இன்று சர்வதேச மனித ஒற்றுமை தினம்..!
மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இத்தினத்தின் நோக்கம் ஆகும்.
உலகில் வேற்றுமை நீங்கி ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மனித ஒற்றுமை தினம் (IHSD) கொண்டாடப்படுகிறது.
உலகில் ஆங்காங்கே பிரிவினையால் மனித சமூகம் மோதிக்கொண்டு இன்னுயிரை இழந்து வரும் நிலையில், நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் சின்னமாக இந்த நாள் அமைந்துள்ளது. சர்வதேச மனித ஒற்றுமையின் சக்தியை கொண்டாட அர்ப்பணிக்கப்பட்ட நாள். மக்களிடம் ஒற்றுமை எண்ணத்தை வளர்த்து, ஏற்றத்தாழ்வுகளை குறைத்து வறுமையை ஒழிப்பதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.
வறுமை, பசி மற்றும் நோய்களை சமாளிப்பதற்கான உறுதிமொழிகளுடன் சர்வதேச ஒத்துழைப்பை இந்த நாள் வளர்க்கிறது. மனிதநேயம், மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. வறுமைக்கு எதிரான ஒற்றுமை குறித்த சர்வதேச ஒப்பந்தங்களை அரசாங்கங்களுக்கு நினைவூட்டும் நாளாக இந்த நாள் அமைகிறது.
வரலாறு
சர்வதேச மனித ஒற்றுமை தினமானது விருப்பமான சிந்தனையிலிருந்து பிறந்தது அல்ல. அதன் வேர்கள் 2000 ஆம் ஆண்டு ஐ.நா மில்லினியம் உச்சி மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட மில்லினியம் பிரகடனத்தில் உள்ளன. உலகத் தலைவர்களின் தலைமையில் கொண்டு வரப்பட்ட இந்த மைல்கல் பிரகடனம், 21ஆம் நூற்றாண்டிற்கான சர்வதேச உறவுகளுக்கு இன்றியமையாத அடிப்படை மதிப்புகளில் ஒன்றாக ஒற்றுமையை அங்கீகரித்தது.
உலகமயமாக்கல் வாய்ப்புகளை வழங்கினாலும், அதன் பலன்கள் மற்றும் சுமைகள் சமமாக பகிர்ந்து அளிக்கப்படவில்லை, பலரை பின்தங்க வைத்துள்ளது. எனவே, இந்த பிரகடனம் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறது. 'சமூக நீதியின் அடிப்படை கொள்கைகளுக்கு ஏற்ப செலவுகள் மற்றும் சுமைகளை நியாயமான முறையில் வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படவேண்டும். பாதிக்கப்படுபவர்கள் அல்லது குறைந்தபட்ச பயன் அடைபவர்கள், அதிக பயன் அடைபவர்களிடமிருந்து உதவி பெற தகுதியானவர்கள்' என ஐ.நா. பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின்னர், 2022 டிசம்பர் 20 அன்று, ஐ.நா பொது சபை உலகளாவிய வறுமையை எதிர்கொள்ள உதவும் ஒரு உலக ஒற்றுமை நிதியத்தை அறிமுகப்படுத்தியது. அதன் நோக்கம் வறுமையை ஒழிப்பது மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் தொகையில் ஏழ்மையான பிரிவுகளில் மனித மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதாகும். இது பிப்ரவரி 2003ல் ஐ.நா. வளர்ச்சித் திட்ட அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்பட்டது. உலக ஒற்றுமை நிதியத்தை உருவாக்கிய தினத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 20 ஆம் தேதியை சர்வதேச மனித ஒற்றுமை தினமாக ஐ.நா. அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு 2005ல் வெளியிடப்பட்டது.
முக்கியத்துவம்
ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட இந்த உலகம் ஒருவரையொருவர் உயர்த்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை சார்ந்துள்ளது என்பதை இந்த தினம் ஆண்டுதோறும் நினைவூட்டுகிறது. மேலும், இது தனி நபரின் வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.
எனவே, டிசம்பர் 20ஆம் தேதி ஒற்றுமைக்காக நாம் கைகோர்க்கும்போது, வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், மில்லினியம் பிரகடனத்தால் ஏற்றப்பட்ட ஜோதியை நாம் முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம். அனைவருக்கும் மிகவும் நியாயமான மற்றும் சமமான எதிர்காலத்திற்காக பாடுபடுகிறோம்.
இந்த நாளில், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சியின் இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கான செயல் திட்டங்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் உலக அளவில் பல்வேறு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.