வயநாடு மற்றும் திருச்சூர் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
வயநாடு மற்றும் திருச்சூர் தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வயநாடு,
கேரளாவில் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜக. உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கேரளாவில் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. நாளை (5-ந்தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி மனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.
இந்த நிலையில், வயநாடு மற்றும் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் கே.சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் சி.பி.ஐ. தலைவர் ஆனி ராஜா ஆகியோரை கே.சுரேந்திரன் எதிர்கொள்கிறார்.
திருச்சூர் தொகுதியில் வத்தகராவில் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.முரளீதரனையும், சி.பி.ஐ. தலைவர் வி.எஸ்.சுனில் குமாரையும் எதிர்த்து நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அதைபோல பாலக்காடு மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சி கிருஷ்ணகுமாரும் வேட்புமனு தாக்கல் செய்தார்.