தங்கம் கையிருப்பு அதிகம் கொண்ட டாப்-10 நாடுகள்
உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக அந்நாட்டின் நிதி நிலைமை நிச்சயமற்ற நிலையில் இருக்கும்போது அதில் இருந்து மீளவைக்கும் நம்பகமான சேமிப்பு பொருளாக தங்கம் பார்க்கப்படுகிறது. பல நாடுகளின் பொருளாதார நிலைமை தடுமாற்றத்திற்குள்ளாகி இருக்கும் நிலையில் தங்கத்தை கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் உலக நாடுகள் பலவும் போட்டி போட்டு தங்கத்தில் முதலீடு செய்கின்றன. தங்கத்தை அதிக அளவில் கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன. எந்த நாடுகளின் அரசாங்கத்திடம் தங்கம் அதிகம் இருக்கிறது என்பதை பற்றியும், அதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம்.
அமெரிக்கா:
உலகின் வல்லரசு நாடாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா தங்கத்தை கையிருப்பு வைத்திருப்பதிலும் முதன்மையாக திகழ்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்திக்கொள்வதற்காக தங்கத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்து வருகிறது. உலகிலேயே உயர்ந்த அளவாக 8,133.46 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறது. உலக தங்க சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகவும் விளங்குகிறது.
ஜெர்மனி:
இரண்டாவது தங்க கையிருப்பு கொண்ட நாடாக ஜெர்மனி இருக்கிறது. அதன் வசம் 3,352.65 டன் தங்கம் உள்ளது. அமெரிக்காவை போலவே ஜெர்மனியும் தங்க சந்தையில் முக்கிய பங்காளியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
இத்தாலி:
3-வது இடம் வகிக்கும் இத்தாலியிடம் 2,451.84 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. அந்நாட்டின் பொருளாதார வலிமைக்கு அது முக்கிய பங்களிக்கிறது.
பிரான்ஸ்:
2,436.88 டன்களுடன் பிரான்ஸ் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
ரஷியா:
உலகளவில் தங்கம் கையிருப்பில் ஐந்தாவது இடத்தில் ரஷியா இருக்கிறது. 2,332.74 டன் தங்கம் அந்நாட்டு வசம் உள்ளது. தங்கத்தின் மீதான உலகளாவிய ஆர்வத்தை தனது பாதுகாப்பான சொத்தாக மதிப்பிடுகிறது.
சீனா:
உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தன்னை காட்டிக்கொள்ளும் சீனா அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக தங்க இருப்பை கொண்டுள்ளது. உலக அளவில் 6-வது இடம் வகிக்கும் சீனா மொத்தம் 2,191.53 டன் தங்கத்தை சேமிப்பாக வைத்திருக்கிறது.
சுவிட்சர்லாந்து:
1,040.00 டன் தங்கத்தை வைத்திருக்கும் சுவிட்சர்லாந்து, 7-வது நாடாக உலக தங்க சந்தையில் தன்னையும் தவிர்க்க முடியாத சக்தியாக இணைத்துக்கொண்டிருக்கிறது.
ஜப்பான்:
845.97 டன் கையிருப்புடன் 8-ம் இடம் வகிக்கும் ஜப்பான், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கிறது.
இந்தியா:
உலக அளவில் அதிக தங்கம் கையிருப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. 800.78 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. இருப்பினும் இந்தியாவின் தங்க கையிருப்பு மதிப்பு சவுதி அரேபியா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகள் வசம் இருக்கும் தங்க இருப்புகளை விட அதிகம்தான்.
நெதர்லாந்து:
612.45 டன் தங்கத்துடன் முதல் 10 இடங்களுக்குள் நெதர்லாந்து நுழைந்துள்ளது. சர்வதேச தங்க சந்தையில் தன் செல்வாக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.