நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் சந்தித்தபோது...


நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் சந்தித்தபோது...
x
தினத்தந்தி 5 Jun 2024 3:58 PM IST (Updated: 5 Jun 2024 4:30 PM IST)
t-max-icont-min-icon

நிதீஷ் குமார், ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது, அவர் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்பட்டது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.

இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி ஆகியன தங்களுடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளன.

இதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பீகார் முதல்-மந்திரி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இதேபோன்று முன்னாள் துணை முதல்-மந்திரி மற்றும் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், இந்தியா கூட்டணி சார்பிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று புறப்பட்டு சென்றார். இதில், ஆச்சரியமளிக்கும் வகையில் நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர்.

அப்போது, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். தேஜஸ்வியை பார்த்து நிதீஷ் குமார் புன்னகைக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இருவரும் ஒரே விமானத்தில் 3 அடிக்கும் குறைவான தொலைவில் அமர்ந்து இருந்தனர்.

நிதீஷ் குமார், இதற்கு முன் மகாகட்பந்தன் எனப்படும் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான கூட்டணியில் இடம் பெற்றிருந்தபோது, அவர் முதல்-மந்திரியாகவும், தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியாகவும் பதவி வகித்தனர். இதன்பின் கூட்டணியை முறித்து கொண்டு நிதீஷ் குமார் வெளியேறி, பா.ஜ.க.வுடன் கைகோர்த்து மீண்டும் பீகாரில் ஆட்சியமைத்து உள்ளார்.

பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story