என்.எல்.சி. நிர்வாகம் என்ன சொல்கிறது?


என்.எல்.சி. நிர்வாகம் என்ன சொல்கிறது?
x

ஒவ்வொரு நிதியாண்டிலும் லாபங்களை ஈட்டிவந்த என்.எல்.சி. நிர்வாகம், சமீபத்தில் 2023 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் 31-ந்தேதியுடன் நிறைவடைந்த கால்நிதியாண்டில் சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதாவது, 600 கோடி யூனிட் வரைக்கும் மின் உற்பத்தியை செய்து இருக்க வேண்டும், ஆனால் 400 கோடி யூனிட் என்கிற நிலையில்தான் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு பழுப்பு நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம்.

2-வது நிலக்கரி சுரங்கத்தை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட வேண்டியது இலக்கு. ஆனால் தற்போது 18 ஆயிரம் டன் தான் நிலக்கரி மட்டுமே வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் 4 யூனிட்டில் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் என்.எல்.சி.யில் உள்ள மின்நிலையங்களில் மின்உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு 76 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் 2.50 கோடி டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதுவே 2022 ஏப்ரல் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரைக்கும் 2.35 கோடி டன்கள்தான் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. நிலக்கரி வெட்டி எடுக்கும் அளவு குறைந்ததால், தற்போது 2-வது சுரங்கத்தில் விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த வேண்டியது இருக்கிறது.

அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது, மும்முடி சோழகன் பகுதியில் 2000 முதல் 2005-ம் ஆண்டு காலக்கட்டத்தில் நடைபெற்றது. வளையமாதேவி, கத்தாழை, கீழ்பாதி, மேல்பாதி பகுதியில் 2006-13 ம் ஆண்டு காலக்கட்டத்திலும், கரிவெட்டி பகுதியில் 2014-ம் ஆண்டுக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 5 கிராமங்களிலும் சேர்த்து 603 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கு, நெய்வேலி இந்திராநகர் 'ஏ' குடியிருப்பில் 600 சென்ட், 30-வது வட்டத்தில் புதிதாக உள்ள 'எச்' குடியிருப்பில் 1,000 சென்ட் நிலமும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

நிலம் தருகிறவர்களுக்கு பணம் கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படமாட்டாது. அதாவது, ஒருவர் வசித்து வரும் வீட்டை அவர், என்.எல்.சி.க்கு கொடுக்கிறார் என்றால் அவருக்கு வீடு கட்டுவதற்கு 5 சென்ட் நிலமும், 23 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும் கொடுக்கப்படுகிறது. அதே நபர் தனக்கு என்.எல்.சி. கொடுக்கும் குடியிருப்பில் இடம் வேண்டாம் என்று சொன்னால் அவருக்கு வீடு கட்டுவதற்கான இடத்துக்கு பதிலாக ரூ.5 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்படும்.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய பணம் தற்போது முழுமையாக ஒரே தவணையாக வழங்கப்பட்டு விடுகிறது என்கிறது, என்.எல்.சி. நிர்வாகம்.


Next Story