கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்.. வாழ்க்கைக்கு வழிகாட்டும் கணிதம்
பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்விலும் இணை பிரியாததாக உள்ளது.
இந்த உலகத்தில் அறிவு சார்ந்த எல்லா இடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் கணிதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைத்து அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும் நுணுக்கத்திற்கும் கணிதமே முக்கிய வழி காட்டுதலாகத் திகழ்கிறது.
இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல் போன்று உலகின் பல துறைகளில் முக்கியமான கருவியாக கணிதம் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தை மற்றத் துறைகளில் பயன்படுத்துவது தொடர்பான பயன்பாட்டுக் கணிதம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களைத் தூண்டவும் அவற்றைப் பயன்படுத்தவும் பயன்படுகிறது. இதனால்தான் கணிதத்தை புரிந்துகொள்வது கடினமானால், மற்ற விஞ்ஞானங்களை புரிவதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. மற்ற பாடங்களைப் போன்று கணிதத்தையும் விரும்பி படித்தால் அதனை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். எனவே, சிறுவயது முதலே கணிதத்தை கற்பதும், கற்பிப்பதும் நம் கடமையாகும்.
கணிதம் என்பது விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியதல்ல. அது நம் அனைவருக்கும் அவசியமானது. அன்றாட வாழ்வில் கணிதத்திற்கும் மனிதனுக்குமான தொடர்பு பின்னிப் பிணைந்துள்ளது. அன்றாட கொடுக்கல் வாங்கலில் தொடங்கி, நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களை தேர்வு செய்வது, பட்ஜெட் உருவாக்கம், திட்டப்பணிகள் மேற்கொள்வது வரை கணிதம் பயன்படுவதை காணலாம்.
ஷாப்பிங் செய்கையில், வீட்டை அலங்கரிக்கையில் அல்லது தினசரி வானிலை அறிக்கையைக் கேட்பதில் கணிதத்தை உபயோகிக்கிறோம், அல்லது அவற்றில் இருந்து பயன் அடைகிறோம்.
கணிதம் உப்பு சப்பில்லாதது, அன்றாட வாழ்க்கைக்கு உதவாதது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படியில்லை.
கணிதம் என்பது பொதுவானதொரு மொழியாகும். நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளைச் சற்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது ஏதேனும் ஒன்றில் சிறிதளவாயினும் திறைமைசாலியாகவோ இருப்பதை நாம் காணலாம். ஆனால், பொதுவாக கணிதக் கலையானது அனைவரின் அன்றாட வாழ்விலும் இணை பிரியாததாக உள்ளது. நமது ஒவ்வொரு நகர்விலும் கணிதம் நம்முடன் பயணிக்கிறது.
கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது,
* கூட்டல்
* கழித்தல்
* பெருக்கல்
* வகுத்தல்
இந்த நான்கு தத்துவத்தை விழிப்புடன் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்.
கூட்டல்- நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.
கழித்தல்- கெட்ட செயல்களைத் தவிருங்கள்.
பெருக்கல்- நியாயமான முறையில் பணத்தை ஈட்டுங்கள். இதனால் மனமகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
வகுத்தல்- காலத்திற்கு ஏற்றாற்போல் நேரத்தைத் திட்டமிடுங்கள்.
இந்த நான்கு கணித அடிப்படையின் மூலம் வாழ்க்கையில் சந்திக்கும் வெற்றி தோல்விகளை சமன் செய்யுங்கள். இக்கணித இலக்கணத்தை நல்ல வியூகத்துடன் பயன்படுத்தி வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்னாளாக அமையும்.