மக்களவை தேர்தல்: வீட்டில் இருந்து வாக்கு செலுத்திய அத்வானி, மன்மோகன் சிங்
மன்மோகன் சிங், அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தங்கள் வாக்கை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதன்படி டெல்லியில் மொத்தம் 5,046 பேர் வீட்டில் இருந்து வாக்கு செலுத்துவதற்கான 12-டி விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து டெல்லியில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளில் இருந்து வாக்கு செலுத்தும் நடைமுறை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இதன்படி முதல் நாளில் 1,482 பேர் வீட்டில் இருந்தபடி தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து நேற்றைய தினம் 2-வது நாளின் முடிவில் மொத்தம் 2,956 பேர் வீட்டில் இருந்தபடி தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றயிருந்தனர்.
அந்த வகையில் முன்னாள் துணை ஜனாதிபதி முகமது ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி மற்றும் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி ஆகியோர் வீட்டில் இருந்தபடி தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் வீட்டில் இருந்து வாக்கு செலுத்துவதற்கான நடைமுறை வரும் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.