பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம் - ராகுல் காந்தி
பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில்,
"பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
காங்கிரசின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்களாகிய நீங்கள்தான். உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களுக்கு எதிராக தெருக்களிலும், கிராமங்களிலும் எல்லா இடங்களிலும் போராடி வருகிறீர்கள். நீங்கள்தான் பாதுகாவலர்கள். மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.