நிலவில் மனிதன் இறங்கி 54 ஆண்டுகள்


நிலவில் மனிதன் இறங்கி 54 ஆண்டுகள்
x

சந்திரனை பற்றி ஆய்வு செய்ய தற்போது இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த முயற்சியில் உலக அளவில் இதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...

1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி... மனிதகுல வரலாற்றில் மறக்க முடியாத நாள்...

இதேநாளில்தான் மனிதன் மகத்தான சாதனை ஒன்றை நிகழ்த்தினான். இந்த மண்ணில் இருந்து இன்னொரு மண்ணுக்கு சென்று அங்கு கால் பதித்தான். ஆம்... மனிதன் சந்திரனில் தரை இறங்கி வருகிற 26-ந்தேதியுடன் 54 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. சந்திரனை பற்றி ஆய்வு செய்ய தற்போது இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்த முயற்சியில் உலக அளவில் இதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்...

நிலா...

கற்பனை குதிரையில் சவாரி செய்யும் கவிஞர்களுக்கு வர்ணனை பொருள்...

குழந்தைகளை உண்ண வைக்க தாய்மார்கள் காட்டும் வேடிக்கை பொருள்...

நச்சரிக்கும் பேரக்குழந்தைகளை சமாளிக்க பாட்டிமார்களுக்கு கைகொடுக்கும் கதைப்பொருள்...

ஆனால் விஞ்ஞானிகளுக்கோ ஓர் ஆராய்ச்சி கோள்...

''அங்கே பாரு பேராண்டி நிலவில் ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள்'' என்று பெரியவர்கள் கதை சொல்லிக்கொண்டிருந்த போது, அமெரிக்கா தனது விஞ்ஞான கரங்களால் சந்திரனை எட்டிப்பிடித்து அங்கு தனது கொடியை நாட்டியது. கதையில்தான் பாட்டியும், வடையும்; மற்றபடி நிலவில் யாரும் இல்லை. அங்குள்ள மலை போன்ற மேடான பகுதிதான், பூமியில் இருந்து பார்க்கும் போது பாட்டி காலை நீட்டி அமர்ந்து இருப்பது போல் தோன்றுகிறது.

பெரிய அண்ணன் அமெரிக்காவுக்கும், சின்ன அண்ணன் ரஷியாவுக்கும் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. பொருளாதாரம், ராணுவம், விஞ்ஞானம், விண்வெளி ஆராய்ச்சி என்று இரு நாடுகளும் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டிருந்தன. விண்வெளி ஆராய்ச்சியை பொறுத்தமட்டில் அப்போது ரஷியாவின் கை சற்று ஓங்கி இருந்தது.

எல்லையற்ற அண்டவெளி மற்றும் பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் முன்னேறிய நாடுகள் தீவிர கவனம் செலுத்தினாலும், அவர்களுடைய முதல் இலக்கு பூமியின் துணைக்கோளான சந்திரனாகத்தான் இருந்தது. நம் மண்ணில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்திரனில் என்னதான் இருக்கிறது? அங்கு மனிதன் செல்ல முடியுமா? சென்றாலும் வசிக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷியாவும் தீவிரமாக ஈடுபட்டன. அப்போது முதன் முதலாக 1957-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி 'ஸ்புட்னிக்-1' என்ற விண்கலத்தை ரஷியா வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது. உலக வரலாற்றில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு பூமியை சுற்றி வந்த முதல் விண்கலம் அதுதான். அதன்பிறகு அதே ஆண்டு நவம்பர் 3-ந் தேதி 'ஸ்புட்னிக்-2' விண்கலத்தில் 'லைகா' என்ற ஒரு நாயை வைத்து விண்ணுக்கு செலுத்தியது. அந்த வகையில், முதன் முதலில் ஓர் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பிய நாடு என்ற சாதனையை ரஷியா நிகழ்த்தியது.

இந்த நிலையில் அமெரிக்கா 1958-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி 'எக்ஸ்புளோரர்-1' என்ற செயற்கை கோளை சில ஆய்வு உபகரணங்களுடன் விண்வெளிக்கு செலுத்தியது. அத்துடன் விண்வெளி ஆராய்ச்சியை துரிதப்படுத்தும் விதமாகவும், ரஷியாவின் போட்டியை சமாளிக்கும் வகையிலும் 1958-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர், தேசிய விமான ஆலோசனை குழுவை கலைத்து விட்டு அதற்கு பதிலாக தேசிய விமான மற்றும் விண்வெளி நிர்வாகம் ('நாசா') என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்.

