மோடி-ராகுல் விவாத அழைப்பு; "அவர் பிரதமர் வேட்பாளரா?" - ஸ்மிரிதி இரானி கேள்வி
மோடியுடன் விவாதம் செய்வதற்கு ராகுல் காந்தி ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா? என ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பொது தளத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும், இதில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி அறிவித்தார். இது குறித்து பிரதமர் மோடி தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில், விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதம் செய்ய, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளரா? என அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"ராகுல் காந்தியின் கோட்டை என்று கூறப்படும் ஒரு தொகுதியில், சாதாரண பா.ஜ.க.காரரை எதிர்த்து போட்டியிட அவருக்கு தைரியம் இல்லாதபோது, இவ்வாறு பெருமை பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும். அதோடு, பிரதமர் மோடியுடன் சமமாக அமர்ந்து விவாதம் செய்வதற்கு அவர் 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா?"
இவ்வாறு ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.