ரக்சா பந்தனுக்கு ஏழை சகோதரிகளுக்கு ரூ.1 லட்சம்- ஆர்.ஜே.டி.யின் தேர்தல் அறிக்கை


ரக்சா பந்தனுக்கு ஏழை சகோதரிகளுக்கு ரூ.1 லட்சம்- ஆர்.ஜே.டி.யின் தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 13 April 2024 3:04 PM IST (Updated: 13 April 2024 5:44 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் என்று ஆர்.கே.டி.யின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்னா,

பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகாரில் ஆர்.ஜே.டி. இந்தியா கூட்டணியில் தேர்தலில் களம் காண்கின்றது. ஒரே கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் பல்வேறு மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் பீகாரில் பிரதான எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி. தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை பீகார் மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியும், கட்சியின் முன்னணி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று வெளியிட்டார். கட்சியின் முன்னணி தலைவர்கள் மத்தியில் 24 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார்.

ஆர்.ஜே.டி. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:-

பீகாரில் சிறந்த போக்குவரத்து இணைப்புக்காக பூர்ணா, பாகல்பூர், முசாபர்பூர், கோபால்கஞ்ச் மற்றும் ரக்ஸால் ஆகிய 5 பகுதிகளில் புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும். பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து பெற்று தருவோம்.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து வேலையின்மை என்ற பிரச்சினையிலிருந்து மக்கள் சுதந்திரம் பெறுவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் 1 கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் வேலை வழங்க துவங்கிவிடுவோம்.

ரக்சா பந்தனை முன்னிட்டு ஏழை குடும்பங்களை சேர்ந்த எங்கள் சகோதரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் வழங்குவோம்.

சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு தருவோம்.

ஆயுதப்படைகளில் ஒப்பந்த வேலை வாய்ப்பு அக்னிவீர் திட்டம் நிறுத்தப்படும்.

பீகார் மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story