள் மற்றும் நேரத்திற்காக காத்திருந்து கண்டுகொண்டிருந்த நமக்கு இன்டர்நெட் துணையுடன் அதே நிகழ்ச்சியை நாம் விரும்பிய நேரத்தில் பார்க்க வழிவகை செய்ததும், குறைந்த விலையில் வழங்கப்பட்ட அதிவேக அதிக டேட்டா இன்டெர்நெட் சேவைகள், ஸ்மார்ட் டி.வி.கள் என அனைத்தும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ஓ.டி.டி.யின் பக்கம் கவர்ந்து இழுத்துள்ளது.

மேலும் கேபிள் டி.வி. சேனல்களை போல ஓ.டி.டி.க்கென்று பிரத்யேக தளங்களும் உள்ளன. உதாரணமாக நமக்கு நன்கு பரிட்சயமான 'யூடியூப்' ஒரு ஓ.டி.டி. தளம் தான். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, சோனிலிவ், டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிடவைகள் பிரபலமான ஓ.டி.டி. தளங்கள். மேலும் டி.வி. விளம்பரங்களில் அடிக்கடி வரும் 'ஸ்பாடிபை', 'விங்க்' போன்ற பாடல்களுக்கான தளங்களும் ஓ.டி.டி. தளங்களே ஆகும்.

இப்படி சின்னத்திரையின் வாயிலாக நமக்கு சினிமா விருந்தளிக்கும் ஓ.டி.டி.யை ஆண்ட்ராய்டு செயலிகள், வலைப்பக்கங்கள் வழியாக நாம் பெற முடியும். கேபிள் டி.வி.க்களுக்கான சந்தாக்களை போல ஓ.டி.டி. சேவைகளை மாத, வருட சந்தாக்கள் செலுத்தியே பெற முடியும்.

மேலும் சில ஓ.டி.டி.யின் ஆண்டு சந்தா குடும்பத்துடன் ஒருமுறை தியேட்டருக்கு சென்று வருவதை விட மிக குறைவாக இருப்பதாகவும் ஓ.டி.டி.பிரியர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி தியேட்டருக்கு பிறகு சி.டி., டி.வி.டி.க்களில் திரைப்படங்கள் முன்பு வந்தது போல் தற்போது தியேட்டருக்கு பிறகு ஓ.டி.டி.யில் திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது. இதனால் ஓ.டி.டி.பிரியர்கள் அதிகரித்திருப்பதாகவும் அறிக்கைகளும், பயனாளர்களும் தெரிவிக்கின்றனர்.

ஓ.டி.டி.யின் வருகை மற்றும் வளர்ச்சி தியேட்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதா? இல்லையா? என்ற விவாதங்கள் தற்போது அதிகரித்து வந்தாலும் செலவழிக்கும் நேரத்திற்கும், பணத்திற்கும் திருப்தி அளிக்கும் எந்த ஒரு விசயத்திற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத் தான் செய்யும் அது சினிமா விருந்தளிக்கும் ஓ.டி.டி.க்கும் பொருந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஓ.டி.டி.யின் வரலாறு

உலக அளவில் முதலில் தொடங்கப்பட்ட ஓ.டி.டி. தளமாக கருதப்படுவது 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'நெட்பிளிக்ஸ்' என்ற ஓ.டி.டி. தளம் தான். அதேபோல் இந்திய அளவில் முதல் ஓ.டி.டி. தளம் என்ற பெயரை 2008-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட 'பிக்பிளிக்ஸ்' பெறுகிறது.

மேலும் 'நெக்ஸ்ஜிடிவி' இந்திய அளவில் உருவாக்கப்பட்ட முதல் ஓ.டி.டி. செயலி ஆகும். மேலும் நாம் அதிகம் ரசித்து பார்க்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை 2012, 2013- ம் ஆண்டுகளில் நமது செல்போன்களுக்கு கொண்டு வந்ததும் இந்த 'நெக்ஸ்ஜிடிவி' செயலி தான். தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஜீ நிறுவனத்தால் தொடங்கப்பட்ட 'டிட்டோ டி.வி.' என்ற ஓ.டி.டி. தளம் ஜீ, ஸ்டார் சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை இணைய வழியாக வழங்கியது. தற்போது இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட ஓ.டி.டி. தளங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் இந்தியாவில் உள்ள ஓ.டி.டி. தளங்களில் அனைத்து மொழிகளின் திரைப்படங்களை நம்மால் காணமுடிகிறது. இவை சப்-டைட்டில்களுடன் வருவதால் நமக்கு தெரிந்த மொழிகள் மட்டுமின்றி பிறமொழி படங்களையும் பார்க்க நமக்கு துணை புரிகிறது. சில ஓ.டி.டி. தளங்களில் இந்தியாவில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகளில் பிறமொழி படங்கள் 'டப்பிங்' செய்யப்பட்டிருப்பதால் அவை சினிமா ரசிகர்களை இன்னும் ஈர்த்துள்ளது. தேசம் முழுவதும் ஓ.டி.டி பிரியர்கள் அதிகரிக்க தொடங்கியதால் இந்தியாவில் உள்ள மொழிகளான மராத்தி, பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளின் பிரத்யேக ஓ.டி.டி. தளங்களும் தொடங்கப்பட்டு அந்த மாநிலத்தில் மட்டுமின்றி அனைத்து ஓ.டி.டி. ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

