நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- சிவகங்கை


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- சிவகங்கை
x

சிவகங்கை தொகுதியில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. வைகை மற்றும் பெரியாறு தண்ணீரும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை.

சிவகங்கை சீமை என்றதும் அதன் வீர வரலாறும், வெள்ளையர்களுக்கு எதிராக இந்த மண் எத்தகைய போர்களை எல்லாம் நடத்தி இருக்கிறது, என்பதும்தான் நம் கண்முன் நிழலாடும். ராணி வீரமங்கை வேலுநாச்சியார், மாமன்னர் மருதுபாண்டியர்கள், வீரத்தாய் குயிலி போன்றோரின் வீரம் எக்காலத்திலும் போற்றத்தக்கது. இவர்கள் சிவகங்கையின் அடையாளங்கள் என்றே கூறலாம்.இதுபோல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுச்சிமிகு போராட்டங்களை இந்த மாவட்ட மக்கள் நடத்தி உள்ளதும் வரலாறு.

தேச சுதந்திரத்துக்குப்பின் அரசியலிலும் சிவகங்கை முக்கிய பங்களிப்பை வழங்கி வந்திருக்கிறது. இனி சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியை பற்றி காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகளை கொண்டது சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி.

பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் இத்தொகுதியில் நிறைந்து உள்ளன. காரைக்குடி கண்டாங்கி பட்டு புவிசார் குறியீடு பெற்றது. விவசாயம் பிரதான தொழில். வைகை கரையோர விவசாயம், கண்மாய் பாசனம், மானாவாரி என மாவட்டம் முழுவதும் ஏராளமான குடும்பங்களுக்கு வாழ்வளிப்பது விவசாயம்தான். மானாமதுரை பகுதிகளில் செய்யப்படும் மண்பாண்டங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

தமிழர்களின் பழம்பெருமை, நாகரிகம், வாழ்வியலை அகழாய்வு மூலம் உலகுக்கு உணர்த்திய கீழடி, மதுரை அருகே இருந்தாலும், அது சிவகங்கை தொகுதியில் அடங்கி இருக்கும் பகுதிதான். ஜல்லிக்கட்டு என்றால் அது மதுரை மாவட்டத்தையும், மஞ்சுவிரட்டு என்றால், சிவகங்கை மாவட்டத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். இப்படி சிவகங்கை தொகுதியில் அடங்கிய சிறப்புகள் எண்ணில் அடங்காதவை.

வெற்றி பெற்றவா்கள் விவரம்

சிவகங்கை மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டு, 1967-ம் ஆண்டில் முதல் தேர்தலை சந்தித்தது. தி.மு.க. வேட்பாளர் தா.கிருட்டிணன் 2,25,106 வாக்குகள் பெற்று வென்றார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் அவரே வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.1977-ல் அ.தி.மு.க. வேட்பாளர் பெரியசாமி தியாகராஜனும், 1980-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வி.சுவாமிநாதனும், 1984-ல் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரமும் வெற்றி பெற்றனர்.

இதில் ப.சிதம்பரம் 1989, 1991-ல் காங்கிரஸ் சார்பிலும், 1996, 1998-ல் த.மா.கா. சார்பிலும் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ப.சிதம்பரம் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி பெற்றார். 2019-ல் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வென்றார்.

காவிரி, வைகை, குண்டாறு

சிவகங்கை தொகுதியில் பெரும்பாலான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. வைகை மற்றும் பெரியாறு தண்ணீரும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி விவசாயிகளிடையே வலுத்து நிற்கிறது. பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.சிவகங்கை தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால் இந்த பகுதியினர் வேலைவாய்ப்புக்காக சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் நிலைதான் உள்ளது.

சிவகங்கை பகுதியில் கிராபைட் தாது கிடைப்பதால் அது சம்பந்தமான தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதுபற்றி தேர்தலின்போது மட்டுமே பேசப்படுகிறது.

காளையார்கோவிலில் உள்ள தேசிய நுாற்பாலையை மீண்டும் இயக்க நடவடிக்க எடுக்க வேண்டும், ராமேசுவரத்தில் இருந்து சிவகங்கை வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும், சிவகங்கையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க வேண்டும்,தொண்டி துறைமுகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், சிவகங்கை மாவட்டம் வழியாக மதுரை-தொண்டி இடையே ரெயில் பாதை திட்டம் தொடங்க வேண்டும், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும், மானாமதுரை சிப்காட்டை சீரமைக்க வேண்டும், திருப்பத்தூர், ஆலங்குடி, திருமயம் பகுதிகளில் தொழில்கள் வரவேண்டும். விவசாயத்திற்கு சீரான மும்முனை மின்வினியோகம் வேண்டும் உள்ளிட்டவை இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகள்.

வெற்றி யார் கையில்?

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், யாதவர், நகரத்தார், வல்லம்பர், முத்தரையர், நாடார், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர். இத்தொகுதியில் இதுவரை 14 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 8 முறையும், த.மா.கா. 2 முறையும், தி.மு.க. 2 முறையும் அ.தி.மு.க. 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.இதில் அதிகபட்சமாக 7 முறை ப.சிதம்பரம் எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் மத்திய மந்திரி சபையில் நிதித்துறை இணை மந்திரியாக இருந்தார். பின்னர் கேபினட் மந்திரியாக உயர்ந்தார். மத்திய உள்துறை மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் எம்.பி.யாக தற்போது ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே களம் இறங்கி உள்ளார்.அ.தி.மு.க. சார்பில் பணங்குடி சேவியர் தாஸ் போட்டியிடுகிறார். பா.ஜனதா கூட்டணி சார்பில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவ், நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இந்த 4 கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இதுதவிர சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்களும், அவர்களது கூட்டணி கட்சியினரும் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரிக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்கிறார்கள். யாருடைய வாக்குறுதி எடுபட்டுள்ளது, வாகை சூடப்போவது யார்? என்பது, வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும்.


Next Story