நாளை நடக்கிறது... நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் உயர் படிப்பில் மருத்துவம் படிக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். மருத்துவக்கனவு என்பது நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவர்களின் லட்சியமாகவே உள்ளது. ஆனால் மற்ற படிப்புகளை காட்டிலும் மருத்துவம் பயில கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. முன்பெல்லாம் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப்படிப்பு என்ற நிலை மாறி தற்போது நீட் தேர்வு மூலம் மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
நீட் தேர்வு தேவையில்லை என்ற எதிர்ப்பு குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது கட்டாயம் என்றாகிவிட்ட நிலையில் மாணவ-மாணவிகள் அதற்கு தங்களை தயார் செய்து பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான நீட் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்./பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பிற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வாகும். நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என 680 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 72 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 11 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளன.
20 லட்சத்து 87 ஆயிரம் பேர் விண்ணப்பம்
இந்தாண்டு நீட் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் கடந்த மாதம் 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் இருந்து 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்ைககளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். இந்தாண்டில் 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு சுமார் 1½ லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மட்டும் 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 12 ஆயிரத்து 840 பேர் தேர்வை எதிர்கொண்டனர்.
தமிழகத்தில் எதிர்ப்பு
இந்தாண்டு மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாக பெற்றால் தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் (சி.பி.எஸ்.இ.) இணைந்த பள்ளிகளில் படித்தவர்களுக்கு சாதகமாக உள்ளது என்று தொடர் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. ஏனெனில் நீட் பாடத்திட்டம் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பாடத்திட்டத்தை நடத்தி வருவதால் மாநில பாடத்திட்டம் வழியாக கல்வி பயின்றவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆகவே நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
நாளை தேர்வு
இந்தநிலையில் நீட்-2023 தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் 499 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஒடியா உள்பட 13 மொழிகளில் ஒரே தடவையாக நடக்கிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்குவங்காளம், பீகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். பிற மாநிலங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.
மனதளவில் அழுத்தம்
நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு மாணவர்களுக்கு மனதளவில் அழுத்தம் அதிகமாக இருக்கிறது. இது குறித்த பயம் அனைத்து மாணவர்களுக்கும் இருக்கிறது. ஒரு சில மாணவர்கள் அதை கட்டுப்படுத்தி கொள்வார்கள். ஆனால் சில மாணவர்களால் பயத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இதனாலேயே மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்களை பெற முடியாமல் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.
இந்த தேர்வுக்கு தயாராவதற்கு சிறந்த வழிகளில் ஒன்று முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு பயிற்சி செய்வதன் மூலம் மாணவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அடையாளம் காண உதவும். இது மாணவர்களின் துல்லியத்தையும், வேகத்தையும் மேம்படுத்த உதவுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம்:-
பதற்றம் வேண்டாம்
நீட்தேர்வுக்கு பயிற்சி எடுப்பது என்பது ஓரிரு நாட்கள் மேற்கொண்டது அல்ல. ஆண்டுமுழுவதும் இரவு, பகல் பாராமல் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இவ்வளவு பயிற்சி எடுத்து அதை தேர்வின் போது, சிறப்பாக செயல்படுத்த வேண்டும். தேர்வுக்காக படிப்பதாக கூறி கொண்டு தூங்காமல், சாப்பிடாமல், சோர்ந்து போய் தேர்வு எழுத செல்லக்கூடாது. நன்றாக சாப்பிட்டு, தூங்கி எழுந்து, பதற்றம் இல்லாமல் அமைதியாக தேர்வு எழுத வேண்டும். பல நாட்கள் முயற்சி செய்ததை பயத்தின் காரணமாகவோ, பதற்றத்தின் காரணமாகவோ தேர்வின்போது, மாணவர்கள் கோட்டை விட்டு விடக்கூடாது.
மேலும், நீட் தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் மாணவர்கள் எழுதலாம்.அதனால் சீட் கிடைக்கவில்லையே, மதிப்பெண்கள் குறைந்துவிட்டதே என மனம் உடைந்துவிடக்கூடாது. தற்போது மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் 50 சதவீத மாணவர்கள் இரண்டாவது முயற்சியில் தான் வெற்றி பெற்றார்கள். பெற்றோர்களும் மாணவர்களை பதற்றம் அடைய செய்துவிடக்கூடாது. ஏனென்றால் இந்த தேர்வுக்கு நெகட்டிவ் மதிப்பெண்களும் உண்டு. அதனால் மாணவர்கள் நெருக்கடிக்கு ஆளாகினால் தவறான விடைஅளித்துவிடக்கூடும். அதற்கு வழிவகை செய்துவிடக்கூடாது.
