பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடக்கம்
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதனால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில் இந்த மந்திரி சபை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.