பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய அறுவடைத் திருநாள் 'லோஹ்ரி'
அறுவடை சிறப்பாக இருக்கவும், விவசாய செழிப்புக்காகவும் மக்கள் சூரியக் கடவுளையும் நெருப்புக் கடவுளையும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அவ்வகையில், நல்ல விளைச்சலை கொடுத்து சிறப்பான அறுவடைக்கு உதவியாக இருந்த இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு 'அறுவடைத் திருவிழா' ஆகும்.
முக்கிய பயிர்களின் அறுவடைக் காலத்தில் நடைபெறும் இந்த திருவிழாக்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் காலநிலை மற்றும் முதன்மைப் பயிர்களின் அறுவடை சீசனைப் பொருத்து வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகின்றன. நிலத்தில் பாடுபட்டு உழைத்த விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கு துணை நின்ற இயற்கைக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தந்த மாநிலங்களின் பாரம்பரியப்படி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் பிஹு, மகர சங்கராந்தி, லோஹ்ரி என பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
லோஹ்ரி
இதில், லோஹ்ரி என்பது பஞ்சாப் மாநிலத்தில் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான அறுவடை திருவிழாவாகும். லோஹாடி அல்லது லால் லோய் என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. சூரியன் மகர ராசிக்கு மாறும் நாளான மகர சங்கராந்தி தினத்திற்கு முந்தைய இரவு கொண்டாடப்படுகிறது. இது குளிர்காலத்தின் முடிவை குறிக்கிறது.
குளிர்காலத்திற்கு முன்பு விதைக்கப்பட்ட பயிர்கள் நன்றாக அறுவடை செய்யப்படவும், விவசாய செழிப்புக்காகவும் மக்கள் சூரியக் கடவுளையும் நெருப்புக் கடவுளையும் பிரார்த்தனை செய்கிறார்கள். நெருப்புக் கடவுளுக்கு எள், வெல்லம் மற்றும் பாப்கார்ன் ஆகியவற்றை படையலிடுகின்றனர்.
நெருப்பு மூட்டி அதை சுற்றி மக்கள் ஒன்றுகூடி, நாட்டுப்புற இசையின் தாளத்திற்கு ஏற்ப ஆடிப் பாடி மகிழ்கின்றனர். பாரம்பரிய லோஹ்ரி பாடல்களை பாடுவார்கள். பின்னர் லோஹ்ரி பண்டிகை உணவை உண்டு மகிழ்கிறார்கள். குறிப்பாக எள் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகள் லோஹ்ரி உணவில் இடம்பெறும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எள், கரும்பு மற்றும் வெல்லம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
லோஹ்ரி 2025: நெருப்பின் முக்கியத்துவம்
லோஹ்ரி கொண்டாட்டத்தில் நெருப்பு மிக முக்கியமானது. குளிர்கால இரவில் குளிரைப் போக்கி வெதுவெதுப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புறக் கதைகளின்படி, லோஹ்ரியில் ஏற்றப்படும் நெருப்பின் சுடர்கள், பூமிக்கு வெதுவெதுப்பை கொண்டு வந்து பயிர்கள் வளர உதவும் சூரிய கடவுளுக்கு மக்கள் நன்றி தெரிவித்து பிரார்த்தனை செய்வதை குறிக்கிறது.
மக்களின் பிரார்த்தனைகளை ஏற்று சூரிய கடவுள் நிலத்தை ஆசீர்வதித்து, இருள் மற்றும் குளிரின் நாட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். மறுநாள், மக்கள் மகர சங்கராந்தியை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
ஒரு சிலர் நெருப்பு என்பதை பிரகாசமான எதிர்காலத்திற்கான அடையாளமாக குறிப்பிடுகிறார்கள். இதற்காக சூரிய கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றனர். ஒரு சிலர் இதை கொண்டாட்டத்திற்கான அம்சமாக கருதுகின்றனர்.
எப்போது லோஹ்ரி?
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் லோஹ்ரி பண்டிகைக்கான தேதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. ஜனவரி 13-ல் கொண்டாடவேண்டுமா? அல்லது ஜனவரி 14-ல் கொண்டாடவேண்டுமா? என்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, லோஹ்ரி பண்டிகையானது 13.1.2025 திங்கள் கிழமை கொண்டாட அதிகாரப்பூர்வமாக திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, மகர சங்கராந்தி 14.1.2025 செவ்வாய்க்கிழமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் லோஹ்ரி கொண்டாட்ட தினம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மகிழ்ச்சியான பண்டிகை பஞ்சாப் மட்டுமின்றி அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.