'நாசா' உருவான சில மாதங்களில் அதாவது 1958-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி 'ஸ்கோர்' என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இதுதான் உலகின் முதல் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும். ஜனாதிபதி ஐசனோவரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அந்த செயற்கைகோளில் வைத்து அனுப்பப்பட்டு இருந்தது. அந்த செய்தி 'ஸ்கோர்' செயற்கை கோள் மூலம் பூமியில் ஒலிபரப்பப்பட்டது. இப்படி செயற்கைகோள் மூலம் ஒலிபரப்பப்பட்ட மனிதனின் முதல் குரல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.இந்த நிலையில், ரஷியா 1959-ம் ஆண்டு 'லூனா-2' என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி அங்கு தரையிறக்கியது. சந்திரனில் இறங்கிய முதல் விண்கலம் இதுதான்.

போட்டி தீவிரம் அடைந்து வந்த நிலையில், ரஷியா, 1962-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி யூரி ககாரின் என்ற விமானப்படை வீரருடன் 'வோஸ்டோக்-1' என்ற விண்கலத்தை செலுத்தியது. யூரி ககாரின் விண்வெளிக்கு சென்று பூமியை ஒரு முறை சுற்றி விட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பினார். அவர் விண்வெளியில் 1 மணி நேரம் 48 நிமிடங்கள் இருந்தார். இதன்மூலம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை ரஷியா பெற்றது. (யூரி ககாரின் பின்னர் 1968-ம் ஆண்டு மார்ச் 27-ல் நடந்த மிக் போர் விமான விபத்தில் உயிரிழந்தார்).

அதன்பிறகு 1966-ல் ரஷியா அனுப்பிய மற்றொரு விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி மாதிரிகளை சேகரித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியது. இப்படி சாதனை மேல் சாதனை படைத்து ரஷியா சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டால் அமெரிக்கா சும்மா இருக்குமா? கவுண்டமணி பாணியில், ''இப்போ ஏதாவது செஞ்சே ஆகணும்டா!''... என்ற முடிவுக்கு வந்த அமெரிக்கா, சந்திரனில் முதன் முதலாக நாங்கள் மனிதனை தரையிறக்குவோம் என்று தடாலடியாக அறிவித்தது. இதைத்தொடர்டந்து, சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியின் முன்னோட்டமாக இரு நாடுகளும் தொடர்ந்து குரங்கு போன்ற விலங்குகளுடன் விண்கலன்களை அனுப்பி சோதனை நடத்திக் கொண்டிருந்தன.

சந்திரனில் முதலில் கால் பதிப்பது யார்? என்ற இந்த 'நீயா-நானா?' போட்டியில் அமெரிக்கா முந்திக்கொண்டு வரலாற்று சாதனை படைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 1968-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி, அமெரிக்கா மனிதர்களை வைத்து அனுப்பிய 'அப்பல்லோ-8' என்ற விண்கலம் சந்திரனுக்கு சென்று அதை சுற்றிவிட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி தரையிறங்கியது. இது அமெரிக்காவுக்கு மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்தது.

இதையடுத்து சந்திரனில் மனிதனை தரை இறங்க வைக்கும் முயற்சியாக 1969-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி நீல் ஆம்ஸ்டிராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கூலின்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்களை 'அப்பல்லோ-11' விண்கலத்தின் மூலம் அமெரிக்கா சந்திரனுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் கொலம்பியா ராக்கெட் (வீரர்கள் தங்கும் பகுதி), தரையிறங்கும் ஈகிள் வாகனம், ஆக்சிஜன், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் சேவை பகுதி என்ற மூன்று பகுதிகளை கொண்டது.

புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட 'அப்பல்லோ-11' விண்கலம் 4 நாட்கள் பயணம் செய்து 20-ந்தேதி சந்திரன் அருகே சுற்றுவட்டப்பாதையை சென்று அடைந்தது. பின்னர் கொலம்பியா ராக்கெட்டில் (கட்டளை கலம்) இருந்து ஈகிள் வாகனம் பிரிந்தது. அதில் ஆம்ஸ்டிராங்கும் ஆல்டிரினும் இருந்தனர். அமெரிக்க நேரப்படி அன்று இரவு சரியாக 8.17 மணிக்கு, சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் தள்ளி ஈகிள் வாகனம் தரையிறங்கியது. வீரர்கள் உடனடியாக அதில் இருந்து வெளியே வராமல் சுமார் 4 மணி நேரம் உள்ளேயே இருந்தனர். அவர்கள் ஓய்வு எடுப்பதற்காகவும், அங்குள்ள சூழ்நிலையை கணிப்பதற்காகவும் இந்த நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த விஞ்ஞானிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்று ஆவலுடன் காத்து இருந்தனர். அந்த 'திக் திக்' நிமிடங்கள் மவுனமாக கரைந்து கொண்டிருந்தன.

சரியாக இரவு 11.43 மணிக்கு ஈகிள் வாகனத்தின் கதவு திறந்து, படிக்கட்டு வெளிப்பட விண்வெளி கவச உடையில் இருந்த ஆம்ஸ்டிராங் அதில் கால் வைத்து மெதுவாக கீழே இறங்கினார். அவர் சந்திரனில் முதலில் எந்த காலை வைப்பார்? என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடைசி படியில் இருந்து அவர் கீழே குதித்து ஒரே சமயத்தில் தனது இரு கால்களையும் தரையில் வைத்தார். அந்த வினாடி, மனித இனத்தின் மகத்தான சாதனையாக அமைந்தது.

ஆம்ஸ்டிராங் தரையில் இறங்கியதும், ''மனிதனின் இந்த ஒரு சிறிய காலடி மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்'' என்று கூறினார். இந்த வாசகம் உலக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வாசகமாக மாறியது. அவர் கால் பதித்த 19 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் இறங்கினார். இருவரும் சந்திரனின் தரையில் நடந்து சென்று அமெரிக்க கொடியை நாட்டினார்கள். பின்னர் கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார்கள். 3-வது வீரரான மைக்கேல் கூலின்ஸ் சந்திரனை சுற்றிக் கொண்டிருந்த கொலம்பியா ராக்கெட்டிலேயே இருந்தார். அவர் சந்திரனில் தரையிறங்கவில்லை.

ஆம்ஸ்டிராங்கும், ஆல்டிரினும் சந்திரனில் இருந்த போது, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ''இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி அழைப்பு'' என்றார். ஏனெனில் ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு துணை கிரகத்துக்கு பேசிய அழைப்பு அல்லவா அது...!

ஆம்ஸ்டிராங் 2.30 மணி நேரமும், ஆல்டிரின் 1 மணி 33 நிமிடமும் சந்திரனின் நிலப்பரப்பில் இருந்தனர். அவர்கள் அங்கும் இங்குமாக நடந்து சென்று அங்குள்ள கல், மண் ஆகியவற்றை சேகரித்தனர். ஈகிள் வாகனம் சந்திரனில் மொத்தம் 21 மணி 36 நிமிடங்கள் இருந்தது. வீரர்கள் அந்த வாகனத்துக்குள் வந்த பிறகு அது கொலம்பியா ராக்கெட்டுடன் இணைவதற்காக கிளம்ப தயாரானது. அப்போது ஈகிள் வாகனத்தின் என்ஜினை இயக்குவதற்கான 'சுவிட்ச்' உடைந்து இருந்ததால். அதை 'ஆன்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் யோசித்த ஆம்ஸ்டிராங் புத்திசாலித்தனமாக, தன்னிடம் இருந்த பேனா முனையால் 'சுவிட்சி'யின் உள்பகுதியை அழுத்தி என்ஜினை இயங்க வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஈகிள் வாகனம் சந்திரனின் நிலப்பரப்பில் இருந்து மேலே கிளம்பிச் சென்று சுற்றிக்கொண்டிருந்த கொலம்பியா ராக்கெட்டுடன் இணைந்தது. வீரர்கள் சந்திரனில் இறங்குவது, நடந்து செல்வது, அவர்கள் தரைக்கட்டுபாட்டு நிலையத்துடன் உரையாடுவது என அந்த நிகழ்ச்சி முழுவதும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மையத்தில் இருந்து தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை உலகம் முழுவதும் 65 கோடி மக்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். அமெரிக்க நகர வீதிகளில் மக்கள் கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். நாடு முழுவதும் உற்சாக வெள்ளம் கரை புரண்டது.

