14 ஆயிரம் வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர்.. தீப்பெட்டி என நினைத்து பிஸ்கட் சின்னத்துக்கு ஓட்டுகள் விழுந்ததா..?


14 ஆயிரம் வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர்.. தீப்பெட்டி என நினைத்து பிஸ்கட் சின்னத்துக்கு ஓட்டுகள் விழுந்ததா..?
x
தினத்தந்தி 6 Jun 2024 11:58 PM GMT (Updated: 7 Jun 2024 1:43 AM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 14 ஆயிரம் வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ சுமார் 3 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பைா 2 லட்சத்து 29 ஆயிரத்து 119 வாக்குகளை பெற்று 2-ம் இடத்தை பிடித்தார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகிய வேட்பாளர்களும் தலா ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை பெற்று இருந்தனர். நாம் தமிழர் கட்சி 3-ம் இடமும், அ.ம.மு.க. 4-ம் இடமும் பிடித்தது. அதற்கு அடுத்து ஒரு சில கட்சிகள் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் ஆயிரம், 2 ஆயிரம் என மிக குறைந்த அளவே வாக்குகளை பெற்று இருந்தனர். பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலயா தொண்டு நிறுவன இயக்குனர் தாமோதரன் 5,166 வாக்குகளை பெற்று இருந்தார்.

ஆனால் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட புதுக்கோட்டையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 14 ஆயிரத்து 796 வாக்குகளை பெற்றுள்ளார். முன்னதாக வாக்கு எண்ணிக்கையின்போதே சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார். அதற்கு காரணம், ஒவ்வொரு சுற்றிலும் அவர் 700-க்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார்.

இது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இவருக்கு எப்படி மக்கள் மத்தியில் இத்தனை செல்வாக்கு? என்று வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த முகவர்கள் குழம்பினர். ஏனெனில் துரை வைகோ பெயரை ஒத்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் துரை, அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா பெயரை கொண்ட இன்னொரு சுயேச்சை வேட்பாளரும் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தனர்.

34 வயதுடைய செல்வராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தபிறகு, இவருக்கு தேர்தல் ஆணையம் பிஸ்கட் சின்னம் ஒதுக்கியுள்ளது. அதன்பிறகு இவர் தனக்கு வாக்கு கேட்டு மக்களிடம் எந்தவித பிரசாரமும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், செல்வராஜுக்கு 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் எப்படி கிடைத்தது? என்பதே எல்லோருடைய கேள்வியாக உள்ளது.

செல்வராஜ் போட்டியிட்ட பிஸ்கட் சின்னம் செவ்வக வடிவத்தில், ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ போட்டியிட்ட தீப்பெட்டி சின்னத்தை போன்றே வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சின்ன (சின்னம்) குழப்பத்தில் வாக்காளர்கள் பலர் பிஸ்கட் சின்னத்துக்கு வாக்களித்து இருக்கக்கூடும் என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

மேலும், செல்வராஜுக்கு தான் சார்ந்த புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மட்டுமின்றி திருச்சி கிழக்கு தொகுதியில் 1,788 வாக்குகளும், திருச்சி மேற்கு தொகுதியில் 1,791 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,570 வாக்குகளும், திருவெறும்பூர் தொகுதியில் 2,432 வாக்குகளும், கந்தர்வகோட்டை தொகுதியில் 3,279 வாக்குகளும், புதுக்கோட்டையில் 2,921 வாக்குகளும், 15 தபால் ஓட்டுகளும் என திருச்சி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பரவலாக வாக்குகள் கிடைத்து, மொத்தம் 14 ஆயிரத்து 796 வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்மூலம் 35 பேர் போட்டியிட்ட திருச்சி தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில் நாதனுக்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 5-வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நோட்டாவுக்கு 13,849 வாக்குகள் கிடைத்துள்ளது.


Next Story