கலைக்கூடமாக மாறிய சிறைச்சாலை
பழங்காலத்தில் நெல்லை சீமையிலே மன்னர்கள் கோட்டை கட்டி வாழ்ந்த இடம் 'பாளையங்கோட்டை'. இங்கு பாண்டிய மன்னர்கள் ஏராளமான கோட்டை கொத்தளங்களுடன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தனர். தொடர்ந்து பாளையக்காரர்கள் கோட்டைகளில் இருந்து ஆட்சி செலுத்தினர். பின்னர் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் கோட்டையை நிர்வாக அலுவலகங்களாகவும், சிறைகளாகவும் மாற்றினர்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தீரமாக போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார். அவருக்கு பக்கபலமாக தம்பிகள் குமாரசாமி என்ற ஊமைத்துரையும், துரைசிங்கமும் இருந்தனர்.
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, மனம் தளராத அவரது தம்பி ஊமைத்துரை மீண்டும் படை திரட்டி ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார். அவரை கைது செய்த ஆங்கிலேயர்கள், பாளையங்கோட்டைக்கு அழைத்து வந்து, நிர்வாக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனர்.
ஊமைத்துரையிடம் ஆங்கிலேயர்கள் விசாரணை மேற்கொண்ட நிர்வாக அலுவலகமானது, சுதந்திரத்துக்கு பின்னர் மேடை போலீ்ஸ் நிலையமாக மாற்றப்பட்டு செயல்பட்டது. ஊமைத்துரையை அடைத்த சிறையானது தற்போது அரசு அருங்காட்சியமாக செயல்பட்டு வருகிறது. இந்த பழங்கால நினைவுச் சின்னங்களை எதிர்கால சந்ததியினரும் அறியும் வகையில், பழமைமாறாமல் புதுப்பித்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முழுவதும் பாறாங்கற்களால் கட்டப்பட்ட அருங்காட்சியக கட்டிடத்தில் பாதாள அறையும் உள்ளது. தற்போது இந்த அருங்காட்சியகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில் சிலைகள், ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் நிர்வாக அலுவலகமாகவும், பின்னர் மேடை போலீஸ் நிலையமாகவும் செயல்பட்ட பழங்கால கோட்டையானது பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது. சுமார் 30 அடி உயர வலுவான கோட்டை கொத்தளத்தின் மீது பழங்கால கட்டிடமும், பசுமை தவழும் மரங்களும் நிறைந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
இந்த பழங்கால கட்டிடத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.6 கோடியில் பழமை மாறாமல் எழில்மிகு கலைநயத்துடன் புதுப்பித்தனர். அங்கு விசாரணை கைதிகளை அடைப்பதற்காக இருந்த சிறைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஓவியங்களும் தீட்டப் பட்டுள்ளன. இந்த பழங்கால கோட்டை கொத்தளத்தின் மீது பசுமையுடன் வளர்ந்து நிற்கும் புளிய மரம், வேப்ப மரங்களைச் சுற்றிலும் இருக்கைகள், அங்கு மிகப்பெரிய திரை அமைத்து நிகழ்ச்சிகளை திரையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அங்கு மக்கள் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் சிறிய அளவிலான கான்கிரீட் கேலரிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் புல்வெளி தரைகளுடன் அலங்கார மின் விளக்குகள் உள்ளிட்ட நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. பழங்கால படிக்கட்டுகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. இது தற்போது பொதுமக்களின் சிறந்த சுற்றுலாத் தலமாகவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறி உள்ளது.