வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்


வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 நாடாளுமன்ற தொகுதிகள் அடங்கும். அதில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 39 லட்சத்து 25 ஆயிரத்து 144 வாக்காளர்கள் உள்ளனர்.

அதன்படி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் 35 வேட்பாளா்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 31 வேட்பாளர்களும் களம் காணுகின்றனர். அதற்காக வாக்குப்பதிவு எந்திரம் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர் மட்டுமே பொருத்த முடியும். ஆனால் சென்னையில் வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் வாக்குப்பதிவு எந்திரம் கூடுதலாக தேவைப்படுகிறது. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் என்பதால் 2 வாக்குப்பதிவு எந்திரமும், வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென் சென்னையில் 41 வேட்பாளர்களும் இருப்பதால் தலா 3 வாக்குப்பதிவு எந்திரமும் தேவைப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடி மையங்கள் 944 அமைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு தேவையான 11 ஆயிரத்து 843 வாக்குப்பதிவு எந்திரங்களும், 4 ஆயிரத்து 469 கட்டுப்பாட்டு கருவிகளும், 4 ஆயிரத்து 852 வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கை சோதனை கருவிகளும் (வி.வி.பேட்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை பாதுகாப்பு மையத்தில் இருந்து 16 சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு மையத்திற்கு தேவைக்கேற்ப ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட்டபின், வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தக்கூடிய வாக்காளர் பெயர் மற்றும் சின்னம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி இன்று(புதன்கிழமை) வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதனை தொடர்ந்து, வரும் 18-ந்தேதி மாலை எந்த வாக்குப்பதிவு எந்திரம் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில் கொண்டு செல்லப்படும். வாக்குப்பதிவிற்காக அன்று இரவே வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தை தயார்படுத்துவார்கள். அதன்பின், மறுநாள் அதாவது ஏப்ரல் 19-ந்தேதி காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.


Next Story