பிறருடன் ஓப்பிடக்கூடாது
திருச்சி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் பேராசிரியர் நிரஞ்சனா தேவி:-
நீட் தேர்வுக்காக மாணவர்கள் தங்களது பல சுய விருப்பங்களை பின்தள்ளிவிட்டு கடினமாக உழைத்துள்ளனர். தேர்வுக்கு முதல்நாள்வரை ஏற்கனவே படித்த பாடங்களை திருப்பி பார்ப்பது நல்லது. இதுவரை படிக்காததை நினைத்து கவலைப்பட்டு குழம்பிக் கொள்ளக்கூடாது. அதுவே மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடும். சரியான உணவு மனதை லேசாக்கும். தியானம், மூச்சுப்பயிற்சியும் மாணவர்களுக்கு பலனளிக்கும். உறக்கத்தின்போது தான் நாம் படித்ததெல்லாம் மனதில் நன்கு பதிவாகி மனதில் நிற்கும். எனவே போதுமான அளவு உறக்கத்தை யாரும் தவிர்க்கக்கூடாது. தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அரவணைப்பாக இருக்க வேண்டும். கடினமான வார்த்தைகளையும், பிறருடன் ஒப்பிட்டு பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த சவாலான தேர்வெழுதும் தங்களது குழந்தைகளுக்கு இந்த உயர்ந்த முயற்சியின் அருமையை புரியவைத்தல் வேண்டும். வெற்றி, தோல்வியை பற்றி வருத்தப்படக்கூடாது. சிறந்த முயற்சியின் அருமையை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். உணர்ச்சி ரீதியாக பயப்பட்டாலோ, வருத்தப்பட்டாலோ கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் தெளிவான மனதுடன் நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன்:-
நீட் தேர்வின் பாதிப்புகளை விளக்கி கூறி, நீட் தேர்வினை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதனிடையே தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது. நீட் தேர்வை எதிர் கொள்ளக்கூடிய மாணவர்கள் எவ்வித பயமும் அச்சமும் இன்றி சிறப்பான முறையில் தேர்வு எழுத வேண்டும். மாணவர்கள் இந்தாண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களை பெறுவது மட்டுமின்றி, பொதுப்பிரிவிலும் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு மே மாதம் 5-ந் தேதி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு முன்னதாக பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வு முடிந்தபிறகு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட அரசு முடிவு செய்திருப்பது வரவேற்புக்குறியது. ஆகவே மாணவ-மாணவிகள் எந்தவித பயமுமின்றி நீட் தேர்வை தன்னம்பிக்கையுடன் சிறப்பாக எழுதி வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நீட் தேர்வை பொறுத்தவரை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல் என பிரிக்கப்பட்டுள்ளது) ஆகிய 3 பாடப்பிரிவுகளில் இருந்தும் 180 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் விருப்பங்கள் அடிப்படையில் இடம் பெற்று இருக்கும். அதில் தேர்வர்கள் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 ஆகும்.
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு முறையை நன்கு அறிந்து இருக்க வேண்டும். நீட் தேர்வு முறையின்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் பதில்களை பால்பாயிண்ட் பேனாவுடன் குறிக்க ஓ.எம்.ஆர். தாள் வழங்கப்படும். எனவே, ஓ.எம்.ஆர். தாளை பற்றியும், அதில் உள்ள பதில்களை எவ்வாறு குறிப்பது என்பது பற்றியும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும்.
நீட் தேர்வு என்றாலே சோதனை கடுமையாக இருக்கும். தேர்வு எந்தவித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்காமல் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என்ற தேசிய தேர்வு முகமையின் நோக்கமே அதற்கு காரணம்.
அதனால்தான் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் காதுகளில் தோடு, மூக்குத்தி, காதுமாட்டி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது. கிளிப் மாட்டக்கூடாது. மாணவர்கள் பெல்ட் அணியக்கூடாது. கைக்கெடிகாரம், கால்குலேட்டர், தொப்பி, ஹெட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதே நடைமுறைகள் இந்த ஆண்டு தேர்விலும் கடைபிடிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 72 மருத்துவக்கல்லூரிகளில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 85 சதவீதம் மாநில இடங்களும், 15 சதவீதம் அகில இந்திய இடங்களும் ஒதுக்கப்படும். அகில இந்திய இடஒதுக்கீடு அடிப்படையில் மொத்தமுள்ள 15 சதவீத இடங்களில் பொதுப்பிரிவினருக்கு 40.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (கிரிமிலேயர் அல்லாதவை (என்சிஎல்) 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதமும், எஸ்.சி.பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இந்த அனைத்து பிரிவுகளிலும் உள்ஒதுக்கீடாக மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் ஒதுக்கப்படும். தமிழ்நாடு இடஒதுக்கீடு அடிப்படையில் மொத்தமுள்ள 85 சதவீத இடங்களில் ஓ.சி. பிரிவினருக்கு 31 சதவீத இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 26.5 சதவீத இடங்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) பிரிவினருக்கு 3.5 சதவீத இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடங்களும், எஸ்.சி. 15 சதவீத இடங்களும், எஸ்.சி. (அருந்ததியர்) பிரிவுக்கு 3 சதவீத இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 1 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.