விரும்பிய விளையாட்டை விளையாடுங்கள்.. இன்று தேசிய விளையாட்டு தினம்..!


இன்று தேசிய விளையாட்டு தினம்..!
x

மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவில் ஆக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்டு 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில், உடற்திறன், ஆரோக்கியம் மற்றும் விளையாட்டுகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட கேலோ இந்தியா இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு திட்டங்களை தொடங்குவதற்கு அரசாங்கம் இந்த நாளை ஒரு தளமாக பயன்படுத்துகிறது.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜுனா விருது, தயான் சந்த் விருது மற்றும் துரோணாச்சார்யா விருது போன்ற அங்கீகாரங்களுடன் விளையாட்டு வீரர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விளையாட்டு நிறுவனங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குகின்றன. பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், விளையாட்டு விழாக்கள் மற்றும் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஒரு சில நகரங்களில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தலைமையில் மராத்தான்கள், உடற்பயிற்சி முகாம்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன. பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அன்றாட வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. சமூக நிகழ்வுகளானது, விளையாட்டுத் திறனை கொண்டாடுவதற்கு மக்களை ஒன்றிணைக்கிறது.

இன்றைய தினத்தில் மேஜர் தயான் சந்துக்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். நாட்டு மக்களுக்கு விளையாட்டு தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாட்டு மக்கள் நல்ல உடற்தினனுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான குடிமகன் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குகிறான், ஆரோக்கியமான சமுதாயம் வளமான நாட்டை உருவாக்குகிறது. 2047-ம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க, ஒவ்வொரு குடிமகனும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கு, அனைவரும் நல்ல உடற்திறனுடன் இருக்கவேண்டியது அவசியம்" என்றார்.

ஆரோக்கியமாக இருக்க விளையாட்டுகளில் ஈடுபடுவது அவசியம் என்று கூறிய அவர், ஒவ்வொருவரும் தங்கள் பிசியான கால அட்டவணையில் இருந்து ஒரு மணிநேரம் ஒதுக்கி, தங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாட வேண்டும், என கேட்டுக்கொண்டார். தானும் இன்று ஒரு மணி நேரம் கால்பந்து விளையாட உள்ளதாக கூறினார்.

தேசிய விளையாட்டு தினமான இன்று ஒரு நாள் மட்டுமல்லாமல், தங்களுக்கு பிடித்தமான விளையாட்டை விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடுவதற்கும், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் ஊக்குவிக்கவேண்டும்.


Next Story