உத்தர பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பின்னடைவு
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, உத்தர பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
லக்னோ,
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தற்போதைய நிலவரப்படி உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயக கூட்டணி 35 தொகுதிகளிலும், 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 44 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
அதே சமயம் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது வரை பகுஜன் சமாஜ் கட்சி நாடு முழுவதும் 1.92 சதவிகித வாக்குகளையும், உத்தர பிரதேச மாநிலத்தில் 9.16 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது. கடந்த 2014 மக்களவை தேர்தல் பகுஜன் சமாஜ் கட்சி உத்தர பிரதேசத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பின்னர் 2019 மக்களவை தேர்தலில் எஸ்.பி. மற்றும் ஆர்.ஆர்.ஆர்.டி. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.