சந்திரனில் இருந்து 3 வீரர்களுடனும் கிளம்பிய அப்பல்லோ-11 விண்கலம் ஜூலை 24-ந்தேதி பூமியை வந்தடைந்தது. வீரர்கள் இருந்த பகுதி அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 கி.மீ. தூரம் தள்ளி விழுந்தது. ஏற்கனவே அந்த பகுதியில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யு.எஸ்.எஸ்.ஹார்னெட் மீட்பு கப்பல் அங்கு விரைந்து சென்று 3 வீரர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தது. பின்னர் 3 பேரும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி 3 வார காலம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். நுண்கிருமிகளின் தாக்கம், உடல்நிலை பாதிப்பு எதுவும் இல்லை என்று உறுதியான பிறகு ஆகஸ்டு 10-ந்தேதிதான் அவர்கள் வெளியே வந்து குடும்பத்தினரையும் மற்றவர்களையும் சந்தித்தனர்.

விண்வெளி வீரர்கள் சந்திரனில் இருந்து கணிசமான கற்களை கொண்டு வந்திருந்தனர். உலக மக்கள் அதை பார்க்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்கா அதில் 270 கற்களை பல்வேறு நாடுகளுக்கும் பரிசாக வழங்கியது. இதில் வேதனை என்னவென்றால் அவற்றில் தற்போது 180 கற்கள்தான் பத்திரமாக இருக்கின்றன. 90 கற்கள் காணாமல் போய்விட்டன.அவை என்ன சாதாரண கற்களா? அபூர்வ கற்கள் ஆயிற்றே?... அதனால் யாரோ சிலர் கைவரிசையை காட்டிவிட்டார்கள். சந்திரனில் முதன்முதலில் கால் பதித்த ஆம்ஸ்டிராங் அமெரிக்க கடற்படை விமானியாக பணியாற்றியவர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

இருதய கோளாறு ஏற்பட்டதால் 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அவருக்கு 'பை-பாஸ்' ஆபரேஷன் நடந்தது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்த போதும், ஆகஸ்டு 25-ந்தேதி தனது 82-வது வயதில் அவர் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு 'தி பஸ்ட்மேன்' என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது. எட்வின் ஆல்டிரின் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். சந்திரனுக்கு சென்று வந்த பின் நாசாவில் இருந்து வெளியேறிய அவர் பழைய கார்களை வாங்கி விற்கும் வேலை செய்து வந்தார். அந்த தொழில் அவருக்கு லாபகரமாக அமையவில்லை. இந்த நிலையில் மதுவுக்கு அடிமையான அவர், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ஒரு முறை கைது செய்யப்பட்டார். பின்னர் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்ட ஆல்டிரினுக்கு தற்போது 93 வயதாகிறது. இவர் தனது வாழ்க்கை வரலாறை 'ரிட்டன் டு எர்த்' என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.

கொலம்பியா ராக்கெட்டில் சந்திரனை சுற்றியபடி, ஆம்ஸ்டிராங்கும், ஆல்டிரினும் நிலவில் தரையிறங்க பெரிதும் உறுதுணையாக இருந்த மைக்கேல் கூலின்சும் விமானப்படையில் பணியாற்றியவர். இவரது பூர்வீகம் இத்தாலி. அங்குள்ள ரோம் நகரில் பிறந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி தனது 90-வது வயதில் காலமானார். சந்திரனில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை ஆராய்வதற்காகத்தான் அங்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அதற்கான வாய்ப்பு அங்கு இல்லை என்று தெரியவந்துள்ளது.

உயிரினங்கள் வாழ காற்றும், நீரும் அவசியம். இந்த இரண்டும் அங்கு கிடையாது. சில இடங்களில் நீர்ப்படிவங்கள் இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ள போதிலும் அது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. மேலும் பூமியை விட சந்திரனின் ஈர்ப்புசக்தி ஆறில் ஒரு பங்குதான். இதனால் அங்கு சாதாரணமாக காலடி எடுத்து வைக்கும் போதுகூட துள்ளுவது போல்தான் இருக்கும்.

சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பிவைப்பதற்கு அதிக செலவு ஆகிறது. செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு ஆய்வுக்கருவிகளுடன் விண்கலங்களை மட்டும் அனுப்புவது என்றால், அவை திரும்பி வரவேண்டிய அவசியம் இல்லை. அங்கிருந்து தகவல்களை மட்டுமே அவை அனுப்பும். ஆயுள்காலம் முடிந்ததும் அவற்றின் செயல்பாடு நின்றுவிடும். ஆனால் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போது, விண்கலம் பூமிக்கு திரும்பி வரவேண்டும். இதனால் எரிபொருள், உணவு, வீரர்களுக்கான வசதி, பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் செலவு மிக அதிகமாக இருக்கும்.சாதாரண இறங்கு வாகனங்களையே சந்திரனில் தரையிறக்கி ஆய்வு செய்ய வாய்ப்பு இருக்கும் போது, அதிகம் செலவழித்து வீரர்களை ஏன் அங்கு அனுப்பி வைக்க வேண்டும்? என்று அமெரிக்கா கருதுகிறது. இதனால்தான் 1972-ம் ஆண்டுக்கு பிறகு சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டவில்லை. மற்ற நாடுகளுக்கும் இதில் பெரிய அக்கறை இல்லை.

என்றாலும், சந்திரனை பற்றி மேலும் ஆராய்வதற்காக 'ஆர்டெமிஸ்' திட்டத்தின் கீழ் ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து நிலவுக்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம், 'நாசா' மீண்டும் மனிதர்களை அனுப்பி வைக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய், வியாழன் கிரகங்களை ஆய்வு செய்வதில் தற்போது தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திரனில் கால் பதிக்க இருக்கிறது.

சந்திரனில் நடந்த 12 அமெரிக்கர்கள்

* ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய 4 நாடுகள் மட்டுமே இதுவரை சந்திரனுக்கு விண்கலன்களை அனுப்பி அங்கு தரையிறக்கி இருக்கின்றன.

* அமெரிக்கா மட்டுமே அங்கு மனிதர்களை தரையிறக்கி சாதனை படைத்து இருக்கிறது. வேறு எந்த நாட்டாலும் இதுவரை அங்கு மனிதர்களை தரையிறக்க முடியவில்லை.

* 1969 முதல் 1972 வரை அமெரிக்கா 7 விண்கலங்களை அனுப்பி வைத்தது. இதில் 6 விண்கலங்கள் அங்கு வெற்றிகரமாக தரையிறங்கின.

* அமெரிக்கா அனுப்பிய 7 விண்கலங்களில் அப்போலோ-13 என்ற விண்கலம் மட்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கு தரையிறங்காமல் பூமிக்கு திரும்பிவிட்டது. அதாவது பயணத்தின் போது விண்கலத்தில் இருந்த ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்துவிட்டதால், அதில் இருந்த வீரர்கள் சந்திரனை சுற்றி விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பிவிட்டனர்.

* சந்திரனில் இதுவரை நீல் ஆம்ஸ்டிராங், ஆல்டிரின் (அப்போலோ-11), பீட் கொன்ராட், ஆலன் பீன் (அப்போலோ-12), ஆலன் ஷெப்பர்டு, எட்கார் மிட்செல் (அப்போலோ-14), டேவிட் ஸ்காட், ஜேம்ஸ் இர்வின் (அப்போலோ-15), ஜான் யங், சார்லஸ் டியூக் (அப்போலோ-16), யூஜின் செர்னான், ஹாரிசன் ஸ்மித் (அப்போலோ-17) ஆகிய 12 அமெரிக்க வீரர்கள் தரையிறங்கி நடந்து இருக்கிறார்கள்.

* இவர்களில் ஆல்டிரின், டேவிட் ஸ்காட், சார்லஸ் டியூக், ஹாரிசன் ஸ்மித் ஆகிய 4 பேர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறார்கள். சார்லஸ் டியூக் தனது பயணத்தின் போது நிலவில் தனது குடும்ப புகைப்படத்தை போட்டு விட்டு வந்தார்.

* சந்திரனில் தரை இறங்கிய ஆம்ஸ்டிராங், ஆல்டிரின் உள்ளிட்ட 12 வீரர்களின் கால் தடங்கள் இன்னும் அங்கு உள்ளன. நிலவில் காற்றோ, மழையோ இல்லாததால் அந்த கால் தடங்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன.

* சந்திரனுக்கு அமெரிக்க வீரர்கள் ஒவ்வொரு முறை சென்ற போதும் தங்கள் நாட்டு கொடியை கொண்டு சென்று நட்டனர். எனவே சந்திரனில் தற்போது 6 அமெரிக்க கொடிகள் உள்ளன.