ஓ.டி.டி.யில் ரிலீசான வெற்றி படங்கள்

ஓ.டி.டி.யில் நேரடியாக ரிலீசாகி மக்களிடம் வரவேற்பை பெற்ற சில திரைப்படங்களை இங்கே காணலாம்.

நடிகர் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று', 'ஜெய்பீம்' திரைப்படங்கள் 'அமேசான் பிரைமில் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது, ஆர்.ஜே பாலாஜி, நயன்தாரா நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் 'டிஸ்னி ஹாட்ஸ்டாரில்' வெளியானது. அதேபோல் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிஸ்னிஹாட் ஸ்டாரில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் பீல்குட் மூவி ரகத்தில் இருந்தது. அதேபோல் சமீபத்தில் ஜீ5 ஓ.டி.டி.யில் வெளியான 'அயலி', கடந்த ஆண்டு வெளியான விலங்கு, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட தமிழ் வெப் சீரியல்களும் மக்கள் மனம் கவர்ந்தது.

கொரோனா காலத்தில் பேரிடம் பிடித்தது

கடந்த 2019-ம் ஆண்டு வரை பெரும்பான்மையான இந்தியர்களுக்கு 'ஓ.டி.டி.' என்ற ஒன்று பரிட்சயம் இல்லாத ஒன்றாகவே இருந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் போடப்பட்ட ஊரடங்கு அதன் காரணமாக மூடப்பட்ட உலகமுமே 'ஓ.டி.டி.' என்ற உலகம் விரிவடைவதற்கு விதை விதைத்தது. உலகையே புரட்டிப்போட்ட ஊரடங்கின் போது என்ன செய்வதென்று அறியாமல் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.

டி.வி. சேனல்களும் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகளையே ஒளிபரப்பி மக்களை இன்னும் இறுக்கமடைய செய்தது. இறுக்கங்களால் வரும் எதிர்மறை எண்ணங்களை குறைப்பதற்கும், மகிழ்வோடு பொழுதை கழிப்பதற்கும் இணையத்தை நாடிய மக்களுக்கு ஓ.டி.டி. விடைமட்டுமின்றி, விருந்தளிக்கவும் தொடங்கியது. முடங்கிய காலத்தில் முடிக்கப்பட்ட புதிய சினிமாக்களும், தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. கேபிள் டி.வி.யில் இருந்த சந்தாதாரர்கள் ஓ.டி.டி.பக்கம் திரும்பத் தொடங்கினர்.

அப்போது 'நெட்பிளிக்ஸ்', 'அமேசான் பிரைம்' போன்ற பிரபலமான ஓ.டி.டி. தளங்களே ஆதிக்கம் செலுத்திய நிலையில், நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிய ஓ.டி.டி.யின் பயனாளர்கள் எண்ணிக்கை 'சோனிலிவ்', டிஸ்னி ஹாட்ஸ்டார்', ஜீ5 போன்ற ஓ.டி.டிக்களையும் தங்கள் நிகழ்ச்சிகளால் தடம் பதிக்க செய்தது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு தியேட்டர்கள் மூடப்பட்டதும் அப்போது நேரடியாக அதில் சினிமாக்கள் ரிலீஸ் செய்யப்பட்டதும் மட்டுமே ஓ.டி.டி.யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூற முடியாது. ஓ.டி.டி.யின் பலமாக கருதப்படுவது அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும், அதன் கரு மற்றும் கதைக்களங்களும் தான்.

மேலும் ஓ.டி.டி.யில் மட்டுமே பிரத்யேகமாக திரையிடப்படும் வெப் சீரிசுகள் இளைஞர்களை வெகுவாக கவரத் தொடங்கியது. சுமார் 7-9 மணி நேரம் பல எபிசோடுகளாக ஓ.டி.டி.யில் வெளியிடப்படும் வெப் சீரிசுகளை ஒரே நாளில் அமர்ந்து இளைஞர்கள் காண தொடங்கினர். இரண்டு முதல் மூன்று மணி நேர திரைப்படங்கள் மத்தியில் விரிவாக எடுக்கப்பட்ட இந்த வெப் சீரிசுகள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 70 நிமிடங்கள் ஓ.டி.டி.யில் செலவழிப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


Next Story