திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது - பிரதமர் மோடி
திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
கொல்கத்தா,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
42 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தாலும் மாநில அளவில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் பல்ஹர்கட் பகுதியில் இன்று பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், பிரதமருமான மோடி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,
அயோத்தியில் உள்ள வீட்டிற்கு கடவுள் ராமர் திரும்பியதால் இந்த ஆண்டு ராமநவமி கொண்டாட்டம் சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஆனால், கடந்த ஆண்டை போன்றே மேற்குவங்காளத்தில் ராமநவமி கொண்டாடுவதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான நடைபெற்ற குற்றங்களால் நாடே கலங்கியுள்ளது.
ஊழலும், குற்றங்களும் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. ஊழல் வழக்கை விசாரிக்க சென்ற மத்திய விசாரணை அமைப்பினரும் தாக்கப்படுகின்றனர். மேற்குவங்காளத்தை ஊடுருவல்காரர்களுக்கும், குண்டர்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் குத்தகைக்கு விட்டுவிட்டது என்று தோன்றுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஊடுருவல்காரர்களை பாதுகாக்கிறது. ஆனால், அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.