நிலவில் தடுக்கி விழுந்தவர்கள்

சந்திரனின் ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் அங்கு பூமியின் நடப்பது போன்று சாதாரணமாக நடக்க முடியாது. நிலை தடுமாறும். லேசாக ஓர் அடியை எடுத்து வைத்தாலே கால் முன்னோக்கி வேகமாக செல்லும். இதனால் அங்கு சாதாரணமாக நடப்பதே துள்ளிச்செல்வது போல்தான் இருக்கும். விண்வெளி செல்லும் வீரர்கள் அதற்கான பயிற்சியை எடுத்துவிட்டுத்தான் அங்கு செல்கிறார்கள்.

என்றாலும் சில சமயங்களில் அசம்பாவிதங்கள் நடந்துவிடுவது உண்டு. நிலவில் தரையிறங்கிய வீரர்களில் சிலர் அங்கு நடக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து இருக்கிறார்கள். டேவிட் ஸ்காட் என்ற விண்வெளி வீரர், கேமரா மூலம் சந்திரனின் நிலப்பரப்பை படம் எடுக்கும் போது சிறிய பாறையில் கால் தடுக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார். ஜான் யங் என்ற வீரர் கீழே குனிந்து கல், மணலை சேகரிக்கும் போது குப்புற சாய்ந்து விழுந்தார். இதேபோல் சார்லஸ் டியூக், ஹாரிசன் ஸ்மித் ஆகியோரும் கீழே விழுந்து இருக்கிறார்கள்.

சர்ச்சையும்... விளக்கமும்...

சந்திரனில் அமெரிக்கா மனிதர்களை தரை இறக்கியதை அதன் போட்டியாளரான ரஷியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் ஒரு சிலர் இதை ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் தரை இறங்கவில்லை என்றும், அதுபோன்ற காட்சிகள் பூமியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு படமாக எடுக்கப்பட்டவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆம்ஸ்டிராங் தரையிறங்கும் காட்சி வெளியானதே? அவர் இறங்குவதை படம்பிடிக்க அங்கு யார் இருந்தார்கள்? என்பன போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அதற்கு, வீரர்களை படம் பிடிக்க இறங்கு வாகனமாக ஈகிளின் பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுபோன்ற விவாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு ஒவ்வொன்றுக்கும் விளக்கம் அளித்து நேரத்தை வீணடிக்க அமெரிக்கா விரும்பவில்லை. ''தூங்குபவனை எழுப்ப முடியும்; தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா?'' என்று கருதி இந்த சர்ச்சையில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிட்டது.

இந்தியாவின் சந்திரயான் விண்கலம்

சந்திரனில் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரனை பற்றி ஆராய்வதற்காக முதன் முதலாக சந்திரயான்-1 என்ற ஆளில்லா விண்கலத்தை 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி அனுப்பி வைத்தது. அது 100 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திரனை சுற்றியவாறு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ததோடு புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பி வைத்தது. சந்திரனை நெருங்கியதும் ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் வாகனத்துடன் கூடிய விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. ஆனால் தரையிறங்கும் போது லேண்டரின் வேகம் சீராக இல்லாததால் நிலை தடுமாறி தரையில் மோதி சேதம் அடைந்தது. இதனால் அந்த முயற்சி முழு வெற்றி பெறவில்லை. நிலவின் பயணத்தில் லேண்டரை தரையிறக்குவதுதான் சவாலான பணியாகும். எனவே சந்திரயான்-2 திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டருடன் கூடிய சந்திரயான்-3 விண்கலத்தை எல்.வி.எம்-3 என்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ நேற்று முன்தினம் நிலவுக்கு அனுப்பியது.

எம்.ஜி.ஆர். கதா காலட்சேபம்

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடிப்பில் கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1970-ம் ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி வெளியான படம் 'எங்கள் தங்கம்'. முரசொலி மாறன் கதை-வசனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், அமெரிக்காவைப் போல் இந்தியாவும் சந்திரனுக்கு மனிதனை அனுப்ப முயற்சிப்பது பற்றிய கதா காலட்சேப காட்சி ஒன்று வரும். நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் அமைந்த அந்த காட்சியில் எம்.ஜி.ஆர். மொட்டைத் தலையுடன் பாகவதர் போல் தோன்றி கதா காலட்சேபம் செய்து இருப்பார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


Next Story