ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலை கண்டித்த அமைச்சர் ரோஜா


ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலை கண்டித்த அமைச்சர் ரோஜா
x

ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திரா முழுவதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர்

திருப்பதி.

ஆந்திர மாநிலத்தில் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் பஸ் யாத்திரையின் போது, நேற்றிரவு விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, கூட்டத்தில் இருந்து மர்ம நபர் நடத்திய கல் வீச்சால் அவரது இடது பாகம் நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டது.

பின்னர் பஸ்சில் இருந்த மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். மேலும் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எல்லம்பல்லி ஸ்ரீநிவாஸ் என்பவர் மீதும் கல் வீசப்பட்டது.

ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திரா முழுவதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். பல இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஜெகன் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மீதான தாக்குதலுக்கு அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நகரி தொகுதியின் புத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய அவர், "ஜெகன் ரெட்டியின் பஸ் யாத்திரைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை கண்டு பொறுக்க முடியாமல் சந்திரபாபு நாயுடு செய்த சதியே இந்த தாக்குதலுக்கு காரணம். விஜயவாடாவின் மையப்பகுதியில் சந்திரபாபு நாயுடு தனது மஞ்சள் ரவுடி கும்பலால் ஜெகன்னாவை தாக்கியது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு முதல்-மந்திரியாக பதவியேற்க வேண்டும் என்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அட்டூழியங்கள் இனி முடிவுக்கு வர வேண்டும்" என்று அமைச்சர் ரோஜா கூறினார்.


Next Story