கொரில்லா: அன்பானவை, புத்திசாலியானவை..!


கொரில்லா: அன்பானவை, புத்திசாலியானவை..!
x

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மனிதனைப் போலவே இன்று நம் கண்முன் இருக்கும் கொரில்லாக்களைப் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை. அதை தெரிந்து கொள்வோம்...

* நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்குச் சமமான பலம் பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாக்களைவிட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.

* கொரில்லாக்கள் மனிதர்களைப் போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களைக் கொண்டிருக்கும். கண்கள் மனிதர்களைப் போல் முன்னோக்கிய பார்வை கொண்டிருக்கும். 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமானவை. கைகளில் உள்ள விரல்களைப் போல் கால்களிலும் இருக்கும். 15 வயதுக்கு மேற்பட்ட வளர்ந்த கொரில்லாக்களின் முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில் மாறிவிடும்.

* கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் குட்டிகள் மிகச் சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயைச் சார்ந்தே வாழும். ஆண் கொரில்லாக்கள் 12-13 வயதிலும், பெண் கொரில்லாக்கள் 11-12 வயதிலும் பருவத்தை எட்டும். கூட்டம் கூட்டமாக வாழும் இவை, இளம் வயது கொரில்லாக்களுக்கு உணவு சேகரிக்கும் முறை, குழந்தைப் பராமரிப்பு, தங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை கற்றுக் கொடுக்கும்.

* கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக்கொள்ளும். மனிதர்களைப் போல் பேச முடியாது, ஆனால், நாம் கற்றுக் கொடுத்தால் செய்கைகளையும் நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.

* கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானவை. அவை நம்மைப் போல எல்லாவிதமான உணர்வுகளையும் (Emotions) பகிர்ந்துகொள்ளும். அதாவது அன்பு, கோபம், அச்சம், மகிழ்ச்சி, பொறாமை, பெருமை, வெட்கம், பெருந்தன்மை மற்றும் கவலை ஆகிய உணர்வுகளைப் பகிரும் தன்மை இவற்றுக்கு உண்டு. கொரில்லாக்கள் நம்மைப் போல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும். ஆனால், அழும்போது கண்ணீர் வராது.

* கொரில்லா குடும்பத்தில் ஒரு பலம் வாய்ந்த ஆண் கொரில்லா, மூன்று அல்லது நான்கு பருவமடைந்த பெண் கொரில்லாக்களும், மற்றும் சில பருவமடையாத பெண் கொரில்லாக்களும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிடச் சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றிக் கொண்டிருக்கும்.

* கொரில்லாக்கள் இரவில் சில மணி நேரமும், மதிய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும். மற்ற நேரங்களில் உணவைத் தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தழை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளைத் தயார் செய்து கொள்ளும். படுக்கைகள் மெத்தை போன்று இருக்கும்.

* கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவை. இவற்றின் முதல் எதிரியே மனிதன்தான். இன்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இவை உணவுக்காக வேட்டையாடப்படுகின்றன. பிற விலங்குகளைப் பிடிக்க இவற்றை இரையாக பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளில் விலங்கியல் பூங்காக்களுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாவுக்காக அதன் முழு குடும்பமும் அழிக்கப்பட்டு விடும். ஏனென்றால், முழு குடும்பமும் அந்தக் குட்டிக்காகப் போராடும் என்பதால்தான்.


Next Story