ஆக்கி உலகின் முடிசூடா மன்னன் தயான் சந்த்...!
இன்று (29-ந்தேதி) இந்திய ஆக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாள்
ஆக்கி உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் மேஜர் தயான் சந்த். இவர் 29.8.1905-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் தயான் சிங். சகோதரர்கள் ரூப் சிங், மூல் சிங். தயான் சந்தின் தந்தை சோமேஷ்வர் சிங் ராணுவத்தில் சுபேதராக பணியாற்றினார். இவர் இந்திய ராணுவத்துக்காக ஆக்கியும் விளையாடி வந்தார். இதனால் தயான் சந்திற்கு ஆக்கி விளையாட்டு நன்கு பரீட்சயமானது.
தயான் சந்த் சிறுவனாக இருக்கும் போது வீட்டின் அருகே நடைபெற்ற ஆக்கி விளையாட்டை தனது தந்தையுடன் பார்க்க சென்றார். ஒரு அணி 2 கோல்கள் பின் தங்கி மிகவும் மோசமாக விளையாடி கொண்டு இருந்தது. அப்போது தயான் சந்த் தனது தந்தையை அந்த அணிக்காக விளையாடி ஜெயிக்க வைக்க கூறினார். இதனை கேட்டு கொண்டிருந்த அணியின் பொறுப்பாளரான ராணுவ அதிகாரி தயான்சந்தை பார்த்து நீ வேண்டுமானால் விளையாடி அந்த அணியை ஜெயிக்க வை பார்க்கலாம் என்று கேலியாக கூறியுள்ளார். இதனை சவாலாக ஏற்றுக்கொண்ட தயான்சந்த் களத்தில் புகுந்து மட்டையை நாலாபுறமும் சுழற்றினார். எதிரணியை கலங்கடித்து 4 கோல்கள் அடித்து தான் விளையாடிய அணியை ஜெயிக்க வைத்தார். அப்போது மைதானமே இந்த சிறுவனின் ஆட்டத்தை வாயை பிளந்து பார்த்தது. இதனால் மெய்சிலிர்த்து போன ராணுவ அதிகாரி அவருக்கு ராணுவத்தில் சிப்பாயாக பணிபுரிய வாய்ப்பளித்தார். ராணுவத்தில் சேர்ந்த பின் மேஜர் போல் திவாரி என்பவரிடம் ஆக்கி விளையாட்டின் அடிப்படையை கற்றுக் கொண்டார். இவரின் அசாத்திய திறமையை பார்த்த பயிற்சியாளர் பங்கஜ் குப்தா ஆக்கி விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். மேலும் இவன் வளர்பிறையை போன்று வளருபவன் என்று கூறி சந்த் என்று புனைபெயர் வைத்தார். சந்த் என்றால் இந்தியில் பிரகாசிக்கும் நிலவு என்று அர்த்தம். இதன் மூலம் தயான் சிங், தயான் சந்த் என்று அழைக்கப்பட்டார்.
ஜீலமில் நடைபெற்ற பஞ்சாப் காலாட்படை போட்டியின் இறுதி ஆட்டத்தில் தயான் சந்த் அணி 2 கோல்கள் பின் தங்கி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. தயான் சந்த் ஆக்ரோஷமாக விளையாடி கடைசி 4 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அன்றில் இருந்து ஆக்கியின் வழிகாட்டி என்று தயான் சந்த் அழைக்கப்பட்டார். 1925-ம் ஆண்டு பஞ்சாப், வங்காளம் உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு இடையே நடந்த ஆக்கி போட்டியில் பங்கேற்ற தயான் சந்த் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவர் இந்திய ஆக்கி அணியில் இடம் பிடித்தார். டான்கக்கேவில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தனி ஆளாக நின்று 10 கோல்களை போட்டு அசத்தினார். மேலும் இந்த தொடரில் இந்திய அணி 192 கோல்கள் அடித்தன. இதில் தயான்சந்த் மட்டும் 100 கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த தொடருக்கு பின் ராணுவத்தில் லான்ஸ்நாயக் பதவியில் அமர வைக்கப்பட்டார். 1928-ம் ஆண்டு நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஆக்கி இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை இந்திய அணி சந்தித்தது.
இதில் 3-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது. இதில் தயான்சந்த்தின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. 1932-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி லால்சா புகாரி தலைமையில் விளையாடியது. இதில் இறுதிப்போட்டியில் அமெரிக்க அணியை 24-1 என்ற கோல் கணக்கில் வென்று இந்திய அணி மீண்டும் தங்கம் பெற்றது. இதன் மூலம் உலக சாதனை படைத்தது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் தயான் சந்த் 8 கோல்களை அடித்திருந்தார். தயான் சந்தின் கோல்களை கண்டு ஆச்சரியமடைந்த அதிகாரிகள் அவர் மீது சந்தேகமடைந்தனர். இதையடுத்து அவரது ஆக்கி மட்டையில் காந்தம் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினர். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. 1936-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லினில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தயான் சந்த் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியுடன் மோதியது. அப்போது இந்திய அணி இடைவேளை வரை 1 கோல் மட்டுமே அடித்திருந்தது. இதன் பின்னர் தனது காலணிகளை கழற்றி வைத்து விளையாடிய தயான் சந்த் இந்திய அணியை 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வைத்து தங்கம் வென்று கொடுத்தார்.
இவரது விளையாட்டு திறனை பார்த்த ஹிட்லர், தயான் சந்திடம் தாங்கள் ஜெர்மன் குடியுரிமையை ஏற்றுக்கொண்டு, ஜெர்மனிக்காக விளையாட வேண்டும். மேலும் ஜெர்மனி ராணுவத்தில் கர்னல் பதவியும் அளிப்பதாக கூறினார். ஆனால் அதை தயான் சந்த் ஏற்கவில்லை. நான் என் நாட்டிற்காக மட்டுமே விளையாடுகிறேன். பணத்திற்காக அல்ல என அவர் கூறியதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன், தயான்சந்த் கிரிக்கெட்டில் ரன்களை குவிப்பதை போல் கோல் அடித்துக் கொண்டிருக்கிறார் என புகழாரம் சூட்டினார். 1949-ம் ஆண்டு ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் தயான் சந்த். ஓய்வுக்கு பிறகு அவர் பாட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் தலைமை ஆக்கி பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 1928, 1932, 1936-ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 3 தங்கங்களை வென்று கொடுத்த தயான் சந்துக்கு மத்திய அரசு மேஜர் பதவி வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இவரது மகன் அசோக்குமார் சிங். இவரும் முன்னாள் ஆக்கி வீரர். 1975-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்த போது 1 கோல் போட்டு இந்திய அணி தங்கம் வெல்ல காரணமாக இருந்தார். இந்தியாவுக்காக விளையாடிய தயான்சந்த் 185 போட்டிகளில் 570 கோல்கள் அடித்துள்ளார். மேலும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் 1,000-க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்துள்ளார்.
தயான் சந்த் சர்வதேச போட்டியில் ஆடிய சமயம், இந்திய ஆக்கியின் பொற்காலம் என்றே குறிப்பிடலாம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தயான் சந்த் 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி இறந்தார். இவரது பெயரில் தான் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. மேலும் தயான் சந்த் நினைவாக அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டு உள்ளது. அவரது பிறந்த நாள் தான் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று தேசிய விளையாட்டு தினம். ஆக்கியில் இந்திய அணிக்கு புகழ் சேர்த்த அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்.