'காங்கிரஸ், சமாஜ்வாடிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது' - யோகி ஆதித்யநாத்


Voting Congress, Samajwadi terrorism Yogi Adityanath
x

காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை படித்துப் பார்த்தால் அவை பாகிஸ்தானுக்கு சார்பாக இருப்பதை உணரலாம். அவர்கள் ஓ.பி.சி., எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவது பற்றி பேசுகிறார்கள். ஆனால் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது என்பதை பிரதமர் மோடி உறுதிபடுத்தியுள்ளார்.

காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிப்பது பயங்கரவாதத்தை மீண்டும் அழைப்பதைப் போன்றது. இந்த கூட்டணி வளர்ச்சிக்கு தடையாக இருக்கக் கூடியது. இவர்கள் மக்களின் பரம்பரை சொத்துக்களை அபகரித்து, அதை ஊடுருவல்காரர்களுக்கும், ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு வழங்கி விடுவார்கள்.

'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்களால் அயோத்தி ராமர் கோவிலையோ, அல்லது காசி விஸ்வநாதர் ஆலயத்தையோ கட்ட முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, கிசான் சம்மான் நிதி உள்ளிட்ட திட்டங்களால் ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர்."

இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


Next Story