தொழிலதிபர் மீது தாக்குதல் - காங்கிரஸ் வேட்பாளர் கைது
தொழிலதிபர் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் வேட்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புவனேஷ்வர்,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்ட தேர்தல் கடந்த 13ம் தேதியும் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து வரும் 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 5ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஒடிசா மாநிலம் டிகப்ஹண்டி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சக சஜித் குமார். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சஜித் குமாருக்கும் சிஹாலா பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சுதன்சு சங்கராம் படே என்பவருக்கும் இடையே தொழில் போட்டி நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், பெர்கம்பூர் அருகே உள்ள குகுதகாண்டி பகுதியில் உள்ள நிலத்தில் சங்கராமின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சஜித் குமாரின் ஆதரவாளர்கள் அந்த தொழிலாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் குறித்து புகார் அளிக்க சங்கராம் தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த காங்கிரஸ் வேட்பாளர் சஜித் குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று சங்கராமை இடைமறித்து தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சங்கராம் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து சங்கராம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காங்கிரஸ் வேட்பாளர் சஜித் குமார் மற்றும் அவரது ஆதரவாளர் அமித் குமார் என 2 பேரை கைது செய்தனர்.